
மஇகா தேசிய மட்டத்திலும் தமிழ் ஊடக வட்டாரத்திலும் நன்கு அறிமுகமான எல். சிவசுப்பிரமணியம், மலாக்கா மாநில ஆளுநரால் ‘டத்தோ’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் மற்றும் பொதுச் சேவையில் நீண்டகாலமாகப் பயணித்து வரும் சிவசுப்பிரமணியத்தின் சேவை மற்றும் பங்களிப்புக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக இந்தப் பட்டம் கருதப்படுகிறது.
மஇகா தலைமையுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி வரும் அவர், தற்போது மஇகா தேசிய ஊடகப் பிரிவு செயலாளராகவும், மத்திய செயலவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில், அவருடைய தனிச் செயலாளராகவும் சிவசுப்பிரமணியம் பணியாற்றியுள்ளார்.
அதேபோன்று, விக்னேஸ்வரன் தெற்காசிய கட்டுமானத் தூதராகப் பணியாற்றிய காலத்திலும் அவரிடம் சிறப்புச் செயலாளராக சிவசுப்பிரமணியம் கடமையாற்றியுள்ளார்.
அரசியல் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுசார் அமைப்புகள் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து பொதுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் சிவசுப்பிரமணியம், தமக்கு வழங்கப்பட்டுள்ள ‘டத்தோ’ பட்டத்தை தனது அரசியல் மற்றும் பொதுச் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
இந்த அங்கீகாரம் தனது அரசியல் மற்றும் பொதுவாழ்வுப் பயணத்தை மேலும் உற்சாகத்துடன் தொடர ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தச் சிறப்பைப் பெறுவதற்குத் துணை நின்ற மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் உள்ளிட்ட மஇகா தேசியத் தலைமைக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மலாக்கா ஆளுநர் மாளிகையில் ‘டத்தோ’ பட்டத்தைப் பெற்ற பின்னர் தனது நன்றியைத் தெரிவித்த சிவசுப்பிரமணியம், இந்த அங்கீகாரம் எதிர்காலத்தில் மேலும் அர்ப்பணிப்புடன் மக்கள் மற்றும் சமூகத்திற்குப் பணியாற்றுவதற்கான பொறுப்பையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.



