
உலக வாணிப மையத்தில் தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, அதில் மஇகா தலைவர்கள் கலந்து கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சமூகத்தின் ஏகபோக பிரதிநிதிகள் என்று மார்தட்டி வருவதற்கு மாறாக, இத்தேர்தலில் மக்கள் சக்தி, ஐபிஎஃப், கிம்மா போன்ற கட்சிகளுக்குத் தொகுதி வழங்கப்பட்டது மஇகாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மஇகாவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருந்தாலும் மேற்கண்ட கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் அக்கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது.
மக்கள் சக்தி தலைவர் ஆர். தனேந்திரனுக்கு நிபோங் தெபாலும், ஐபிஎஃப் தலைவர் டி.லோகநாதனுக்கு ஜெலுத்தோங்கும், கிம்மா தலைவர் சைட் இப்ராஹிம் காஹருக்கு பூச்சோங்கும் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் சக்தி மீது மஇகாவிற்கு கடும் விரோதம் இருக்கும் வேளையில், ஐபிஎஃப் கட்சி மஇகவிலிருந்து பிரிந்து சென்ற டான்ஸ்ரீ பண்டிதனால் உருவாக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளையும் தேசிய முன்னணியுடன் கூட்டு சேர்வதற்கு துன் சாமிவேலு காலத்தில் இருந்தே மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



