
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது, துன் மகாதீர் அப்போதைய எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவகால மாற்றத் துறையமைச்சராக இருந்த இயோ பீ இன்னை, அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற முனைந்ததாக புத்தகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங்கை சிறப்பிக்கும் பொருட்டு, தற்காப்புத் துறையின் முன்னாள் துணையமைச்சர் லியூ சின் தோங் எழுதி வெளியிட்டுருக்கும் ‘லிம் கிட் சியாங்: தேச விசுவாசி, தலைவர், போராளி’ என்ற புத்தகத்தில் மேற்கண்ட செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குவாந்தான், கெபெங்கில் செயல்பட்டு வந்த லைனாஸ் அரியமண் தொழிற்சாலையை 4 ஆண்டுகளுக்குள் அதன் தலைமையகமான ஆஸ்திரேலியாவுக்கு மாற்ற வேண்டுமென்று 2018 ஆகஸ்டில் பகாங், இயோ உத்தரவிட்டிருந்தார்.
அதன் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் இருந்து ரேடியோ கதிர் வீச்சு அதிகமாக இருப்பதால், மக்களின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்ற அபாயம் இருப்பதாகவும் கூறி அதன் நடவடிகைகளைப் படிப்படியாகக் குறைத்து, முற்றாக முடக்க வேண்டுமென்று அமைச்சர் இயோ பீ இன் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவு வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட பின்னர், அதற்கடுத்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துன் மகாதீர் அமைச்சரவையில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாகவும் அதில் இயோ சம்பந்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது ஜசெக அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் அப்போது நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங், ஆலோசகர் லிம் கிட் சியான் ஆகியோர் சமாதானப்படுத்தி, அவரின் நடவடிக்கையை த் தடுத்ததாக லீயூ சின் தோங் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகாதீர் அந்த முடிவை ஏன் எடுத்தார் என்பது விளங்கவில்லை என்றும், அச்சமயத்தில் கல்வியமைச்சராக இருந்த மஸ்லீ மாலிக் தமது பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் குறிப்பிடும்போது, அது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர், பேங்கோக்கில் நடைபெற்ற 35ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோர்ரிசன் மகாதீரை சந்தித்து நீண்ட நேரம் லைனாஸ் தொழிற்சாலை பற்றி விவாதித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
