28.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

இந்து சங்க தலைமைத்துவ போராட்டம்:
அருண் துரைசாமி தலையிடுவதன் பின்னணி என்ன?

-நக்கீரன்

கோலாலம்பூர், ஆக.01:
அருண் துரைசாமி, மலேசிய இந்து சங்கத்தில் தேசிய அளவில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை. மத்திய செயலவையிலும் உறுப்பியம் பெற்றிருக்கவில்லை. தவிர, அவர் இந்து சங்க மாநிலத் தலைவரும் இல்லை; வட்டார அளவிலும் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை.

இந்த நிலையில், தற்பொழுது எழுந்துள்ள தலைமைத்துவ சிக்கலில் இவர் மூக்கை நுழைப்பது ஏன்? எப்படி?? எதனால்???

“ஏதாவது தகவல் வேண்டும் என்றால் ராஜேஷ் நாகராஜைக் கூப்பிடுங்கள் அல்லது என்னிடம் விளக்கம் கேளுங்கள்” என்று எனக்கு தகவல் அனுப்புகிறார்.

மலேசியவாழ் இந்துக்களின் ஆன்மிக மேன்மைக்காகவும் இந்து சமய வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட இந்து சங்கம், மலேசியாவைப் பொறுத்தவரை மூத்த சமய அமைப்பாகும். தாய் அமைப்பு என்று கருதவும் இடம் உண்டு.

இப்படிப்பட்ட அமைப்பில் செயற்கையாக உருவாகியுள்ள தலைமைத்துவ போட்டி குறித்து சம்பந்தப்பட்டவர்களுடண்தான் பேச முடியும். அருண் துரைசாமியுடனோ அல்லது இவர் பெயர் குறிப்பிடப்பட்டவருடனோ பேச வேண்டிய அவசியம் எழவில்லை.

இந்த நிலையில், மலேசிய இந்து சங்க வாயிற்கதவின் பூட்டு வரிசையாக 3 தடவை உடைக்கப்பட்ட அவலத்திற்கும் அவமானத்திற்கும் காரணம் யார் என்பதை மலேசிய இந்து சங்கத்தின் பல்லாயிரக் கணக்கான உறுப்பினர்கள் உணர்ந்து வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2022 ஜூலை 24-ஆம் நாள் நடைபெற்ற இந்து சங்க 45-ஆவது ஆண்டுக் கூட்டம் எந்தச் சிக்கலும் இன்றி நடைபெற்றது. டத்தோ மோகன்ஷானும் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து அவரின் வலக்கரம் இடக்கரம் எனக் கருதப்படும் பாலகிருஷ்ணனும் பதவி விலகி, மத்திய செயலவையில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். மோகன் ஷானின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் மேலும் இருவர் என மொத்தமாக நால்வர் மத்திய செயலவையில் இருந்து அன்றே விலகினர்.

இந்த நிலையில் இந்த நால்வருடன் அவரின் ஆதரவாளர்கள் அறுவர் மற்றும் கெடா, பெர்லிஸ், திரங்கானு, நெகிரி செம்பிலான், சரவாக் ஆகிய மாநிலத் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டத்தை மோகன்ஷான் நேற்று நடத்திக் கொண்டு தானே மீண்டும் தலைவர் என அறிவித்துக் கொண்டுள்ளார்.

இது அப்பட்டமான கேளிக் கூத்து; பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை அவமானப்படுத்துவதாகும். இந்த அக்கப்போரான நடவடிக்கைக்கு மோகன்ஷான் பதில் சொல்ல வேண்டிய நாள் வரும்.

நேற்றையக் கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி அருண் துரைசாமி அறிவிப்பு செய்கிறார். உண்மையாகவும் முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விமர்சனமும் செய்கிறார். தவிர, இந்தக் கூட்டத்தில் அவரும் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படியானால், இவர் எந்த அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ புகழ் அருண் துரைசாமி, சில ஆண்டுகளுக்கு முன் அருள்மிகு கோலாலம்பூர் மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு எதிராக குரல் எழுப்பினார். அப்போது, பத்துமலை அருள்மிகு திருமுருகன் ஆலய நுழைவாயிலில் கூடிய கூட்டத்தில் பேசியபோது, மூச்சுக்கு மூச்சு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’; ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று முழக்கமிட்டாரேத் தவிர வேறெதையும் தெரிவிக்கவில்லை.

நேற்று ஜூலை 31-இல் மோகன்ஷான் இந்து சங்கத் தலைமையகத்தில் கூட்டம் நடத்தியபின், ஜூலை 24-ஆம் நாள் தான் பதவி விலகுவதாக அறிவித்தது உண்மைதான்; அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால், நான் இன்னும் பதவி விலகல் கடிதம் கொடுக்கவில்லை. அதேவேளை, தனக்கு பதவி மோகம் இல்லை; சமரசத்திற்குத் தயார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.

13 ஆண்டு காலம் இந்து சங்கத்தை வழிநடத்தியவர் பேசுகிற பேச்சா இது?

இந்து ஆண்டுக் கூட்டத்தில், இவர் நிறுத்திய 10 பேரும் மிகப்பெரிய வாக்குகள் எண்ணிக்கையில் மொத்தமாக தோற்றனர். மத்தியப் பேரவையிலும் இவர், 16க்கு 11 என்ற வேறுபாட்டில் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசனிடம் தோற்றார். பதவியும் விலகினார்.

இவ்வளவையும் செய்துவிட்டு, இவரே கூட்டத்தையும் நடத்திவிட்டு, அதுவும் இவரால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் நிறுவனம் எல்லாவற்றையும் கண்காணித்து விட்டு, இப்பொழுது எந்த கேள்வி நியாயமும் இல்லாமல் செயல்படும் மோகன் ஷான், அன்று பதவி விலகுவதாக அறிவித்ததற்கு ஒரு காரணம் உண்டு என்கிறார். அது என்ன காரணம்? அந்தக் காரணத்தை தங்க கணேசனிடம் சொல்லாமல் போகட்டும்; ஆனால் இந்து சங்கத்திற்கு அடியும் ஆதாரமுமாக இருக்கின்ற அதன் உறுப்பினர்களுத்த் தெரிவிக்க வேண்டாமா? மலேசிய இந்து சங்கத்தை சிறுவர்கள் விளையாடும் திடல் என்று எண்ணிக் கொண்டார் போலும்.

உண்மையில், அவர் அன்று பதவி விலகுவதாக அறிவித்தது, மனதார செய்ததுதான்; அதுதான் உண்மை.

இடையில் என்ன நடந்தது; இவரை எந்தெந்தத் தரப்புகள் இயக்குகின்றன என்று தெரியவில்லை. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். மொத்தத்தில் ஏதோவொரு கணக்கு இருப்பதாகத் தெரிகிறது; அதில் ஏதோ இலாப நோக்கும் சுயநல கணக்கும் இருப்பதாகவும் தெரிகிறது.

அதனால், ஏதோ மூன்றாம் தரப்பினரால் தூண்டிவிடப்பட்டு, அந்தத் தரப்பு சாவி கொடுத்து திருகிவிடுவதற்கு ஏற்ப இவரும் ஆடுவதாகத் தெரிகிறது.

கத்தரிக்காய் முற்றியபின் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும். அந்த வகையில் எல்லா திருகுதாள வேலையும் கொல்லைப்புற கலந்தாலோசனையும் மலேசிய இந்து சங்கத்தின் பல்லாயிரக் கணக்கான உறுப்பினர்களின் பார்வைக்கு வரத்தான் போகிறது. அதர்மம் வென்றதாக வரலாறே இல்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles