
பெர்லிஸ், கங்கார் புக்கிட் லாகியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்ட சம்பவம் பல தீவிரமான அரசியல் மற்றும் நிர்வாகக் கேள்விகளை எழுப்பியுள்ளது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
தேசியக் கூட்டணி தலைமையிலான பெர்லிஸ் மாநில அரசு, பேச்சுவார்த்தை மற்றும் சமரசத் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக ஏன் ஆலயத்தை இடிக்கும் நடவடிக்கையைத் தேர்ந்தெடுத்தது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை என்று யாரும் கூறவில்லை. சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும். ஆனால், மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும்போது அரசு நேர்மை, உணர்வுபூர்வமான அணுகுமுறை மற்றும் இரக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, ஆலயம் இடிக்கப்படாது என்று மந்திரி பெசார் முன்னதாக உறுதியளித்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த உறுதிமொழி ஏன் மதிக்கப்படவில்லை என்றும் குணராஜ் கேள்வி எழுப்பினார்.
மேலும், மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படுவது போன்று, இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் அமலாக்க நடவடிக்கைக்கு முன்பு ஏன் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் அவர் வினவினார்.
மலேசிய இந்து சங்கம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இந்து அமைப்புகளுக்கு முறையாகத் தகவல் வழங்கி, மாநில அரசுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏன் வழங்கப்படவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“இது வெறும் நிலம் அல்லது திட்டமிடல் விதிமுறைகள் தொடர்பான விவகாரம் மட்டுமல்ல. இது நம்பிக்கை, கலந்தாலோசனை மற்றும் பொறுப்பான நிர்வாகம் தொடர்பான கேள்வியாகும்,” என்று குணராஜ் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பெர்லிஸ் அரசு, இடிப்பு ஏன் அவசியமானது, மாற்றுத் தீர்வு ஏன் முன்னெடுக்கப்படவில்லை, மந்திரி பெசார் அளித்ததாகக் கூறப்படும் உறுதிமொழி ஏன் நிறைவேற்றப்படவில்லை, சம்பந்தப்பட்ட மத அமைப்புகளுடன் ஏன் கலந்தாலோசிக்கப்படவில்லை, இறுதியாக இடிப்பு நடவடிக்கையைத் தொடர முடிவு செய்தது யார் என்பதற்கு தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மற்றும் தீர்வு காணும் அணுகுமுறையின் மூலம் கையாள முயன்று வருவதாகவும் குணராஜ் குறிப்பிட்டார்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தேசியக் கூட்டணி தலைமையிலான பெர்லிஸ் மாநில அரசு மக்களுக்கு நேரடியாகவும் வெளிப்படையாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று டாக்டர் குணராஜ் வலியுறுத்தினார்.



