
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவர், டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள், கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக கூட்டுறவு சங்கத்தில் எனக்கு வழிகாட்டியாகவும் வாழ்க்கையில் திசைகாட்டியாகவும் திகழ்கிறார். இன்று மார்ச் 13-இல் பிறந்த நாள் காணும் அவர், நீடு வாழ்ந்து நெடிய புகழை ஈட்ட வேண்டும் என்று என் நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று கூட்டுறவு சங்கத்தின் தலைமை இயக்குநரும் நிருவாகச் செயலருமான டத்தோ பா.சகாதேவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுங்கைப் பட்டாணியில் படித்து, பின் கூலிமில் தற்காலிக ஆங்கில மொழி ஆசிரியராக பணி புரிந்த என்னை, சிறு வயது முதலே டான்ஸ்ரீ அவர்களுக்கு நன்கு தெரியும். சுங்கை தாவார் தோட்டத்திலும் பின் கூட்டுறவு சங்க வரலாற்றில் முதல் தோட்டமாக அமைந்த புக்கிட் சீடிம் தோட்டத்திலும் பணிபுரிந்தவர் என் தகப்பனார் என்ற வகையிலும் பெரிய கிராணியாக பணிபுரிந்த என் மாமாவையும் டான்ஸ்ரீக்கு தெரியும் என்ற நிலையிலும் அந்நாளைய தோட்டப்புற சூழலில் வாழ்ந்த என்னை டான்ஸ்ரீ நன்றாக அறிந்திருந்த காரணத்தால் என்னையும் கூட்டுறவு சங்கத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை வழங்கினார். அதுமுதல், என் வாழ்க்கைப் பயணம் கூட்டுறவு சங்கத்துடன் குறிப்பாக டான்ஸ்ரீ அவர்களுடன் இணைந்து அவர் காட்டியல் வழியில் வழுவாமல் நழுவாமல் தொடர்கிறது. கூட்டுறவு சங்கம் உருவாகி, முதன்முதலில் புக்கிட் சீடிம் தோட்டம் வாங்கப்பட்டு அதற்கான தொடக்கவிழா 1961 ஆகஸ்ட் 24-இல் நடைபெற்ற போது, அதிலும் நான் கலந்து கொண்டேன். அதற்கு முன்பிருந்தே கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து பயணிக்க ஆரம்பத்த எனக்கு, டான்ஸ்ரீ அவர்களின் நிருவாக மேலாண்மையும் அங்கத்தினர்களின் நலனில்அவர் கொண்டுள்ள அக்கறையும் என்னை பலகட்டங்களில் வியப்படைய வைத்தன. தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை நாட்டில் சிறந்த கூட்டுறவு அமைப்பாக நிலைநிறுத்தச் செய்துள்ள அதேவேளை, கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் கல்வி, மருத்துவம், சமூக நலம் சார்ந்து பல வகையிலும் உதவிவரும் டான்ஸ்ரீயின், சமுதாயப் பார்வை விசாலமானது.

சின்ன வயதில் இந்திய விடுதலைக்காக இந்த மலாயா மண்ணில் போராடியவர் டான்ஸ்ரீ; அதற்காக, நேதாஜியின் ஐஎன்ஏ படையில் தன்னை இணைத்துக் கொண்டு, 16 வயதிலேயே பயிற்சியாளராக உயர்ந்த ஆற்றலும் தலைமைத்துவ பண்பும் கொண்டவர் டான்ஸ்ரீ. மஇகா-வில் இணைந்து கெடா மாநிலத் துணைத் தலைவராக இருந்த சமயத்தில் மலேசிய நாடாளுமன்ற மேலவையிலும் உறுப்பியம் பெற்று தன் பொது வாழ்வைத் தொடர்ந்தார். அந்தக் காலக்கட்டதில் ஐநா மன்றத்தில் மலேசியப் பேராளராகவும் கடமை ஆற்றி இருக்கிறார் டான்ஸ்ரீ. தோட்டப் பாட்டாளிகளுக்காக அவர்கள் பணிபுரியும் தோட்டத்திலேயே வீட்டுடைமைத் திட்டத்தை நாட்டில் முதன்முதலில் உருவாக்கியவர் டான்ஸ்ரீ. புக்கிட் சீடிம் தோட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீட்டுடைமைத் திட்டம்தான், பின்னர் அரசாங்கம் உருவாக்கிய பிபிஆர் என்னும் குடியிருப்புத் திட்டங்களுக்கு முன்னோடித் திட்டமாக அமைந்தது என்றால் அதில் மிகை இருக்காது. சுதந்திரத்திற்கு முந்தைய மலாயாவில் இராணுவத்தில் இணைந்து செயல்பட்ட காலத்தில் அவர் பெற்ற கட்டொழுங்கும் காலம்தவறாத பண்பும் ஆற்றல்மிக்க கடமை உணர்வும் இன்றளவும் அவரிடம் மிகுந்து இருப்பதைக் கண்டு நானும் படிப்பினைப் பெற்றுள்ளேன்.

அவர், தன்னுடைய கடமையை கூட்டுறவு சங்கத்துடன் வரையறுத்துக் கொள்ளாமல், இந்த நாட்டின் சிறுபான்மை இந்திய சமுதாயத்திற்கும் முடிந்த அளவு கடமை ஆற்றி வருகிறார். குறிப்பாக, மலேசியத் தமிழர்களின் தாய்மொழியான தமிழின் வளர்ச்சிகாக டான்ஸ்ரீ ஆற்றிவரும் பணிகள் சொல்லி முடிக்க முடியாதவை; அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தவர்; 2010 முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியை நடத்தி அதன் மூலம் உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்கு பாடாற்றுபவர்; தற்போதைய கொரோனா காலத்தில்கூட ஐந்தாவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியை நடத்தி முடித்து, இவ்வாண்டு ஜனவரி முதல் 6-ஆவது பான்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டிக்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. மலேசியாவில் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் இலக்கியப் போட்டியை நடத்தி, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் தமிழ் இலக்கியப் படைப்பாற்றலை உருவாக்கி வருவபர். மலேசியாவிலும் உலக அளவிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே தமிழ் மொழி வளர்ச்சிக்காக கடமையாற்றும் இவர், இதற்காகவே கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அறவாரியங்களை அமைத்தவர்; இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரான டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தையும் திறம்பட நடத்தி வருகிறார். மஇகா முன்னாள் தலைவர் துன் வீ.தி.சம்பந்தன் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி, கூட்டுறவு சங்கத்தில் என் வாழ்க்கைப் பயணத்தையும் இணைத்துவிட்ட டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களுக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டுள்ள நான், அவர் நீடூழி வாழ்ந்து எங்களையும் கூட்டுறவு சங்கத்தையும் வழிநடத்துவதுடன் தமிழன்னைக்கு இன்னும் ஏராளமாக தொண்டாற்ற வேண்டும் என்று விழைகிறேன் என்று இன்று பிறந்த நாள் காணும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரத்திற்கான வாழ்த்துச் செய்தியில் டத்தோ பா.சகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.
