30.1 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

கோம்பாக் தொகுதி இன்னும் அஸ்மினின் கோட்டைதான் ரபிஸியின் ஆய்வு நிறுவனம் கணிப்பு

சிலாங்கூரில் உள்ள கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி இன்னும் முகமட் அஸ்மின் அலியின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது என்று ‘இன்வோக்’ எனும் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. அத்தொகுதி வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்தாய்விலிருந்து அது தெரிய வந்துள்ளது. பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரபிஸி ரம்லியின் தலைமையில் செயல்படும் ஆய்வு நிறுவனமே இன்வோக் ஆகும்.
அதே வேளையில், பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை விட டான்ஸ்ரீ முஹிடின் யாசினே பொருத்தமானவர் என்று பேட்டி காணப்பட்ட பல வாக்காளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஜசெக தொகுதி, நான்கு பி.கே.ஆர். தொகுதிகள் உட்பட ஆறு தொகுதிகளில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் கோம்பாக்கும் ஒன்றாகும். ஜசெகவின் சிரம்பான்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் முன்னாள் போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக் ஆவார். இதர நான்கு தொகுதிகளை வைத்துள்ள பி.கே.ஆர். தலைவர்கள் அன்வாருக்கு விசுவாசமானவர்கள்.
ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அக்கின் (ஹங்துவா ஜெயா), அக்மால் நஸ்ருல்லா முகமட் நாசிர் (ஜொகூர் பாரு), சாங் லீ காங் (தஞ்சோங் மாலிம்) மற்றும் டான் யீ கியூ (வங்சா மாஜூ) ஆகியோரே அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
மலாய் மெயில் இணைய செய்தி ஊடகத்தின் சார்பில் அந்த ஆய்வை இன்வோக் நடத்தியது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்த பிறகு அதிகாரத்திற்கு வந்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் செல்வாக்கை எடை போடுவதற்காக கடந்தாண்டு ஆகஸ்டு 26ஆம் தேதிக்கும் அக்டோபர் 2ஆம் தேதிக்கும் இடையில் ஒரு மாதத்திற்கு அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மூன்று தவணைகளாக கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் அஸ்மின், அத்தொகுதி வாக்காளர்களிடையே நன்கு அறிமுகமானவராக இருக்கிறார். தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் யார் எனும் கேள்விக்கு ஐம்பது விழுக்காட்டு வாக்காளர்கள் அவரின் பெயரைக் குறிப்பிட்டனர்.
சிரம்பான் தொகுதியில் 29 விழுக்காட்டினர் மட்டுமே அந்தோணி லோக்கை அறிந்தவர்களாக உள்ளனர். அதே நேரத்தில், ஜொகூர் பாருவில் 13 விழுக்காட்டினர் மட்டுமே அக்மாலை அறிந்து வைத்துள்ளனர்.
மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட கோம்பாக் தொகுதி அம்னோவின் கோட்டையாக விளங்கி வந்தது. ஆனால், கடந்த 2008ஆம் ஆண்டில் அத்தொகுதியை அஸ்மின் கைப்பற்றினார். 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பாஸ் வேட்பாளர்களைத் தோற்கடித்து 48,721 வாக்குகள் பெரும்பான்மையில் அத்தொகுதியை அவர் தக்க வைத்துக் கொண்டார்.
இதனிடையே, முஹிடின் மீண்டும் பிரதமர் ஆவதற்கு கோம்பாக் நாடாளுமன்ற வாக்காளர்களுள் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். முஹிடினுக்கு 46 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அன்வாரை 8 விழுக்காட்டினரும் நஜிப்பை 3 விழுக்காட்டினரும் ஆதரித்துள்ளனர். ஆனால், பிரதமர் பதவிக்கு இளவயது வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று 7 விழுக்காட்டினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதர ஐந்து தொகுதிகள் பற்றிய கருத்தாய்வு முடிவுகளை இன்வோக் வெளியிடவில்லை.
புள்ளிவிவர ஆய்வியல் நிறுவனமான இன்வோக்கை தோற்றுவித்தவர் ரபிஸி ஆவார். பி.கே.ஆர். துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றும் போட்டா போட்டியில் அவருக்கும் அஸ்மினுக்கும் இடையே பலத்த கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles