
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூ மாநில அரசின் ஏற்பாட்டிலான ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனப்படும் அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனையில் இனப் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்று இந்திய சமூகத்திற்கான மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் விளக்கினார்.
இந்த மலிவு விற்பனை உள்பட ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள 44 திட்டங்களும் அனைத்து இன மக்களும் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.சிலாங்கூர் மாநில அரசின் இந்த மலிவு விற்பனையில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படுவதாக தமிழ்நேசன் டிவி வெளியிட்ட செய்தியை நிராகரித்த அவர், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் செந்தோசா உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இந்த விற்பனை ஓராண்டிற்கும் மேலாக நடத்தப்பட்டு வருவதாகச் சொன்னார்.
செந்தோசா தொகுதியில் இதுவரை ஆறு முறை இந்த மலிவு விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த விற்பனையின் போது அதிகமான இந்தியர்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பொருள்களை குறைந்த விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.
பொருள் விலையேற்றத்தால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மாநில மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் மூலம் அனைத்து இன மக்களும் பயனடைந்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு மாநிலத்தை பக்கத்தான் ராக்யாட் கூட்டணி கைப்பற்றியது முதல் இதுவரை எந்தவொரு திட்டமும் இனரீதியாக அமல்படுத்தப்பட்டதில்லை. குறிப்பாக ஷோ ஷோப்பிங் எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் உதவித் திட்டம், மரண சகாய நிதி, பெருநாள் கால ஷோப்பிங் பற்றுச் சீட்டு, சிலாங்கூர் சாரிங் எனப்படும் இலவச மருத்துவ பரிசோதனை, பிங்காஸ் எனப்படும் மக்கள் நல்வாழ்வு உதவித் திட்டம் ஆகியவற்றை உதாரணம் கூறலாம். இத்திட்டங்களின் வாயிலாக அனைத்து இன மக்களும் பயன்பெற்றுள்ளனர். இது தவிர, இந்திய சமூகத்திற்காக பிரத்தியேகமாக பல திட்டங்களையும் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழ்ப்பள்ளிகளுக்கு வருடாந்திர மானியாக 50 லட்சம் வெள்ளி மானியம், ஆலயங்களுக்கு 18 லட்சம் வெள்ளி ஆண்டு மானியம், உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு நிதியுதவி, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்துக் கட்டணம், வர்த்தக உபகரண உதவித் திட்டம் ஆகியவை அவற்றில் சிலவாகும் என அவர் குறிப்பிட்டார்.



