
மித்ரா இனி பிரதமரின் நேரடி கண்காணிப்பின்கீழ் செயல்பட வேண்டும். எந்த அமைச்சரின் பொறுப்போ அல்லது தலையீடோ இல்லாமல் குறிப்பாக அமைச்சரின் பிரதிநிதி என்ற பெயரில் அரசியல் குறிக்கீடு கடுகளவும் இல்லாமல் இந்திய சமுதாயத்திற்கு முழு பயனளிக்கும் வகையில் இனி மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கண்பதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார். அரசாங்க தலைமைச் செயலாளர் பொறுப்பில் அரசாங்க அதிகாரிகளை மட்டும் கொண்டு மித்ரா இயக்கப்பட வேண்டும்; மத்திய அமைச்சக தலைமை இயக்குநருக்கு இணையாக மித்ராவின் தலைமை இயக்குநர் நியமிக்கப்பட வேண்டும்; ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்புகளைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தேர்வுக் குழு அமைத்து அதன்வழி மித்ரா நிதி அளிப்பு உள்ளிட்ட நடவடிக்கையைக் கண்காணிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மித்ரா நிதிவழி மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கை மற்றும் திட்டங்கள் குறித்து சமுதாயத்திற்கு அவ்வப்பொழுது அறிவிக்கப்பட வேண்டும். அத்துடன், இதன் தொடர்பில் ஒரு வழிகாட்டுக் குழு ஆலோசனை மன்றமும் அமைத்து செயல்பட்டால் மித்ராவில் முறைகேடுகளைத் தவிர்க்கலாம் என்று கணபதி ராவ் சுட்டிக்காட்டினார்.



