29 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

கருவறைத் தீண்டாமையைத் தீண்டாத தமிழாராய்ச்சி மாநாடுகள் – தமிழர் தலைவர் கி.வீரமணி

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

கோலாலம்பூர், ஜூலை 29:
1966-இல் தொடங்கிய உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, உலக நாடுகளை வலம் வந்து, தற்பொழுது 11-ஆவது தடவையாக நடைபெறும் இந்த மாநாடு, தொடங்கிய இடத்திலேயே மையம் கொண்டுள்ளது.

மலேசியத் திருநாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரில் தொடங்கிய முதல் பன்னாட்டு தமிழாராய்ச்சி மாநாட்டையடுத்து, 1968-இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் சென்னையில் 2-ஆவது முறையாக நடைபெற்றது.

அடுத்த மாநாடு 1970-இல் பாரிஸ் நகரில் நடைபெற்றது. அதன்பிறகு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் தடம்புரள ஆரம்பித்து, 1974-இல் கொழும்பில் நடைபெற்றது 4-ஆவது மாநாடாக அமைந்தது; 5-ஆவது மாநாடு 1981-இல் மதுரையிலும், 6-ஆவது மாநாடு 1987-இல் கோலாலம்பூரிலும் 7-ஆவது மாநாடு 1989-இல் மொரீஷியசிலும் 8-ஆவது மாநாடு தஞ்சையில் 1995-யிலும் 9-ஆவது மாநாடு 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கோலாலம்பூரில் 2015-இலும் 10-ஆவது மாநாடு 2019-இல் அமெரிக்காவிலும் நடைபெற்று, தற்பொழுது மீண்டும் கோலாலம்பூரில் இப்பொழுது நான்காவது தடவையாக நடைபெறுகிறது.

இதன்மூலம், அதிகமான தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்திய பெருமையை மலேசியா படைத்துள்ளது.

இந்த 11 தமிழாராய்ச்சி மாநாடுகளும் உலக அளவிளான மாநாடு என்று பெயருக்குத்தான் அழைக்கப்படுகின்றனவேயன்றி, உலக அளவில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தில் எந்தத் தாக்கத்தையும் வினைப்பயனையும் ஏற்படுத்தியதா என்றால், அதற்கான பதில் இல்லை என்பதுதான்.

உதாரணத்திற்கு இப்பொழுது மலேசியாவில் நடைபெறுகின்ற மாநாடு, மலேசியத் தமிழர்களையே ஒருங்கிணைக்காதபோது, இதன் தாக்கமும் பயனும் உலகத் தமிழர்களுக்கு எங்கேக் கிட்டப்போகிறது?.

இதற்குமுன், மூன்று மாநாடுகள் மலேசியாவில் நடைபெற்றபோது, மூன்று முறையும் மலேசிய அரசாங்கத்தில் நேரடியாக இடம்பெற்றிருந்த மஇகா-வின் பங்கு நூறு விழுக்காட்டு அளவுக்கு இருந்தது. ஆனாலும், இவற்றால் மலேசியத் தமிழர்களுக்கோ அல்லது உலகத் தமிழர்களுக்கோ எந்தப் பயனும் விளையவில்லை.

மாநாட்டு மலர்களும் கட்டுரைகளும் படைக்கப்பட்டதைத் தவிர வேறேதுமில்லை. இந்த 4-ஆவது மாநாடு நடைபெறும் இந்த வேளையில், மலேசியத் தமிழர்களை அல்லது இந்தியர்களை மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்தில் நேரடியாகப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சி ஏதும் இல்லை; இந்த நிலையில், அரசத் தலைமைக்கு நெருக்கமான தமிழ்நெஞ்சர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையிலான ஓம்ஸ் அறவாரியம் முழுப் பொறுப்பேற்று நடத்துகிறது.

மாநாடு நடைபெறுவதற்கு உரிய கட்டமைப்பும் இடவசதியும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இருப்பதால், அந்த உயர்க்கல்வி நிறுவனம், இந்த மானாட்டுக் குழுவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. தவிர, மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஓம்ஸ் தியாகராஜன் சார்புடைய மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவை மட்டும் இதில் இணைந்துள்ளன.

மற்றபடி, மலேசியாவின் தாய் அரசியல் இயக்கமான மஇகா-விலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்காக டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன் மட்டும் இதில் இடைச்செறுகலாக இணைந்துள்ளாரேத் தவிர, அந்தக் கட்சியின் ஈடுபாடு கடுகளவும் இந்த மாநாட்டில் இல்லை.

மலேசியத் தமிழர்களின் மறுமலர்ச்சிக்காக இன்று எண்ணற்ற இயக்கங்கள் இருக்கலாம்; ஆனால், நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இந்த நாட்டின் தமிழர்களுக்கான முன்னேற்றத்தில் பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கும் மலேசியத் திராவிடர்க் கழகம்(மதிக) இந்த மாநாட்டில் இடம்பெற வில்லை; இதற்கு முந்தைய மூன்று மாநாடுகளில் மதிக இடம்பெற்றதா என்றால் இல்லைதான்.

அப்போதெல்லாம், ஆளுங்கூட்டணியில் தமிழர் சார்பில் இடம்பெற்றிருந்த ஒற்றைக் கட்சி மஇகா என்பதால் பிற அமைப்புகளும் கட்சிகளும் ஒதுக்கப்-பட்டிருக்கலாம்; ஆனால், இந்த முறை அப்படி எந்தக் கட்சியும் இடம்பெறாமல் ஓர் அரசுசாரா அமைப்பு என்னும் வகையில் ஓம்ஸ் அறவாரியம் மட்டும் இதில் முதுகெலும்பாக மட்டுமல்ல; அடியும் நுனியுமாகவும் விளங்கிறது.

இந்த நிலையில், மற்ற அமைப்புகளான மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம், அச்சு ஊடகங்களான மலேசிய நண்பன், மக்கள் ஓசை நாளேடுகள், ஏனைய இணைய ஊடகங்களும் இதில் சம்பந்தப்படுத்தப்படவில்லை.

ஓம்ஸ் பா. தியாகராஜன் தொடர்புடைய தமிழ் மலர் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு இந்த மாநாட்டிற்காக பாடுபட்டது. இத்தகைய காரணங்களால், உலகின் செம்மொழித் தகுதிக்கான அனைத்துத் தகுதிகளையும் அதற்கு மேலாகவும் கொண்டுள்ள தொல்மொழியான தமிழ் மொழிக்கான உலகளாவிய ஆராய்ச்சி மாநாட்டில், ஒரு சார்புடையவர்களே இதில் முழுவதுமாக தென்படுகின்றனர்; ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் தள்ளி நிற்கின்றனர்.

இந்த நிலையில், இந்த மாநாட்டினால் உலக அளவில் என்ன மாற்றம் ஏற்படப் போகிறதென்று தெரியவில்லை.

தமிழ் மொழிக்கான உலக அளவிலான ஆராய்ச்சி மாநாடென்றால், வெறுமனே மொழி குறித்த ஆராய்ச்சியாக மட்டும் இல்லாமல்.., கூடிப் பேசிவிட்டு கலைந்து செல்லும் கூட்டமாக இல்லாமல் இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் உலகளாவிய தமிழர்களின் அரசியல் வலிமை, பண்பாட்டு மேன்மை, மொழிப்பற்று குறித்த எழுச்சி, ஆன்மிகம், மொழிப் பாதுகாப்பு குறித்தெல்லாம் அலசி ஆராயப்பட வேண்டும். ஆனால், உச்சி மரத்தின் இலை அசைவதைப் போன்ற சிற்றளவிற்குக்கூட அப்படி எதுவும் கடந்த 10 மாநாடுகளில் நடைபெற்றதில்லை; இதுவும் அவ்வாறே முடியும்போல் தெரிகிறது.

இந்த 21-ஆம் நூற்றாண்டில் அழியக்கூடிய மொழிப்பட்டியலில் தமிழும் இருப்பதாக ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு பட்டியல் இட்டுள்ளது. இதுகுறித்து, இந்த நூற்றாண்டில் நடைபெற்ற 2 மாநாடுகளும் இப்பொழுது நடைபெறும் 3-ஆவது மாநாடும் கொஞ்சமாவது அக்கறைப்பட்டதாகவும் அக்கறைப்படுவதாகவும் தெரியவில்லை.

சாதாரண மாநாடல்ல; உலக அளவிலான தமிழ் ஆராய்ச்சி மாநாடென்றால், எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் வளர்ச்சி-தளர்ச்சி குறித்தெல்லாம் இந்த மாநாட்டில் ஆய்வு செய்யப்பட வேண்டும்; முடிவும் தீர்வும் எட்டப்பட வேண்டும்.

குறைந்தது இந்த நாட்டில், தமிழ் மொழிக்காக ஓர் அறவாரியம் அரசியல் உள்ளிட்ட அனைத்து எல்லைகளையும் கடந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தியல் ஏற்படுத்தப்படவில்லை.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும்; அதற்காக ஆண்டுதோறும் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு தமிழரும் உலகத் தமிழாராய்சி நிறுவனத்திற்காக குறிப்பிட்ட அளவு நிதி வழங்க வேண்டும்; அதை அந்தந்த நாட்டில் உள்ள கிளை அமைப்புகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதெல்லாம் அடியோடு இல்லை;

ஒண்டுக் குடித்தனம் நடத்துவதைப் போல, அவ்வந்தப்போதில், அந்தந்த அரசாங்கத்திடம் நிதிபெற்று மாநாட்டை நடத்த வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு இத்தகைய நிருவாக நோக்கம் இனியாவது ஏற்பட வேண்டும்.

உலகத் தமிழர்கள், தங்களின் தாய்மொழியான தமிழை அன்றாடம் கொலை செய்கிறார்கள்; இதுகுறித்த விழிப்பணர்வையும் இந்த மாநாடுகள் ஏற்படுத்துவதில்லை.

குறிப்பாக, தமிழைக் கொலை செய்வதில் தமிழகத்து தமிழர்கள் முன்வரிசையில் உள்ளனர்.

ஒன்று இரண்டு என்று ஒருதமிழரும் தமிழ்நாட்டில் சொல்வதில்லை; ஆங்கிலத்தில்தான் உச்சரிக்கின்றனர்; இரவு, சாலை, விபத்து, தொடர்பு, சந்தை, கல்வி, எண், சந்திப்பு, வானொலி, தொலைக்காட்சி, ரயில் நிலையம், பேருந்து நிலையம், பாடசாலை, ஓட்டுநர், நடத்துநர், காலைச் சிற்றுண்டி, சோறு, தேநீர், காலை, மாலை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, வேகம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான சொற்கள் தமிழ்நாட்டில் வழக்கொழிந்து வருகின்றன.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தமிழகத்து அன்பர்கள் இதைப்பற்றி யெல்லாம் சிந்திக்கிறார்களா என்பதுகுறித்து தெரியவில்லை.

குறிப்பாக, தமிழ நாட்டின் கலைநகரமான கோடம்பாக்கத்தில் ஒரேயொரு அசல் தமிழரோ நல்ல தமிழச்சியோ இன்றி ஒரு முழு தமிழ்த் திரைப்படத்தை-யும் தயாரிக்க முடிகிறது. அதற்கேற்ப, திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் பெட்டிக் கடைகளைப் போல பிலுபிலுவென முளைத்துள்ளன.

அப்படி தயாரிக்கப்படும் படங்களுக்கு தமிழிலும் பெயர்வைப்பதில்லை; அல்லது சிதைந்த தமிழ்ச் சொற்களை திரைப்படத்திற்கு பெயராக சூட்டுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, ‘ஆம்பள’, ‘மஞ்சப்பை’ ‘மாஸ்டர்’, சர்க்கார், ஏபிசிடி, ஆர்.ஆர்.ஆர். போன்ற திரைப்பட பெயர்களைக் குறிப்பிடலாம். அதைப்போல திரைப்பட பாடாலாசிரியர்கள் செய்கின்ற தமிழ்த்தீதும் கொஞ்சநஞ்சமல்ல;

ஃபிலிம் காட்டியே ஃபிலிம் காட்டியே
ஃபீலிங் ஏத்தாதே

என்பதும் திரைப்பட பாடல் வரிதான். காதல் என்னும் மெல்லிய உணர்வை இதமாக சுட்டாமல், இப்படி கதறக் கதறக் காட்டுவதில் இப்படி எழுதுகிறவர், இசை அமைப்பவர், பாடுபவர், நடிப்பவர், தயாரிப்பவர் என எந்தத் தரப்புக்கும் கூச்சநாச்சம் இல்லை. இப்படிப்பட்ட படங்களை உண்மையான தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தாத இந்த மாநாடுகள் இதேப் பாணியில் இன்னமும் நடத்தத்தான் வேண்டுமா?

உலகத் தமிழர்களை இன்று ஒரு பெருங்கேடு சூழ்ந்துள்ளது. தங்களின் பிள்ளைகளக்கு பெயர் வைக்கும் தழிழ்ப் பெற்றோர், சொந்த மொழியில் பெயர் சூட்டவேண்டும் என்ற அக்கறை இன்றி, பொருளேயில்லாத வேற்றுமொழிச் சொற்களில் பெயர் வைக்கின்றனர். இந்தப் போக்கு தொடர்ந்தால், மொழி அழிவதுடன் தமிழினமும் சுறுங்கிவிடும்.

அதைப்போல தமிழ்த் திரைப்பட வசனத்தில் அடிக்கடி இடம்பெறும் சொற்றொடர்கள், ‘முடிச்சவிக்கி’, ‘எச்சக்கல நாயே’ என்பவை; இந்தச் சொற்கள் குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினருக்கு இருக்காது என்றுதான் கருதுகிறேன்.

முடிச்சவிழ்க்கி என்றால் திருடன் என்பதுதான் பொருள்;

முன்னைக் காலத்தில் திருமணம், திருவிழா, போர்க் காலம், இயற்கைப் பேரிடர் போன்ற காரணங்களுக்காக குடும்பம் குடும்பமாக வெளியூருக்குச் செல்பவர்கள், ஆடை-ஆபரணம், அரிசி-பருப்பு உள்ளிட்ட தானியங்கள் அனைத்தையும் பெருந்துணிகளில் வைத்து மூட்டையாகக் கட்டிக்கொண்டு சுமந்து செல்வது வழக்கம்.

அப்படியான பயணத்தின்போது, எங்காவது மர நிழலில் இளைப்பாறும் பொழுதோ, அல்லது இரவுவேளையில் சத்திரங்களில் தங்கும்பொழுதோ, திருட நினைப்பவர்கள் துணி மூட்டைகளை அவிழ்த்து ஆராய்ந்து பார்த்து, தங்களுக்குத் தேவையானதை கவர்ந்து செல்வார்கள். இப்படிப்பட்டவர்-களைத்தான் முடிச்சவிழ்க்கி என்பது அந்நாளைய வழக்கு;

அந்தச் சொல்லை இப்பொழுது பயன்படுத்தும் திரைப்பட வசனகர்த்தப் பாவியர், தமிழ் மொழிக்கேயுரிய சிறப்பு ழகர மெய்யெழுத்தான ‘ழ்’ என்பதை தொலைத்துவிடுகின்றனர்.

அடுத்ததாக, ‘எச்சக்கல’; ‘எச்சில் இலை’ என்பதைத்தான் அடித்து நொருக்கி, நெளித்து, ‘எச்சக்கலை’யென எழுதுகின்றனர்.

இந்தச் சொல், உண்மையில், இரு அண்டைவீட்டுப் பெண்கள் சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது பயன்படுத்தும் சொற்றொடர். அதுவும், அந்த இரு பெண்களில் ஒருவர் கைம்பெண்ணாக இருக்க வேண்டும் அல்லது கணவரைப் பிரிந்து வாழ்பவராக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்களுக்கு இடையே சண்டை மூண்டுவிட்டால், கணவனோடு வாழும் திருமதிப்பெண், கணவர் இல்லாதப் பெண்ணைப் பார்த்து, “ஆளன்(கணவன்) இல்லாதவதானடீ, நீ; அதனாலத்தான் நீ இப்படி ஆட்டம் போடுகிறாய்” என்று திட்டினால், அதற்கு மொழியாக அடுத்தப் பெண், “அடி போடீ, என்ன இருந்தாலும் நீ எச்சில் இலைதானே” என்று இளப்பமாக இடித்துரைப்பாள்.

(அந்நாட்களில், கணவன் சாப்பிட்டபின், அதே இலையில் மனைவி உண்பது வழக்கம்; தவிர, ஓரோர் வேளையில், விருந்து, ஆலயங்களில் இடம்பெறும் பந்தி போன்ற சமயங்களில் முதலாளி அல்லது பண்ணியயார் சாப்பிட்டபின், அதே இலையில் அவரின் தொழிலாளி, பண்ணையாள் போன்றவர்கள் சாப்பிடுவதும் உண்டு. அப்படி சாப்பிட்டவர்களைப் பார்க்கும் மற்ற ஆண்கள், ஏதாவது மனமுறுகல் ஏற்பட்டால், “ஆடபோடா, நீ எச்சில் இலைதானே; உன் இலட்சனம் அப்படித்தான் இருக்கும்” என்று சாடுவதும் உண்டு.)

தமிழைக் கெடுப்பதில், மலேசியத் தமிழர்களும் சளைத்தவர்களா என்ன?

மகிழுந்தை ‘காடி’ என்னும் இந்தி சொல்லால்தான் அழைக்கின்றனர். காடி என்றால் வண்டியென பொருள். ஒரு பொருள் அழுத்தமாக அல்லாது கல் போன்றிருப்பதை ‘கிராஸ்’ என்பது வழக்கம். ‘கிராஸ்’ என்றால், மலேசிய தேசிய மொழியில் அழுத்தமாக உள்ளதென பொருல்; அதைப்போல, சந்தை, பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம், விபத்து, காவல் நிலையம், கட்டுக்காவல், நீதிமன்றம், வழக்கு, வழக்கறிஞர், மருத்துவர், பெண், தாய், நண்பர், கூட்டம், திரைப்படம், நாற்காலி, மேசை, மின்சாரம் போன்ற எண்ணற்ற தமிழ்ச்சொற்களை வழக்கொழித்து வருகின்றனர்.

தமிழகத் தமிழர்களுக்கும் இமமலையகத் தமிழர்களுக்கும் ஒரு சொல்லை உச்சரிப்பதில் ஓர் ஆச்சரியமான ஒற்றுமை உண்டு;

‘ஆனால்’ என்ற சொல்லை தனியாக உச்சரிப்பதே இல்லை’ Butஆனால்’ என்று ஆங்கில சொல்லையும் இணைத்தே சொல்வது வாடிக்கை.

இதுமட்டுமல்ல; பொன்விழா, வெள்ளிவிழா, கூட்டம் என்னும் சொற்றொடர்களை ஐம்பதாம் ஆண்டு பொன்விழா, 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா, சந்திப்புக் கூட்டம் என்றெல்லாம் ஏராளமான சொற்கள் அல்லது சொற்றொடர்களை இரட்டுற மொழிவது பெருவழக்காக உள்ளது.

பள்ளிகளில் முதல் தாள், இரண்டாம் தாள் என்பதை, தாள் ஒன்று, தாள் இரண்டு என்று தமிழ் மரபுக்கு மாச்சரியப்பட்டு பலுக்குவது வழக்காக உள்ளது. இடைநிலைப் பள்ளி வகுப்புகளைக்கூட, முதலாம்படிவம், ஐந்தாம் படிவம் என்பதற்கு மாற்றாக, படிவம் ஒன்று, படிவம் இரண்டு என்றும், விளையாட்டுப் போட்டியை போட்டி விளையாட்டு என்பதும் தொடர்கின்றன. இவை யாவும் மலாய் மொழியின் தாக்கத்தால் விளைந்தவை.

