34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தோற்றுநர்பாவலர் அ.பு.திருமாலனார் நினைவேந்தல்!

தமிழ்நெறி திருக்கூட்டத்தினர்
செலாமா நகருக்கு பயணம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்


உலகத் தமிழர்களுக்கு ஏப்ரல் 29-ஆம் நாள் ஒரு பொன்னான தினம். தமிழினத்தின் ஒரே சுயமரியாதைப் பாவலர் பாவேந்தரின் பிறந்த நாளான இந்த தினம், மலேசியவாழ் தமிழர்களுக்கு இன்னொரு சிறப்பு நாளும்கூட;

மாலியக் கொள்கையில் திளைத்த குடும்பத்தில் கிளைத்து, சுயமரியாதைக் கொள்கையில் பயணித்து, பின்னர் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தை உருவாக்கி, காலமெல்லாம் தமிழ்த் தொண்டாற்றிய பாவலர் அ.பு. திருமாலனாருக்கு ஏப்ரல் 29, நினைவு நாள்.

1995-இல் இயற்கை எய்திய அவருக்கு, வரும் 29-ஆம் நாள் 28-ஆவது நினைவு தினம். இதன் தொடர்பில் தமிழ் நெறிய சிந்தனையாளர்கள் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைநகரம் சிரம்பான், நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநிலத்தின் பழைய அரச நகரான கிள்ளான் ஆகிய முனையங்-களில் இருந்து நாளை ஏப்ரல் 28 மாலையில் புறப்பட்டு, பாவலர் அ.பு. திருமாலனாரின் பிறந்த ஊரான பேராக் மாநிலத்தின் செலாமா பட்டணத்திற்கு பயணம் ஆகின்றனர்.

கிள்ளான் தமிழ் நெறிக் கழகத் தலைவர்களான அருள் முனைவர், கு.மு. துரை ஆகிய இருவரின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் புறப்படும் தமிழ் நெறிய சிந்தனையாளர்கள், மறு நாள் காலை 10:00 மணி அளவில் பாவலர் திருமாலனாரின் நினைவிடத்திடல் ஒன்றுகூடி திருமாலனாரின் சிந்தனை- புகழை நினைவுகூரவும் எடுத்தியம்பவும் தலைப்பட்டுள்ளனர்.
1936 ஜூன் 8-ல் தைப்பிங் நகருக்கு அருகிலுள்ள செலாமா ஹோலிரூட் தோட்டத்தில் பிறந்த அ.பு. திருமாலனார், ஆசிரியப் பணிக்குரிய கல்வித் தகுதியைப் பெற்றிருந்தும் இனத்தின்மீது கொண்ட மாறாதப் பற்றினாலும் தமிழின்பால் கொண்ட ஆறாத தாகத்தினாலும் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.
இசையார்வமும் நாடக நாட்டமும் அமைந்த கலைக்குடும்பமாக அ.பு. திருமாலனாரின் குடும்பம் இருந்ததால், இளமையிலேயே பாடல்கள் எழுதத் தொடங்கினார். சீர்திருத்தக் கருத்துகளிலும் தனித்தமிழ் இயக்கத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார் பாவலர்.
பழுத்த ஆன்மிகக் குடும்பத்தில் பிறந்ததால் நாராயணன் என பெயர் சூட்டப்பட்டார் பாவலர். ஆனாலும், தமிழின்மீது கொண்ட பெருங்காதலால் தன்பெயரை திருமாலன் என்று திருத்தி அமைத்துக் கொண்டதுடன் பகுத்தறிவு, தமிழுணர்வு சார்ந்த பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
தமிழ் மணமும் இன உணர்வும் பீறிடும் வகையில் நாடகம் எழுதுவதில் வல்லவரான பாவலர், முந்நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை நாடகங்களுக்காக இயற்றியுள்ளார். இவர், ‘பாவத்தின் பரிசு’, ‘சூழ்ச்சி’, ‘மலர்ந்த வாழ்வு ‘ஆகிய நீள்நாடகங்களையும் ‘திருந்திய திருமணம்’, ‘பரிசுச் சீட்டு’, ‘சந்தேகம்’, ‘பாட்டு வாத்தியார் பக்கிரிசாமி’, ‘என்று விடியும்?’, ‘மீண்டும் இருள்’ ஆகிய குறுநாடகங்களையும் இயற்றியுள்ளார்.
தொடக்கத்தில் மலேசியத் திராவிடர்க் கழகத்தில் இணைந்திருந்த இவர், பின்னர் அதிலிருந்து விலகி 1983-இல் மலேசியத் தமிழ் நெறிக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
திருக்குறள் நெறியை, தமிழர்கள் தங்களின் வாழ்வியல் நெறியாகக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய பாவலர் அ.பு. திருமாலனாரின் புகழ், மலேசியத் தமிழின வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
நாடக ஆசிரியர், பாவலர், கட்டுரையாளர், நூலாசிரியர், பாடகர், நடிகர் என்றெல்லாம் பலபரிமாணங்களைக் கொண்டிருந்த தமிழ்மகன் திருமாலனாரின் நினைவைப் போற்றவும் இனம்-மொழி-சமயம் ஆகிய முக்கூறுகளுக்காக அவர் முன்வைத்த சிந்தனையை புதுப்பிக்கவும் சிரம்பான்-கிள்ளான் நகர்களில் இருந்து புறப்படும் தமிழ் நெறிக் குடும்பத்தாருடன் இணைந்துகொள்ள விரும்பும் தமிழன்பர்கள் அருள் முனைவர்(017-331 5341), கு.மு. துரை(012-679 1573) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles