
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது பிரதமருடன் கேள்வி-பதில் அங்கத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதில் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர்கள் தோல்வி கண்டு விட்டனர்.
இந்த கேள்வி பதில் அங்கம் இன்று நடைபெற்ற போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் லாருட் உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், பெர்சத்து கட்சித் தலைவரும் பாகோ உறுப்பினருமான டான்ஸ்ரீ மொகிடின் யாசின், மாராங் உறுப்பினரும் பாஸ் கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் கூட்ட நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபஹாமி ஃபாட்சில் கூறினார்.
இந்த கேள்வி பதில் அங்கத்தின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ பாடிலா யூசுப் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருந்ததாக அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
ஹம்சா ஜைனுடின், மொகிடின் யாசின் மற்றும் ஹாடி அவாங்கின் இருக்கைகள் காலியாக இருக்கும் படத்தையும் அவர் அந்த டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் பிரதமராக பதவியேற்றது முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கேள்வி பதில் அங்கத்தில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.



