27.6 C
Kuala Lumpur
Tuesday, August 25, 2026

Vetri

சுக்மா 2026: ஒட்டுமொத்த சாம்பியனான சிலாங்கூர்; செப்டம்பர் 1 சிறப்பு விடுமுறை அறிவிப்பு

🔥 Views : 1,118
👁 Reading Now : 47

2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (SUKMA) சிலாங்கூர் ஒட்டுமொத்த சாம்பியனாக மகுடம் சூடியதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ஆம் தேதியை சிலாங்கூர் மாநிலத்திற்கான சிறப்பு விடுமுறையாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் அணியின் இந்த மாபெரும் வெற்றிக்குப் பங்களித்த விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“சுக்மா போட்டிகள் முழுவதும் பங்களித்த ஒவ்வொரு விளையாட்டு வீரர், அதிகாரி, தன்னார்வலர் மற்றும் பெற்றோருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 1ஆம் தேதியை சிலாங்கூர் மக்களுக்கான சிறப்பு விடுமுறையாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று சுக்மா நிறைவு விழாவில் அமிரூடின் கூறினார்.

இந்த நிறைவு விழாவில் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுடின் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு சுக்மா போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிலாங்கூர் அணி, 101 தங்கம், 73 வெள்ளி மற்றும் 71 வெண்கலம் என மொத்தம் 245 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து கூட்டரசுப் பிரதேச அணி 51 தங்கம், 54 வெள்ளி மற்றும் 51 வெண்கலப் பதக்கங்களுடன் அடுத்த இடத்தைப் பிடித்தது.

சுக்மா என்பது வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல என்று குறிப்பிட்ட அமிரூடின், பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் ஒன்றிணைந்து தங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுடன் புதிய நட்புறவுகளை உருவாக்குவதற்கான முக்கிய தளமாகவும் இப்போட்டிகள் விளங்குவதாகத் தெரிவித்தார்.

சிலாங்கூரின் இந்த வெற்றி மாநிலத்தின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியையும், இளம் விளையாட்டு வீரர்களின் திறமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles