
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூலை11:
மலேசியாவின் பாரம்பரிய உயர்க்கல்வி நிறுவனமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் உலகின் மூத்த மொழியாம் இனிய தமிழ் மொழியின் மாண்பும் பெருமையும் மீண்டும் எட்டுத்திக்கும் மிளிரும் வண்ணம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற இருக்கும் 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் எண்ணற்ற சான்றோர் பெருமக்களும் பல்லாயிரக் கணக்கில் தமிழ் நெஞ்சத்தினரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதில், தமிழ் நாட்டு அரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழுத் தலைவர் மாண்புமிகு பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாண்பமை வி.திருவள்ளுவன் ஆகியோறும் சிறப்பாகக் கலந்து கொள்கின்றனர்.
இவ்விரு பெருமக்களும் மாநாட்டிற்கு முதல் நாளே, ஜூலைத் திங்கள் 20-இல் இந்த மலையகத்தின் தலைப்பட்டணத்திற்கு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

திராவிடர்க் கழகத்தின் தலைவரும் சுயமரியாதை வட்டத்தில் ஆசிரியர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்படுபவருமான சுயமரியாதைச் சுடர் பெரியவர் கி.வீரமணியும் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்.
கோலாலம்பூரில் நான்காவது தடவையாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டிற்கு ஆதாரமாக ஓம்ஸ் அறவாரியமும் அடித்தளமாக மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வியல் பிரிவும் விளங்குகின்றன.

மலேசியப் பிரதமர் மாண்புசால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடங்கி வைக்க இருக்கும் இந்த மாநாடு, நிகழும் 21-ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு குறிப்பாக இந்த மலைத்திருநாட்டில் மேலும் மாணபினை சேர்க்கும் என்று தமிழ் நல்லோரால் எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!!
