26.9 C
Kuala Lumpur
Monday, July 27, 2026

Vetri

அரண்மனையை மையம் கொண்டுள்ள அரசியல் புயல்; இன்னும எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?

🔥 Views : 24
👁 Reading Now : 59

ஆழ்கடல் அமைதியாகத் தோன்றினாலும் அதற்கடியில் நீரோட்டம் வேகமாகத்தான் இருக்கும். அதைப்போல கடந்த 24 மணி நேரத்தில் அரண்மனை அமைதியாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் என்னவோ பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல்தான் இருக்கிறது.

நேற்றைப் பொழுதைப் போல அரண்மனை வாயிலருகே ஊடககத்தினரும் காவல்துறையினரும் இன்று தென்படவில்லையேத் தவிர, நாட்டின் 9-ஆவது பிரதமர் யார் என்பதை நிர்ணயிப்பதிலும் அடுத்தப் பொதுத் தேர்தல்வரை சுமார் 20 மாதங்களுக்கு நாட்டில் சலசலப்பில்லாமல் அரசியல் போக்கு அமைய வேண்டுமே என்பதிலும் மாட்சிமைக்குரிய மாமன்னர் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

காரணம், கடந்த 17 மாதங்களாக தேசியக் கூட்டணி கடந்து சென்ற பாதை நெடுகிலும் முறுகல் நிலையும் அரசியல் தகிடுதத்தங்களும் ஒன்றையொன்று முந்திச் சென்றனவேத் தவிர மக்கள் எதிர்கொண்டது என்னவோ சலிப்பும் அளுப்பும்தான்.

அதனால், இந்த முறை அந்த மாதிரி நிகழ்ந்துவிடாமல், அரசியலில் அமைதியும் நாட்டில் நிலைத்தன்மையும் நிலவ வேண்டுமே என்பதில் மாமன்னர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதற்கான அச்சாரமாகத்தான், நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒன்றாகக் கூட்டி ஒருசேர நடத்திய கூட்டம் அமைந்தது.

மலேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாட்சிமைக்குரிய மாமன்னரை சந்தித்து மாலையில் விடைபெற்ற பின், இரவோடு இரவாக அனைத்துக் கட்சிகளும் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி கூட்டம் நடத்தினர்.

நேற்று மாலை 4:00 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்தது என்றால், இன்று மாலை அதே 4:00 மணி அளவில், 220 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த பிரதமராக தாங்கள் யாரை தெரிவு செய்திருக்கிறோம் என்ற உறுதிப் பத்திரத்திரத்தை அரண்மனைக்கு அனுப்பி விட்டனர்.

காணொளி செய்தி

இதன் அடிப்படையில் அடுத்த பிரதமர் யார் என்பதை அரண்மனை அநேகமாக திர்மானித்திருக்கும். இதனை முன்னிட்டுத்தான் அனைத்துக் கட்சிகளும் தத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று பொழுது சாய்ந்த வேளையில் பாடம் நடத்தின. நாட்டின் அடுத்த அரசியல் விடியலுக்கான முடிவு இதில் அடங்கி இருக்கிறது என்பதால், பாலர் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதைப் போல திரும்பத் திரும்ப யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதைப் பற்றி வலியுறுத்தப்பட்டது.

ஆனால், பெரும்பாலான நாடளுமன்ற உறுப்பினர்கள் கட்டுமீறும் காளைகளைப் போல, தங்கள் கட்சித் தலைமையை மீறியவர்களாகத்தான் செயல்படுகின்றனர் என்பதை இந்த 14-ஆவது நாடாளுமன்றம் கண்டு வருகிறது.

முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு அம்னோ சார்பில் 38, பெர்சத்துவின் 31, ஜிபிஎஸ் 18, பாஸ் 18, மசீச 2, மஇகா 1, பிபிஆர்எஸ் 1, பிபிஎஸ் 1, ஸ்டார் 1, சுயேச்சை 4 என 115 எம்பி-க்களின் ஆதரவு இருப்பதாக சொல்லிக் கொண்டாலும் அம்னோவின் 38 பேரும் சிந்தாமல் சிதறாமல் சாப்ரியை ஆதரிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அன்வாரை மறைமுகமாக ஆதரிப்போரும் அம்னோவில் உண்டு. அதைப்போல சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணியைச் சேர்ந்த பதினெண்மரும் ஒருமுகமாக சாப்ரிக்கு ஆதரவுக்கரம் நீட்ட மாட்டார்கள் என்பதற்கு அந்த அணியின் தலைவர் அபாங் ஜொஹாரி ஓப்பெங் வெளியிட்ட குழப்பமான கருத்தே சான்றாகும். அதைப்போல சுயேச்சை எம்பிக்களும் பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் விதமாக இரு தரப்புக்கும் போக்கு காட்டி வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அடிபட்ட புலியாக உறுமிக் கொண்டிருக்கும் டான்ஸ்ரீ மகியாடின் யாசின்கூட, சாப்ரிக்கு முழு ஆதரவு அளிப்பாரா என்பது ஐயமாக உள்ளதாக அரசியல் நிலவரம் தெரிவிக்கிறது. காரணம், துணைப் பிரதமர் ஹம்சாவா அல்லது அஸ்மின் அலியா என்பது உறுதிப்படுத்தப்படாமல் எந்த முடிவுக்கும் வர இயலாது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்படியெல்லாம் கூட்டிக் கழித்து கூட்டிக் கழித்து பார்த்துக் கொண்டிருந்தாலும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு பின்னடையும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு முன்னிலையும் ஏற்பட்டுள்ளதாகவே இப்போதைய அரசியல் போக்கு தெரிகிறது.

105 நாடாளுமன்ற உறுப்பினர்களை உறுதியாகக் கொண்டுள்ள அன்வார், சுயேச்சைகள் மற்றும் ஜிபிஎஸ் தரப்பில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆதரவைப் பெறுவதால் இப்போதைய அரசியல் காற்று அன்வாருக்கு சாதகமாக வீசுவதாகத் தெரிகிறது.

சற்றே பொறுத்திருப்போம் இது உண்மை என்று உறுதியாகத் தெரியும்வரை!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles