
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி (PH) மற்றும் தேசிய முன்னணி (BN) இடையிலான சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிப்பதற்காக, நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேற்று சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு நடைபெற்றதை நம்பிக்கை கூட்டணியின் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபஹ்மி ஃபட்சில் உறுதிப்படுத்தினார்.
எனினும், சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் தமக்கு வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
“அவர்கள் நேற்று ஒரு சந்திப்பை நடத்தியதாக நான் அறிகிறேன். ஆனால், அதில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து எனக்கு விளக்கப்படவில்லை,” என்று ஃபஹ்மி புத்ராஜயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அடுத்த ஓரிரு நாட்களில் நம்பிக்கை கூட்டணியின் தலைமைத்துவ மட்டத்தில் பல்வேறு கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியுடனான ஒத்துழைப்பு அந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து தமக்கு இதுவரை தகவல் இல்லை என்றும் ஃபஹ்மி கூறினார்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை, மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் தேசிய முன்னணியுடன் சாத்தியமான தேர்தல் ஒத்துழைப்பு குறித்து நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் குழு விவாதிக்கும் என்று அன்வார் தெரிவித்திருந்தார்.
இதனால் மலாக்கா மாநிலத் தேர்தலில் PH–BN தேர்தல் ஒத்துழைப்பு எவ்வாறு அமையும் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.



