
சிறார்களின் இசை மற்றும் பாடல் திறமைகளை வெளிக்கொணர அவர்களுக்கு சிறந்த மேடையை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் சிலாங்கூர் மாநில பாடல் திறன் போட்டி நடத்தப்படுவதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் கலைஞர்கள் மன்றம், கிள்ளான் வின்வெளி கலை மன்றம் மற்றும் சிலாங்கூர் பாரம்பரிய இசை வாத்திய சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் இப்போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியின் தொடக்கச் சுற்றுகள் வரும் அக்டோபர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, அரையிறுதிச் சுற்று அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதன் பிரமாண்ட இறுதிச் சுற்று வரும் அக்டோபர் 31ஆம் தேதி, புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சிறார்கள் இசை மற்றும் பாடல் துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டும் என்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, இத்துறைகளில் சிறார்களை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது போட்டியின் நோக்கமாக உள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் சிறார்களுக்கு RM15,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சுமார் 165 போட்டியாளர்கள் கலந்து கொண்டதாகவும், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள சிறார்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
எனவே, இசை மற்றும் பாடல் துறையில் ஆர்வமுள்ள சிறார்கள் போட்டியில் கலந்து கொள்ள விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டார்.
பதிவுக்கான இறுதி நாள்: அக்டோபர் 8
தொடர்புக்கு:
தீனா – 011-39139589
மேரி – 012-2823002



