
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன் அமெரிக்க எம்.பி.,க்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இன்டியாஸ்போரா அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி, இந்தியாவை பூர்வீக மாக உடைய எம்.பி.,க்களான டாக்டர் அமி பேரா, பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உயர் பதவியில் உள்ள இந்தியாவை பூர்வீகமாக உடைய நீரா டான்டன், விவேக் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அமெரிக்க பெண் எம்.பி.,யான கரோலின் மலோனியும் பங்கேற்றார். இவருடைய முயற்சியால் 2016ல் தீபாவளி குறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ”தீபங்களின் பண்டிகையான தீபாவளியை மேலும் சிறப்பிக்கும் வகையில், பொது விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் குறிப்பிட்டார்.
