
எல்ஆர்டி (LRT) தடம் புரண்ட சம்பவம் தொடர்பாக, பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்திற்கு எதிராக அதிகபட்ச தண்டனை விதிக்குமாறு நிலப் பொதுப் போக்குவரத்து முகமை (APAD)க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், இந்தச் சம்பவத்தை அமைச்சு மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
“இந்தச் சம்பவத்திற்கான முழுமையான காரணத்தை கண்டறிய போக்குவரத்து அமைச்சு சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது. விசாரணை வெளிப்படையாகவும் முழுமையாகவும் நடைபெறும்,” என்றார்.
மேலும், பிரசரானாவின் இயக்குநர் குழுவும் உயர் நிர்வாகமும் வழக்கம்போல் செயல்பட முடியாது என்றும், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் கணக்குக் கேட்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
“இது ஒரு சாதாரண சம்பவமல்ல. பொதுமக்களின் பாதுகாப்பை உள்ளடக்கிய மிகக் கடுமையான விஷயம். எனவே, பிரசரானாவின் உயர் நிர்வாகத்தில் உள்ள எவரும் பொறுப்புக்கூறலில் இருந்து தப்ப முடியாது,” என்று அந்தோனி லோக் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



