
1எம்டிபி நிறுவனத்தின் ஆலோசனை வாரிய உறுப்பினராக இருந்த தமக்கு 2013லிருந்து 2015ஆம் ஆண்டு வரை அலவன்ஸாக 221,774 ரிங்கிட் வழங்கப்பட்டதாக கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆலோசக வாரியத்தின் அலவன்ஸ் 2016இல் நஜிப்பின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டதாகவும் ஆனால் 1எம்டிபியின் தலைவராக இருந்த தமக்கு மாதாந்திர அலவன்ஸாக 25,000 ரிங்கிட் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதே கால கட்டத்தில் ஆலோசக வாரியம் ரத்து செய்யப்பட்ட பின்னரும், தமக்கு மேலுமொரு தொகையாக 300,000 ரிங்கிட் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தாம் ஆலோசனை வாரிய உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும் இருந்தபோது ஆலோசனை வாரியத்தின் எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு முன்னரும் ஆலோசணை வாரியக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.
1எம்டிபி சம்பந்தப்பட்ட 228 கோடி ரிங்கிட் முறைகேடு சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக்கின் வழக்கில், இர்வான் செரிகார் சாட்சியமளித்தார்.



