
இப்ராஹிம் மாட் சின் என்று அழைக்கப்படும் ராஜா போமோ, பேராக் நதிக் கரையில் வெள்ளநீரைத் தடுப்பதற்காகச் செய்த சடங்கு இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை மறுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தெலுக் இந்தான் ஜேபிஎஸ் சதுக்காத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் 25 நிமிட காணொளியில் ஒளிபரப்பாகும் சமய சடங்கில் மலர்கள், இலைகள் உள்ளிட்ட பொருட்கள் ஆற்றில் இடப்படுகின்றன. புத்ரி ஜலேகா என்னும் பெண் அவரருகில் அமர்ந்து ‘புத்ரி மாயாங் சாரி’ என்னும் பாடலைப் பாடிக் கொண்டிருக்க, அவர்களின் முன்னால் குரான் மறை நூல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஹிலிர் பேராக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் அட்னான் பஸ்ரி, 71 வயதான அந்த போமோ நேற்று நள்ளிரவு 12:30 மணி அளவில் போலீஸ் புகார் செய்ததை உறுதிப்படுத்தினார்.


