
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் உருவாக்கப்பட்டது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்.
இந்தச் சங்கம், இன்று மே 14-இல், 64-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்தக் கூட்டுறவு சங்கத்திற்கு நல்லாரும் வல்லாருமாகிய டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள் தலைமை வகிப்பது முதல் சிறப்பு. அவரின் சிந்தனைக்கேற்ற செயல்மறவாகத் திகழ்பவரும் கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குநருமான டத்தோ பா.சகாதேவன் அவர்கள் அடுத்தச் சிறப்பு.
இதன் தோற்றுநர் துன் வீ.தி.சம்பந்தன் அவர்கள் கௌரவத் தலைவராக இருந்தபொழுது, கூட்டுறவு சங்கத் தலைவராக கோவிந்தசாமியும் செயலாளராக வி.ஜே. பாலசுந்தரமும் பொறுப்பு ஏற்றிருந்தனர்; அந்தத் தருணத்தில் கூட்டுறவு சங்கம் முதன்முதலில் புக்கிட் சீடிம் தோட்டத்தை வாங்கியபொழுது, அதற்கு அடித்தளமாக விளங்கியவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்கள்.
தொடக்கத்தில் தடுமாற்றம் கண்டாலும், தற்பொழுது நாட்டில் உள்ள கூட்டுறவு அமைப்புகளுக்கே முன்மாதிரியாக இவ்வமைப்பு திகழ்கின்றது.
ஒரு கூட்டுறவு சங்கம் என்ற அடிப்படையில் தன்னுடைய உறுப்பினர்களுக்கு ஏராளமான சமூக நலச் சலுகையுடன் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி அனுகூலத்தை அள்ளி வழங்குவதுடன், இந்த நாட்டில் தமிழ் வளர்ச்சியையும் தமிழ் எழுத்தாளர்களின் ஊக்குவிப்பையும் இலக்காகக் கொண்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியப் போட்டியையும் தொய்வின்றி நடத்தி வருகிறது இச்சங்கம்.
அத்துடன் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஈராண்டுகளுக்கு ஒரு முறை, பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசு அளிக்கப்படுகிறது. தமிழ் இலக்கியப் போட்டியைப் பொறுத்தமட்டில், உலக அளவில் இதுதான் அதிகமான பரிசுத் தொகையைக் கொண்டது. கொரோனா தாக்கத்தினால் உலகமே தேக்கம் கண்டிருந்தபோதுகூட, 2020-இல் 5-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியை தொய்வின்றி நடத்தியது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்.

இதற்காக, வெ.10 கோடி முதலீட்டுடன் டான்ஸ்ரீ சோமா மொழி-இலக்கிய அறவாரியம் என்ற பெயரில் தனி அறவாரியம் அமைத்திருப்பது இன்னும் சிறப்பு.
பன்னாட்டுப் புத்தகப் பரிசுப் போட்டியில் தொடர்ந்து வெளிநாடுவாழ் தமிழர்கள் வெற்றிபெறும் சூழல் எழலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு எழுத்தாளர்களும் பயனடையும் வண்ணம், பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டிடன் மலேசியப் புத்தகப் பரிசுப் போட்டியையும் இணைத்து இந்த அறவாரியம் நடத்துகிறது. இரு போட்டிகளிலும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பங்கு கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படுவது, இந்த நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக கூட்டுறவு சங்கம் எந்த அளவுக்கு பாடாற்றுகிறது என்பதற்கு இவை யாவும் தக்க சான்றாகும்.
அதைப்போல மலேசிய இந்தியர்களின் கலை-பண்பாட்டு-இசைத் துறை வளரவும் அதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை பண்பாட்டு வாரியத்தின் மூலம் நாட்டிய, நாடக, இசைக் கலை வளர்ச்சி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வருகிறது இந்தச் சங்கம்.
இத்தனைப் பெரிய அளவில் அருந்தொண்டாற்றி வரும் கூட்டுறவு சங்கத்தைப் பெற்றிருப்பதற்கு மலேசிய இந்திய சமுதாயம், குறிப்பாக, தமிழ்க் குலம் எஞ்ஞான்றும் நன்றி பாராட்ட வேண்டும் என்று கல்வியாளரும் சமூக ஆர்வலருமான டத்தோ என்.எஸ். இராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த மலை நாட்டிற்கு மூன்று கட்டங்களில் தமிழர்கள் வந்தனர். முதல் கட்டமாக 11-ஆம் நூற்றாண்டில் வந்த தமிழர்கள், இந்த மண்ணின் வடபுலத்தில் ஆட்சி புரிந்தனர்.
