
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக,02:
மலேசிய இந்தியர்களின் பாரம்பரிய அரசியல் இயக்கமான மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா-வின் தேசிய தலைமையகமான நேதாஜி அரங்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று உற்சாக வெள்ளம் கரைபுரண்டது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன், ஏனைய இரண்டாம் நிலைத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், தொகுதித் தலைவர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக் கணக்கில் திரண்டிருந்தனர்.
நாட்டின் இருபெரும் தேசியத் தலைவர்கள் கலந்து கொண்டதால், தகவல்-பல்லூடகத்தினரும் அதிகமாக அணிதிரண்டிருந்தனர். பிரதமர், துணைப் பிரதமர் என்பதைத் தவிர, இருபெரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதைப்போல நாட்டை ஆண்ட-ஆளும் கூட்டணிகளின் தலைவர்களான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும் கலந்து கொண்டதால், நேதாஜி தலைமையகத்தை காலைமுதலே பராபரப்பு பற்றிக் கொண்டிருந்தது
மெர்டேக்காவிற்கு முன்பே உருவான இந்த அரசியல் இயக்கம், மலேசிய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் களத்திலிருந்து விலகிநிற்க வேண்டிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில்.., பற்றிக்கொள்ள ஒரு கொம்பு கிடைக்காதா என்று அலைமோதும் அவரைக் கொடியைப் போன்ற நிலையில் இருக்கும் மஇகா-விற்கு, பற்றிக்கொள்ள கொம்பு கிடைத்ததால் என்றால், இல்லை என்பதுதான் பட்டவர்த்தனம்.
எதுவாக இருந்தாலும் அடுத்தடுத்து கவனிக்கப்படும்; அதற்குமுன் இன்றைய தேர்தல் களத்தில் எங்களுக்கு முட்டுகொடுங்கள் என்பதுதான் அன்வார், ஹமிடி இருவரின் நிலையாக இருந்தது.
ஆனாலும், அதற்கு முன்பே, மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன், ஆகஸ்ட் 12 தேர்தல் களத்தில் நம்பிக்கைக் கூட்டணியும் தேசிய முன்னணி-யும் இணைந்த ஒற்றுமை அணி வேட்பாளர்களுக்கு மஇகா-வினர் ஆறு மாநிலங்களிலும் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரதமர்-துணைப் பிரதமர் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழியைப் பெற்றார்.
அனைவரும் எழுந்து நின்று சத்தியம் செய்வதைப் போன்று உறுதி அளித்தபோது பிரதமரும் துணைப் பிரதமரும் நெகிழ்ந்துதான் போயினர்.
நிறைவாகப் பேச வந்த பிரதமர், மஇகா-விற்கு பளிச்சென எந்த உறுதிமொழி-யையும் அளிக்கவில்லை; ஆனால், உரிய நேரத்தில் உரியது வழங்கப்படும் என்ற நம்பிக்கையை மட்டும் அளித்தார்; கூடவே, மதானி மருந்தையும் அதிகமாகக் கொடுத்தார்.
2022 நவம்பர் 25-இல் பிரதமராகப் பொறுப்பேற்ற அன்வார், தன் நிர்வாகத்தின்கீழ் அனைத்து மட்டங்களிலும் மதானி என்னும் முழக்கத்தை முன்வைக்கிறார்.
‘மதானி மலேசியா’ எனில் மேன்மைமிகு மலேசியா என்பதாக பொருள்கொள்ளப்பட்டாலும், நாட்டில் வாழ்கின்ற மலாயர், சீனர், இந்தியர் மற்றும் போர்னியோ மண்டலத்து மக்கள், தீபகற்பத்தின் பூர்வகுடி மக்கள் அனைவருக்குமான அரசுதான் இந்த ஒற்றுமை அரசு என்பதை இன்றைய மஇகா மேடையிலும் முன்வைக்கத் தவறவில்லை, பிரதமர்.
15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால், அந்தத் தமிழ்ப் பள்ளிகளின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் நிலையில், அதைத் தளர்த்தி 10 மாணவர்கள் பயின்றாலும் அந்தப் தமிழ்ப் பள்ளியை தொடர்ந்து வழிநடத்தலாம் என்று 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அறிவித்ததை இங்கு மறு உறுதி செய்தார்.
எல்லா இனத்துப் பிள்ளைகளும் தன் பிள்ளைகள்தான் என்பதால், அனைத்துப் பிள்ளைகளுக்குமான கல்வியை உறுதிசெய்வேன் என்றார். தவிர, நாட்டில் ஏழ்மையை அகற்றுவதும் தன்னுடைய இலக்கு என்பதை வலிந்துகூறிய பிரதமர், நாட்டில் மலாய்ச் சமூகத்தில்தான் அதிக ஏழை மக்கள் இருக்கின்றனர்; அதேவேளை பரம ஏழையர் இந்திய சமுதாயத்தில் அதிகம் என்பதையும் ஒத்துக் கொண்டார்.
அரசாங்கத்தில் மஇகா-விற்கு இன்னும் அதிக பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்து மற்ற கட்சித் தலைவர்களுடனும் அம்னோத் தலைவருடன் கலந்து ஆலோசித்தபின் முடிவெடுக்கப்படும் என்ற உறுதியை விக்னேஸ்வரனுக்கு அளித்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நான் உங்களை யெல்லாம் நம்புவதைப் போல நீங்களும் என்னை நம்ப வேண்டும் என்று அன்வார் மஇகா தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.
மொத்தத்தில், ஆகஸ்ட் 12 சட்டமன்றத் தேர்தலில், ஒற்றுமை அணி வேட்பாளர்களுக்கு மஇகா ஆதரவைப் பெறுவதற்கான கூட்டமாக இது அமைந்தது; மஇகா-வினருக்கும் இந்த மதானி அணியை ஆதரப்பதைத் தவிர வேறுவழியில்லை.
அரசாங்கத்தின் தேசிய நிலைப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், எதிரணியான பெரிக்காத்தான் சார்பில் குறிப்பாக அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், அல்லா என்னும் பதத்தை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்துவது குறித்து எழிப்பிவரும் சர்ச்சைக் கருத்து, ஒற்றுமை அரசு மலாய்க்காரர் அல்லாதவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்னும் அபத்தமான கருத்துகளைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நாட்டிற்கு ஆபத்தான கருத்துகள் இவை என்பதை வலியுறுத்தினார்.
இப்பொழுது தனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றும் கட்டம் கட்டமாக மஇகா தேவை உள்ளிட்ட அனைத்து நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்த பிரதமர், மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
இன்றையக் கூட்டம், பெரிக்காத்தான் கூட்டணிக்கு சங்கடத்தைத் தருவதாகவும் அமைந்துவிட்டது; வருத்தத்தில் இருக்கும் மஇகாவின் வாக்குகள் தங்களுக்குத்தான் என்று பெரிக்காத்தான் அணியினர் சொல்லிவந்த நிலையில், குறிப்பாக, அந்த அணி சார்பில் களமிறங்கியுள்ள இந்திய வேட்பாளர்கள், மஇகா ஆதரவு தங்களுக்கு என்று நம்பிக்கைத் தெரிவித்து வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் கூட்டமாக இன்றையக் கூட்டம் அமைந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மஇகா-விற்கு இன்று அதிகமாக கிடைத்தது மதானி மருந்துதான்; தங்களை தேர்தல் களத்தில் இருந்து தள்ளி நிற்கும் அளவுக்கு அம்னோ சிறுமைப்படுத்தியது என்ற காயத்தை ஆற்றுவதற்கான மருந்தாக, இந்த மதானி மருந்து அமையுமா என்பது, அடுத்தடுத்த அரசியல் களம் சொல்லும்.
