
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசியாவில் 17,000 கோடி வெள்ளி மதிப்பிலான திட்டங்களில் முதலீடு செய்ய சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த முதலீட்டு வாய்ப்புகளை வரலாற்றுப்பூர்வ நிகழ்வு என வர்ணித்த பிரதமர் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த இது உதவும் என்றார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுடன் 14,400 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகள் மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட 15,868 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும் என அவர் சொன்னார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற மலேசிய-சீன ஆய்வரங்கின் வாயிலாக 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்த ஆய்வரங்கிற்கு அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிலியல் அமைச்சும்ம் மலேசிய சீன வர்த்தக சபையும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
இது தவிர 50 சீன முதலீட்டாளர்களுடன் அன்வார் நடத்திய தனிப்பட்ட சந்திப்பின் போது 10,000 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீட்டு வாய்ப்புகள் பெறப்பட்டன.
மின்சார வாகனங்களை இலக்காக கொண்டு தஞ்சோங் மாலிமில் அமைக்கப்படவிருக்கம் 3,200 கோடி வெள்ளி மதிப்பிலான வாகன உயர் தொழில்நுட்ப பள்ளத்தாக்கு திட்டம் இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பிரதமர் அன்வார் சீனாவுக்கு மேற்கொண்டுள்ள நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகையின் பயனாக இந்த முதலீட்டு வாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன.
