
செராஸ், ஜாலான் லொக் யூ (Jalan Loke Yew)விலுள்ள ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து, 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று காலை ஒன்பதரை மணியளவில் சமயலறையின் பால்கனி பகுதியில் நின்று கொண்டிருந்த அச்சிறுமி தவறி கீழே விழுந்து உயிரிழந்திருப்பதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஸாம் ஹாலிம் ஜமாலுடின் (Zam Halim Jamaluddin) தெரிவித்தார். சம்பவத்தின் போது சிறுமியின் தாயும் தம்பியும் வீட்டில்தான் இருந்துள்ளனர்.
சிறுமி சமயலறைப் பகுதியில் நின்று கொண்டிருந்ததைத் தாம் கவனிக்கவில்லை என அச்சிறுமியின் தாய் கண்ணீர் மல்கக் கூறியிருக்கின்றார். 9ஆவது மாடியில் இருந்து விழுந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப் படுத்தியதாக ஸாம் ஹாலிம் தெரிவித்தார்.



