
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் லங்காக் டூத்தா இல்லத்திற்கு வெளியே, நாளை காலை 7 மணி முதல் நடமாடும் போலீஸ் நிலையம் ஒன்று நிறுவப்படவுள்ளது.
காஜாங் சிறையிலிருந்து நஜிப் வீட்டுக் காவலுக்கு மாற்றப்படும் சூழ்நிலையில், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களின் வருகையால் ஏற்படக்கூடிய கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ACP அனுவார் பக்ரி அப்துல் சலாம் தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் போலீஸ் நிலையம் 24 மணி நேர பாதுகாப்புப் பணிக்காக அமைக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான கண்காணிப்பு மற்றும் நிர்வாக விவகாரங்கள் மலேசிய சிறைத்துறையின் அதிகார வரம்பிற்குள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், SRC International வழக்கில் எஞ்சியுள்ள சிறைத் தண்டனையை 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க நஜிப்புக்கு அண்மையில் நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், RM50 மில்லியன் அபராதத் தொகையைச் செலுத்தும் பட்சத்தில், நஜிப் எந்நேரத்திலும் வீட்டுக் காவலுக்கு மாற்றப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



