
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர் பந்திங்கிலிருந்து பேராக் தைப்பிங் வரையிலான 500 கோடி ரிங்கிட் மதிப்பிலான 233 கிலோ மீட்டர் தூர மேற்குக் கரை நெடுஞ்சாலைத் திட்டம் 2017 தொடங்கி இப்போது முடியும் நிலையில் உள்ளது.
அந்த நெடுஞ்சாலைத் திட்டத்தில் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கு நிலம், கட்டடம், மாற்றிடத்திற்குச் செல்லும் செலவு, வருமான இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு உறுதி கூறியிருந்தது.
அந்த இழப்பீடை ஏற்றுக் கொண்ட கிள்ளான் ஜாலான் கெபுன் பத்து அம்பாட் நிலச் சொந்தக்காரர்கள் பலர் அங்கிருந்து வெளியேறினர். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட தவணையான 2022க்குப் பின்னர் வெளியேற நினைத்தோருக்கு நிலத்திற்கான இழப்பீடு மட்டுமே வழங்கப்படும் என மாநில அரசும் மேற்குக் கரை நிர்மாணிப்பு நிறுவனமும் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
அதனை எதிர்த்து நாங்கள் போர்க்கொடி தூக்கி செந்தோசா சட்டமன்ற மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் கோத்தா ராஜா எம்பி முகமட் சாபு ஆகியோருக்கு மகஜர் அனுப்பியுள்ளோம் என பாதிக்கப்பட்ட அவ்வட்டார குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அந்தக் வட்டாரத்திலிருந்து இன்னும் மாறிச் செல்லாத எங்களுக்கு இதற்கு முன்னர் வழங்கப்படுவதாக ஒப்புக் கொள்ளப்பட்ட இழப்பீடுகள் அனைத்தையும் வழங்க சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி உதவ வேண்டுமென பாதிக்கப்பட்ட பத்து அம்பாட் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.



