
இந்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இந்திய சமூகத்தினரின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, இரு சாராரின் உள்ளீடுகள் தேவை. முதலாவதாக, அச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தீர்க்கமான மாற்றங்களைச் செய்யும் முனைப்புடைய அரசு; அடுத்து அப்பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அவற்றிற்கான மாற்றங்களை முனைப்புடன் முன்னெடுத்துச் சென்று தீர்க்கும் வல்லமை உடைய மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறியிருக்கின்றார் சமூகப் பணியாளார் மற்றும் ஆர்வாளருமான எஸ். பி. நாதன்.
முன்னாள் பிரதமர் , இந்தியர்களுக்கான பெருந்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற , அவரே அதற்கான அமைச்சரவைக் குழுவிற்கு தலைமையேற்றார்.
அதே சமயம், நிதியமைச்சர் தலைமைச் செயலாளரை, அத்திட்டங்களை செயல்படுத்தும் ஆலோசனைக் குழுவிற்கு தலைமையேற்க செய்து , அரசு ஊழியர்கள் திட்டங்களை சரிவரச் செயல்படுத்துகின்றனரா என்பதனைக் கண்காணிக்கும்படி பணித்தார்.
ஆனால், 14 -வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசு மாற்றத்தால் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிமுறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
பிரதமர் அலுவலகத்தின் கீழ் இருந்த இந்தியர் உருமாற்றத் திட்டப் பிரிவு ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் அதிகமான இந்திய பிரதிநிதிகள் உள்ளனர். ஆனால் அவர்களிடையே காணப்படும் ஒத்துழைப்பின்மையால், அரசியல் வேறுபாடுகளினாலும் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது.
ஆகவே, இந்திய சமூகத்தின் பிரச்சனைகளை தீர்க்கும் வேட்கையும், ஆற்றலும் உள்ளவர்களையே இந்திய வேட்பாளர்களாக, அரசியல் கட்சிகள் முன்மொழிய வேண்டுமென என எஸ். பி. நாதன் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களின் நாடித் துடிப்பை அறிந்து , அடிமட்டத்தில் இறங்கி சேவை செய்துக் கொண்டிருக்கும் ஆற்றல் மிக்க பலர் , இந்திய அரசு சாரா இயக்கங்களில் உள்ளனர். அவர்களுல் ஏற்றவர்களை அடையாளம் கண்டு வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் நிறுத்துங்கள்.
ஆற்றலும், ஏற்ற திறனும் கொண்ட இத்தகையோரே இந்தியச் சமுதாயம் எதிர்நோக்கும் இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கூடிய வல்லவர்களாக திகழ்வார்கள் என எஸ். பி.நாதன் நம்பிக்கை தெரிவித்தார்.
