
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதற்கு தானே வழிவகுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
ஒவ்வொரு கைதிக்கும் பொதுமன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்காக பொதுமன்னிப்பு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் உரிமை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கூட்டரசு அரசாங்க மட்டத்தில், பிரதமரும் தலைமை வழக்கறிஞரும் வழங்கும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, பொதுமன்னிப்பு விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் அதிகாரம் மன்னிப்பு வாரியத்திற்கு இருப்பதாகவும், இறுதி முடிவு மாமன்னரிடம் இருப்பதாகவும் அன்வார் கூறினார்.
“ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு என்று நான் கூறியுள்ளேன். மாமன்னரின் தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் பரிசீலனைக்காக தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் உரிமை டத்தோஸ்ரீ நஜிப்புக்கும் உள்ளது. அந்த உரிமையை நான் இப்போதும் ஆதரிக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நஜிப்பின் பொதுமன்னிப்பு விவகாரம் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் நடவடிக்கை என்று கூறும் முன்னாள் அரசியல் நண்பர்களிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் வெளியாகி வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
“பிரதமராக நான் கடுமையாகப் பேச விரும்பவில்லை. நான் விமர்சிக்கலாம். ஆனால் அது சரியல்ல. அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே எனது நிலைப்பாடு தெரியும். நீங்கள் வாக்குகளைப் பெற விரும்பினால், அது ஏமாற்றுவதன் மூலம் இருக்கக்கூடாது,” என்றார்.
நஜிப்பின் பொதுமன்னிப்புக்கு தானே வழிவகுத்ததாக பலர் கூறுவது சரியானது அல்ல என்றும் அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.