அடுத்து, 15-16-ஆம் நூற்றாண்டுகளில் வந்தவர்கள், பெரும்பாலும் வர்த்தக சமூகத்தினராக இங்கு வந்து பேரளவில் செயல்பட்டனர்.
மூன்றாவது கட்டமாக, 19-20ஆம் நூற்றாண்டுகளில் பாட்டாளிகளாக இந்த நாட்டிற்கு ஆங்கில ஆதிக்க ஆட்சியாளர்களால் அழைத்துவரப்பட்டனர். அப்படி அழைத்துவரப்பட்ட லட்சக் கணக்கான இந்தியப் பாட்டாளிகள், குறிப்பாக தமிழ்த் தொழிலாளர்கள் அனுபவித்த இன்னல் சொல்லி மாளாது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பை அறவே மறுத்த ஆங்கில ஆட்சியாளர்கள், இதன் தொடர்பில் 1875-இல் ஒரு சட்டத்தையே இயற்றினர்.
பலகட்ட போராட்டங்களுக்குப் பின், 1925-இல் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டனர்; ஆனாலும், தோட்ட நிருவாகங்கள்தான் பொறுப்பு என்றுகூறி, ஆங்கில ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
1939-45 காலக்கட்டத்தில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வி உரிமையும் இடம்பெற்றிருந்தது.
இந்தச் சூழலில் நாடு விடுதலை அடைந்தபொழுது, தோட்டப் பாட்டாளிகளைக் காக்க, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் உருவானபொழுது, ச்சா ஆ ஜோகூர் லாபித் தோட்டத்தில் கஞ்சி காய்ச்சி தோட்டப் பாட்டளிகளைக் கூட்டி, கூட்டுறவுச் சங்கத்தைப் பற்றி துன் சம்பந்தன் அவர்கள் பேசியதை யெல்லாம் 7 வயது சிறுவனாகப் பார்த்திருக்கிறேன் என்று இராஜேந்திரன் சொன்னார்.
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், 40 நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். அங்கெல்லாம் வாழும் தமிழர்கள், தமிழ்க் கல்வி இன்றி அல்லல்படுகின்றனர். மலேசியாவிலும் இலங்கையிலும்தான் தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.
அந்த வகையில், மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் தமிழ்க் கல்வி, இலக்கியம், கலை-பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொடர்ந்து சேவையாற்றிவரும் கூட்டுறவு சங்கத்தின் தொண்டினை மறந்தால், தமிழர்கள் காலத்தால் தவறுஇழைத்தவர்கள் ஆவர்.
இன்னும் குறிப்பாக, பேராக் மாநிலத்தில் 2000 ஏக்கர் நிலத்தில் 18.5 மில்லியன் வரை வட்டியின்றி முதலீடு செய்து, கல்வித் தோட்டத்தை உருவாக்கிய கூட்டுறவு சங்கத்திற்கு சமுதாயம் நன்றி சொல்ல வேண்டும். தற்பொழுது, பேராக் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பயனடையத் தொடங்கி உள்ளனர்.
இதேத் தொகையை வங்கியில் கடனாகப் பெற்றிருந்தால், 2000 ஏக்கர் நிலத்தை நிருவகிக்கும் அறவாரியத்தினர் இலட்சக் கணக்கில் வட்டிசெலுத்த நேரிடும். இப்படி, எல்லா வகையாலும் இந்திய சமுதாயத்திற்கு அரணாக விளங்கும் கூட்டுறவு சங்கம் இன்னும் புகழ்பெற வேண்டும் என்று பேராக் இந்தியர் கல்வி அறவாரிய உறுப்பினருமான பேராசிரியர் இராஜேந்திரன் கூறினார்.
கூட்டுறவு சங்கத்தை சிறப்பாக வழிநடத்தும் அதன் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களுக்கும் அதன் நிருவாகச் செயலாளர் டத்தோ பா.சகாதேவன் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சொன்னார்.
தோட்டப் பாட்டாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தலைவராக டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள் வாய்த்தது, மலேசியத் தமிழ்மக்கள் பெற்ற பெரும்பேறாகும்.
கல்வியில் உலக அளவில் புகழ்பெற்ற ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்தபோது, அதற்காக அரும்பாடாற்றிய அமெரிக்கவாழ் தமிழ்ப் பற்றாளர்கள்-தமிழக அரசுடன் சேர்ந்து கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடை அளித்தவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம்.
