29.6 C
Kuala Lumpur
Tuesday, August 25, 2026

Vetri

தென் தாய்லாந்தில் அடுத்தடுத்து 5 குண்டுவெடிப்புகள்; பாதுகாப்பு நிலைமை பதற்றம்

🔥 Views : 1,488
👁 Reading Now : 54

நராதிவாட் மற்றும் பட்டானி மாகாணங்களில் மூன்று பகுதிகளில் மேலும் ஐந்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து, தென் தாய்லாந்தில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தின் மண்டலம் 4 செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததன்படி, காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான சுமார் 13 மணி நேரத்திற்குள் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், உயிரிழப்புகளோ காயங்களோ பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சம்பவம் காலை 8.30 மணியளவில் பட்டானியின் யாரிங் மாவட்டம், பாங் பூ பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காலை 9.50 மணியளவில் நராதிவாட், சுங்கை பாடி மாவட்டத்தின் ரிகோ மற்றும் சுங்கை பாடி பகுதிகளில் இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

அதே காலப்பகுதியில் நராதிவாட்டின் ரங்கே மாவட்டம், மருபோ டோக் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திலும் வெடிப்பு ஏற்பட்டதாக பாதுகாப்பு ரோந்துப் படையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இரவு சுமார் 9.10 மணியளவில் பட்டானியின் பனாரே மாவட்டத்தில் உள்ள ஃபோ மிங் துணை மாவட்ட நகராட்சி அலுவலகம் தாக்கப்பட்டது.

தானியங்கி ஆயுதங்களுடன் வந்ததாகக் கூறப்படும் 10க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய நபர்கள், நகராட்சி அலுவலகத்தின் வாகனக் கொட்டகையைத் தாக்கி வெடிவைத்துத் தகர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அலுவலகக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்திற்குத் தீ வைத்ததுடன், மூன்று அரசு வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு அந்தக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, தென் தாய்லாந்தின் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles