
முதியவர்களுக்கு, அதிலும் நோயுற்றிருப்போருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் முக்கியமென்றும் அது பாதுகாப்பானது என்றும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, இளையோர் தங்களின் பெற்றோர், உறவினர்கள், அண்டை அயலார் ஆகியோர் தடுப்பூசிக்குப் பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். நாட்டில் 60 வயதுக்கும் மேலான 3.8 மில்லியன் பேரில் 1.44 மில்லியன் பேர் மட்டுமே அதற்குப் பதிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கை பூலோ மருத்துவ மனையின் தொற்றுநோய்ப் பிரிவின் மருத்துவ நிபுணர் டாக்டர் பெனடிக்ட் சிம், பலர் பதிவு செய்து கொள்ளாதது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார். தடுப்பூசியின் பின்விளைவுகள் சிறிய அளவில் மட்டுமே உள்ளது. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் போனால், அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று அவர் எச்சரித்தார்.
வயது ஒரு காரணமாக இருந்தாலும் முதியோரில் பெரும்பாலோர், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், மூளை சம்பந்தமான நோய்கள், டிமென்ஷியா போன்ற மன நோய்களால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. இம்மாதிரியான நோயுள்ளவர்களுக்கு கோவிட்-19 நோய் தாக்கினால், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அணுக்கக் கண்காணிப்பு தேவைப்படும். மேலும், சுவாசக் கருவியின் உதவியும் தேவைப்படும் என்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் முதியோர் பிரிவு மருத்துவ நிபுணர் டாக்டர் ரிஸா மாஸ்ஸுயின் ரஸாலி குறிப்பிட்டார். அமெரிக்காவில் கோவிட்-19ஆல் மரணமடைந்தோரில் 5 லட்சம் பேர் 65 வயதுக்கும் மேலானவர்கள் என்றும் முதியோருக்காகச் செயல்பட்டு வந்த 31,000 பராமரிப்பு இல்லங்களில் இருந்த முதியோர் 163,000 பேர் தொற்றுப் பரவினால் பாதிக்கப்பட்டு மரண மடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முதியோருக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர், அவர்களின் மரணம் 80 விழுக்காடு தடுக்கப்பட்டுள்ளது.
முதியோருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பின்னரே அது செலுத்தப்படுவதால், அதன் மீது அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் உறுதி கூறினார்.
