
மலேசியாவில் வாழ்கின்ற இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்தை ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கடந்த ஈராண்டுகளாக தீபாவளி பண்டிகையை மிதமான அளவில் கொண்டாட வேண்டிய சூழலை உலக அளவில் மருத்துவ ரீதியான நெருக்கடியை உருவாக்கிய கொரோனா தாக்கம் உருவாக்கிய நிலையில் இந்த ஆண்டு இயல்பான நிலையில் தீபாவளித் திருநாளைக் கொண்டாட மக்கள் தயாராகி வந்த நிலையில் நாட்டின் ஜனநாயகத் திருவிழாவான பொதுத் தேர்தலும் எதிர்பாராமல் இணைந்து கொண்டது மலேசிய வரலாற்றில் ஒரு புதுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலை இழப்பு, வருமான பாதிப்பு போன்றவற்றால் அன்றாட வாழ்க்கையுடன் ஆலய வழிபாடு உள்ளிட்ட சமய நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இருந்தபோதும் எல்லாவற்றையும் சமாளித்து அக்டோபர் 24-ஆம் நாளில் தீபத் திருநாளை பாரம்பரிய பெருமையுடனும் உற்சாகப் பெருக்குடனும் கொண்டாடி மகிழ மக்கள் தயாராகி வருகின்றனர்.
அதற்கு ஏதுவாக மூன்று நாள் விடுமுறை இந்த ஆண்டு தீபாவளிக்கு வாய்த்துள்ளது.
இருந்தாலும், நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலையைக் கருத்தில் கொண்டு சற்று சிக்கனமாகவும் அதேவேளை சீர்மை குன்றாமலும் நம் பாரம்பரிய சமய விழாவான தீபாவளியைக் கொண்டாடும்படி அனைத்து இந்துப் பெருமக்களையும் கேட்டுக் கொள்வதாக தங்க. கணேசன் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தாக்கம் முற்றாக அகலாத இந்த வேளையில், சுகாதாரத்திற்கும் எதிர்கால வாழ்வுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் உறவினர்களும் நண்பர்களும் அதிக அளவில் கூடும் வேளைகளில் முகக் கவசம் அணிவதையும் முடிந்த அளவு சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதிலும் மக்கள் அக்கறை கொள்ள வேண்டும்.
தீபாவளி நந்நாள், இந்து சமய பண்டிகையாக இருந்தாலும் மற்ற சமயத்தினருடனும் அண்டை-அயலாருடனும் இணைந்து நாட்டில் சமய-சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வண்ணம் நாம் அனைவரும் தேசியத் திருவிழாவாக இந்தத் தீபாவளி பண்டிகையை கொண்டாடி குதூகலிப்போம் என்று தங்க. கணேசன் வெளியிட்ட தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