தமிழ் நாட்டு இளைஞர்கள் ‘சரக்கு’ என்றால் மதுவைக் குறிக்கும்; மலேசிய இளைஞர்கள் சரக்கு என்றால் காதலியைக் குறிக்கும்; அதைப்போல இங்கு ‘கை’ என்பது தோழரைச் சுட்டும்.

நாற்காலி என்பது நல்ல தமிழ்ச் சொல்; காரணப் பெயர்ச்சொல்; ஆனால், ஈழத் தமிழர்கள் இன்னமும் அதை கதிரை என்றுதான் விளிக்கின்றனர். அதைப்போல ஒன்று என்று ஒருகாலும் உச்சரிக்க மாட்டார்கள்; ‘ஒண்டு’ என்பதை சுட்டுப்போட்டாலும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்; ஐந்நூறு என்பதை ‘அஞ்ஞூறு’ என்றுதான் ஈழ தேசத்தவர் மொழிவர்.

இந்த ‘ஐந்நூற்றை’ தமிழகத் தமிழர்களும் மலேசியத் தமிழர்களும் ‘ஐநூறு’ என்கின்றனர்; ஐநூறு என்றால் அழகான நூறு என்றுதான் பொருளேத் தவிர, அது ஐந்து நூற்றைக் குறிக்காது.

மேலும், பதின்மூன்று என்பதற்குப் பதிலாக பதிமூன்று என்றே பேரளவில் பயன்படுத்துகின்றனர். பதிமூன்று எனில், மூன்று கணவன்மார் எனப் பொருள்.

இதற்கெல்லாம் தீர்வு காண, உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை மூன்று நாட்களுக்கு நடத்துவோர், அதில் ஒரு நாளில் இரண்டு-மூன்று மணி நேரத்திற்கு மேடை நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டு, அனைத்துத் திக்குகளில் இருந்தும் குழுமியுள்ள தமிழ் மக்களை கலந்து கலந்து உட்காரவைத்து அவர்களுக்குள்ளே கலந்துரையாட வைக்கலாம்;

11-ஆவது மாநாடு தொடங்கிய இன்றைய நாளில்(ஜூலை21, 2023), ஊடக-பத்திரிகையாளர்களுக்கான பதிவேட்டில் ஒரேயொரு பத்திரிகையாளர்கூட தன் பெயரை தமிழில் எழுதவில்லை. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்கூட சொந்தப் பெயரை தமிழில் எழுத வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தாத இத்தகைய மாநாடுகளை நடத்துவதை விட நடத்தாமல் இருக்கலாம்.

அந்தப் பதிவேட்டை நான் படம்பிடித்தபொழுது, அந்தப் பணியில் இருந்த வீ. தாமரை என்ற தன்னார்வலர் தடுத்தார். ஏன் என்று நான் வினவியதற்கு அனுமதி இல்லை என்றார். யார் அப்படி சொன்னார் என்றதும் மாநாட்டுக் குழுவில் இணைந்துள்ள பாஸ்கரன் என்பவரை துணைக்கழைத்து என்னைத் தடுத்துவிட்டனர்.

இது, தமிழாராய்ச்சி மாநாடு என்பதால், அனைவரும் தத்தம் பெயரை தமிழில் எழுத வேண்டும் என்று சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் தாமரைக்கும் பாஸ்கரனுக்கும் இருக்கும் வேளையில், அதிலிருந்து அவர்கள் வழுவியதும் அல்லாமல், எனக்கு மறுதலிப்பு தெரிவிப்பதில் குறியாக இருந்தனர்.

தமிழ் ஊடகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் சொந்தப் பெயரை சொந்த மொழியில் எழுத வேண்டும் என்ற குறைந்தபட்ச மொழி உணர்வைக்கூட ஏற்படுத்தாத இத்தகைய மாநாடுகள் எதற்கு?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத அன்பர்கள், இந்தக் கருத்திலிருந்து விடுபடலாம்.

தவிர, மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலான பேராளர்களும் பங்கெடுப்பாளர்களும் வகைதொகையின்றி மொழியைக் கலந்து பேசினர். ஒரேயொரு தமிழருக்குக்கூட மொழிக்கலப்பின்றி பேச வேண்டும் என்ற அக்கறையை ஏற்படுத்தாத இந்த மாநாடுகளை நடத்தி என்ன பயன்?

தமிழாராய்ச்சி மாநாடு என்று பெயர்தான் பெரும்பெயராக இருக்கின்றதே அன்றி, அதற்கான பாங்கை ஒருதரப்பாரிடமும் காணமுடியவில்லை. தமிழர் ஒவ்வொருவருக்கும் தம் தாய்மொழியை எல்லா வகையாலும் எல்லை நிலையிலும் காக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தாத இந்த மாநாடு எதற்காக நடத்தப்பட வேண்டும்?.

இந்த நிலையில்தான், முதல் நாள் நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றிய தமிழக திராவிடர்க் கழகத் தலைவர் கி.வீரமணி, கருவறைத் தீண்டாமையைப் பற்றி ஆழமாகப் பேசினார்.

தமிழர்கள், இறைவனை வணங்கும்பொழுது, சொந்த மொழியில் வணங்க வேண்டும், அர்ச்சனை-ஆராதனை செய்யும்பொழுது, தமிழில் ஓதுங்கள் என்று அர்ச்சகரிடம் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆன்மிக அன்பர்களிடம் ஏற்படுத்தாத இந்த மாநாடுகளை வரிசையாக நடத்துவதால் என்ன பயன்?

தமிழ் நிலத்தில் உள்ள ஆலயங்கள் அனைத்தையும் எழுப்பியவர் தமிழர்; கர்ப்பக்கிரகத்தில் வணங்கும் இறையுருவத்தை வடித்ததும் தமிழர்; இப்படிப்பட்ட தமிழர்கள், அந்தக் கர்ப்பக்கிரகத்தினுள் செல்ல முடியவில்லை: அவர்களின் தாய்மொழியான தமிழும் நுழையமுடியவில்லை.

இதுகுறித்து, 10 முறை நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாடுகளும் கண்டுகொள்ளவில்லை; இந்த மாநாடும் இப்படித்தான்.

தமிழன் உருவாக்கிய ஆலயக் கட்டமைப்பில் அந்தந்த ஆலயத்தின் கருவறை மட்டும் தமிழர்கள்மீது தீண்டாமை வன்கொடுமை புரிவது ஏன்? தமிழர்களோடு சேர்த்து தமிழர்களின் தாய்மொழியாம் இன்தமிழின்மீதும் தீண்டாமை வன்கொடுமை ஏவப்படுவதும் தொடர்வதும் ஏன்?

இறைவனுக்கு நெருக்கமான மொழியாக தமிழை உருவாக்க வேண்டும் என்ற கருத்தைக் கருதாத இந்தக் கூட்டங்களுக்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது என்னப் பொருத்தமோ தெரியவில்லை?.

இத்தகைய கருத்தை யெல்லாம் உள்ளடக்கிப் பேசிய கி.வீரமணி, கும்ப அபிஷேகம் என்பதை குடமுழுக்குவிழா அல்லது நன்னீராட்டுப் பெருவிழா என்றெல்லாம் மாற்றியதில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டாலும், கருவறையில் இன்னமும் தீண்டத்தகாத மொழியாகத்தான் தமிழ் இருக்கிறது. அத்தகைய குடமுழுக்கு விழாக்களில் ஓதப்படும் அர்ச்சனை மொழியும் தமிழாக இல்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டினார், அவர்.

தமிழரின் மானத்தையும் மாண்பையும் கருதாத இந்த மாநாட்டை உலகத் தமிழராய்ச்சி மாநாடு என்று கூறிக்கொள்ளலாமா?

எனவே, இனியாவது, உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்துவோர், வீரிய உணர்வுடன் தமிழைக் காக்கவும், தமிழர்தம் மொழிசார் மாண்பை உயர்த்தவும் அக்கறை கொள்ள வேண்டும்.

அடுத்த இரண்டு நாள் நிகழ்ச்சிகள் எப்படி இருக்கின்றன என்பதைக் கண்ணுற்றபின், கருத்துற்றபின் அடுத்தடுத்து சிந்திப்போம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles