
மலேசிய அரசியலில் ஊழலுக்கு எதிரான போரில் தனி நபரான அஸாம் பாக்கியை மட்டும் குறிவைக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார். ஊழல் என்பது ஓர் அமைப்பு ரீதியாக மாறிவிட்டது. அனைத்துத் தரப்பினரின் கவனமும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீதும் அதன் தலைவர்மீதும் குவிந்திருக்கும் வேளையில், மற்ற தளங்களில் இந்த ஊழல் தொடரத்தான் செய்கிறது. டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) அடுத்த 1எம்டிபி ஊழலாக மாறும் சாத்தியமுள்ளதை அன்வார் சுட்டிக்காட்டினார். பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களில் மில்லியன் கணக்கான பங்குகளை அஸாம் வைத்திருப்பதாகக் கூறப்படுவதன் தொடர்பில் எழுந்துள்ள அண்மைய அரசியல் நிலவரம் குறித்து அன்வார் கருத்து தெரிவித்தார்.
