
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மன்னிப்புக் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்க கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் இன்று மீண்டும் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற 63ஆவது கூட்டத்தில் நஜிப்பின் மன்னிப்புக் கோரிக்கை எதிர்கால மன்னிப்பு வாரியக் கூட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஒரு வாரத்துக்குள் மீண்டும் கூட்டம் நடைபெறுவது கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள கூட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை. நேற்று வெளியான தகவலின்படி, செப்டம்பர் 18ஆம் தேதி கூட்டம் நடைபெறலாம் என்ற தகவல் பரவியிருந்தாலும், சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் இருந்து அதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை.
முந்தைய கூட்டத்தில் நஜிப்பின் விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம், நஜிப்பின் மன்னிப்புக் கோரிக்கையை எதிர்கால மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் பரிசீலிக்க ஒத்திவைக்க ஒப்புதல் அளித்திருந்தார்.
அதேவேளை, நஜிப்பின் மன்னிப்புக் கோரிக்கை ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று PAS பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான் கோரியிருந்தார்.
இதற்கிடையில், கூட்டரசுப் பிரதேசங்களுக்கான அமைச்சர் ஹன்னா யோ கூறுகையில், மன்னிப்பு தொடர்பான அதிகாரமும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரமும் அரசியலமைப்புச் சட்டத்தின் 42ஆவது பிரிவின்படி யாங் டி-பெர்துவான் அகோங்கிடம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
நஜிப், SRC International நிறுவனத்துக்கு சொந்தமான RM42 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் RM210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டார். பின்னர் 2024ஆம் ஆண்டு மன்னிப்பு வாரியத்தின் முடிவின் மூலம் அவரது சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகவும், அபராதம் RM50 மில்லியனாகவும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மன்னிப்பு வாரியம் உண்மையில் கூடுகிறதா, அவ்வாறு கூடினால் நஜிப்பின் மன்னிப்புக் கோரிக்கை குறித்து என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதே தற்போது கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக உள்ளது.