இவ்வாறு கல்வி, இலக்கியம், கலை, ஆன்மிகம் என்றெல்லாம் கடமையாற்றிவரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், இந்த நாட்டில் முதன் முறையாக வீட்டுடைமைத் திட்டத்தை உருவாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டுறவு சங்கம் முதன் முதலில் வாங்கிய புக்கிட் சீடிம் தோட்டத்தில் தன் சொந்த பாட்டாளிகளின் நலனை கருத்திற் கொண்டு மலிவான விலையில் நடைமுறைப்படுத்திய இந்த வீட்டுடமைத் திட்டம்தான் நாட்டில் உருவான முதல் வீட்டுடைமைத் திட்டமாகும். அரசாங்கத்திற்கே முன்மாதிரியாகப் பார்க்கப்பட்டது இந்த வீட்டுடைத் திட்டம்.
63 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கத்தினர்களைக் கொண்டுள்ள கூட்டுறவு சங்கம், தான் அடையும் உபரி இலாபத்தை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிப்பதை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது.
கூட்டுறவு சங்க முதல் தலைவர், துன் வீ.தி.சம்பந்தன் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடிவரும் கூட்டுறவு சங்கம், அதை கல்வி மறுமலர்ச்சிக்கு உரிய விழாவாக அனுசரித்து வருகிறது. அதன் அடிப்படையில், மலேசியக் கல்விச் சான்றிதழ்(எஸ்பிஎம்), மலேசிய உயர்க் கல்விச் சான்றிதழ்(எஸ்டிபிஎம்) தேர்வுகளில் சிறந்த அடைவு நிலையுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதியுடன் தங்கப் பதக்கமும் வழங்கி சிறப்பித்து வருகிறது.
ஒரு கூட்டுறவு சங்கம் தன்னையும் செம்மையாக நிலைநிருத்திக் கொண்டு, இப்படி யெல்லாம் இலக்கியப் பணி, கல்விப் பணி, கலை வளர்ச்சி, சமூகப் பணி என்று செயல்பட முடிகிறது என்றால், அதற்கெல்லாம் இந்த சங்கத்திற்கு வாய்த்த தகுதிசால் தலைமைதான் காரணம் என்பதில் கடுகளவும் மிகையில்லை.
இந்த நாட்டின் மையப் பகுதியான கிள்ளான் பள்ளத்தாக்கில் நடைபெறும் பெரும்பாலான இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக துன் சம்பந்தன் மாளிகையில் அமைந்துள்ள டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமா அரங்கத்தை வழங்கி, நிகழ்ச்சிப் படைப்பாளர்களுக்கு உற்றுழி உதவி வருவது கூட்டுறவு சங்கத்தின் இன்னொரு சிறப்பு.
இவற்றுக்கும் மேலாக, ஆயிரக் கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை அளித்துவரும் இந்தச் சங்கம் ஒரு வேலை வாய்ப்பு மையமாகவும் விளங்குகிறது.

இந்த நாட்டில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட உயரமான ஒரேக் கட்டடத்தைக் கொண்டிருப்பதுடன் இந்திய சமுதாயத்தின் பெருமையைப் பறைசாற்றுவதும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்தான்.
தொழில்முனைவர்களுக்கு அவர்களின் தகுதி, அடைமான சொத்து ஆகியவற்றின் அடிப்படையில் 5 ஆயிரம் முதல் 5 இலட்ச வெள்ளி வரை 6 சதவீத வட்டியுடன் கடன் வசதியும் வழங்கப்படுகிறது.
அதைப்போல தன் உறுப்பினர்கள் வீட்டுடைமையாளராக உருமாற வேண்டும் என்னும் பரந்த நோக்கில், முதல் முறையாக வீடு வாங்க முனைவோருக்கு 4.55 சதவிகித வட்டியுடன் தகுதிக்கேற்ப 3 இலட்ச வெள்ளிவரை கடன் வசதியும் அளிக்கப்படுகிறது. உறுப்பினர்களின் பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்கு ஆளானால், அவர்களின் கல்விச் செலவிற்காக 18 வயது வரை மாதந்தோறும் 1,000 வெள்ளி அளவிற்கு கூட்டுறவு சங்கம் வழங்குகிறது.
இவற்றுக்கிடையே, ஆன்மிக சேவையையும் மேற்கொள்வது, கூட்டுறவு சங்கத்தின் இன்னொரு சிறப்பு. கூட்டுறவு சங்க நிர்வாகத்தின்கீழ் உள்ள தோட்டங்களில் ஆலயங்கள் உருவாக்கப்பட்டு, அந்தந்தத் தோட்டங்களில் வாழும் பாட்டாளுக்கான ஆன்மிக பணியை கூட்டுறவு சங்கம் ஆற்றி வருகிறது.
கூட்டுறவு சங்கம் மேன்மேலும் வளர்ச்சி கண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கு அரணாக விளங்க வேண்டும்.
வாழ்க கூட்டுறவு சங்கம்! வாழ்க அதன் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோம சுந்தரம்!!
