
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு தொடர்பாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எடுத்த முடிவை எதிர்ப்பது, கூட்டாட்சி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு முரணானதாகும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட மன்னிப்பு வாரியத்தின் முடிவு, அந்த முடிவுக்கு வழிகாட்டிய சட்ட விதிகளுக்கு உட்பட்டே எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட மன்னிப்பு வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவு, மலேசிய கூட்டாட்சி அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளால் கட்டுப்படுத்தப்பட்டதாகும். மேலும், மன்னிப்பு தொடர்பான முடிவுக்கு சட்ட அம்சங்கள் வழிகாட்டியாக இருந்ததையும் மாமன்னர் கருத்தில் கொண்டிருந்தார்,” என்று ஜாஹித் தெரிவித்தார்.
எனவே, மாமன்னரின் முடிவை எந்தவொரு தரப்பும் எதிர்ப்பதாக இருந்தால், அது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்காத நிலைப்பாடாக அமையும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு செயல்படுவதில் அம்னோ மற்றும் தேசிய முன்னணி (BN) உறுதியாக உள்ளதாகவும் ஜாஹித் தெரிவித்தார்.
“நான் இதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கைகளில் கூறியதைப் போலவே, எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.



