27.6 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

மாதம் 800 யூனிட் வரை மின்சாரக் கட்டணப் பாதுகாப்பு – மடானி அரசாங்கம் புதிய நடவடிக்கை!

🔥 Views : 2,006
👁 Reading Now : 68

மக்களின் தற்போதைய வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைச் சமாளிக்கும் வகையில், வீட்டு மின்சாரப் பயன்பாட்டுக்கான மானியப் பாதுகாப்பு வரம்பை மாதத்திற்கு 600 கிலோவாட்-மணியிலிருந்து 800 கிலோவாட்-மணியாக விரிவுபடுத்த மடானி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளதன்படி, இந்த நடவடிக்கை 2026 செப்டம்பர் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் மின்சாரப் பயன்பாட்டுக்கு பொருந்தும்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் தற்போது நிலவும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில் உடனடி நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

இதன் மூலம், மாதத்திற்கு 800 கிலோவாட்-மணி வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு, தானியங்கி எரிபொருள் செலவு சரிசெய்தல், சில்லறைக் கட்டணங்கள் மற்றும் விற்பனை, சேவை வரி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான தகவலை பிரதமர் இன்று மாலை தனது முகநூல் பதிவில் வெளியிட்டார்.

இதற்கு முன்னதாக, பிரதமர் அலுவலகத்தில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிரதமர் அன்வார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எரிசக்தி ஆணையம், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு (PETRA), தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மக்களின் வாழ்க்கைச் செலவு மற்றும் மின்சாரக் கட்டண அழுத்தங்களை கருத்தில் கொண்டு, இந்த பாதுகாப்பு நடவடிக்கை குறுகிய காலத்திற்கு அமல்படுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles