
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 15ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய முடியாது என சட்ட நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நஜிப் இப்போது எம்பியாக இல்லை என்பதால், இனி அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்களவை, மேலவை இரண்டிலும் அவர் நியமனம் பெற முடியாது என வழக்கறிஞரும் முன்னாள் மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான Dr Gurdial Singh Nijar (குர்தியால் சிங் ரிஜார்) தெரிவித்தார்.
அரசமைப்பு விதி 48(5)இன் கீழ், ஒருவர் சிறைத் தண்டனை அனுபவிக்கும் காலத்தில் ஒருவர் இரு அவைகளிலும் போட்டியிடவோ, உறுப்பினராகவோ அல்லது நியமிக்கவோ முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், வேட்பு மனு தாக்கலுக்கு முன்னர், பேரரசரின் அரச மன்னிப்பு கிடைத்தால், நஜிப் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
