29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

ஆரியத்திற்கு வெண்சாமரம் வீசும் மஇகா: வரலாற்றுப் பிழையை எதிர்காலம் மன்னிக்காது!

🔥 Views : 11
👁 Reading Now : 52

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்
கோலாலம்பூர், செப்.27:
பவள விழாவைக் கடந்து நூற்றாண்டு விழாவை நோக்கிப் பயணிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகாவிற்கு, இந்து சமயம் எப்படி உருவானது என்ற வரலாறும் தெரியவில்லை; சனாதனம் குறித்த புரிதலும் இல்லை.

பால்-பருவம்-வண்ணம்-வடிவம் உள்ளிட்ட எக்கூறுக்கும் அடங்காமல், அணுவாகவும் அண்டமாகவும் அண்டத்தின் பிண்டமாகவும் ஒப்புயர்வற்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற ஒப்பிலா உயர்விலா பரம்பொருளை வணங்கி, தொழுதொழுகும் இறைவழிபாட்டு முறைக்கும் சாதிக்கொரு நீதிசொல்லும் குலக்கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனீய சனாதனக் கொள்கைக்கும் வேறுபாடு தெரியாத அரசியல் இயக்கமாக மஇகா உருமாறி இருப்பது, மிகமிக இழுக்கானது; வேதனைக்கு உரியது. இந்த வரலாற்றுப் பிழையை எதிர்காலம் மன்னிக்காது.

மலாயா மண்ணின் விடுதலை வேட்கையில் முகிழ்ந்த மஇகா-விற்கு நெடிய வரலாறு உண்டு. நாடு விடுதலை பெறுவதற்கு பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட மஇகா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் மலாயாவிற்கும் இடையேயான விடுதலை ஒப்பந்தப் பத்திரத்தில் மலாயர் சார்பில் அம்னோ கட்சியும் சீனர் சார்பில் மசீசா-வும் கைச்சாத்திட்ட வேளையில் தமிழர் சார்பில் இந்தியரைப் பிரதிநிதித்து கையொப்பமிட்ட மூன்றாவது கட்சி, இந்தக் கட்சிதான்.

நாட்டின் மிகமூத்த அரசியல் பேரியக்கமான மஇகா, அதன் நீண்ட பயணத்தில் அதிகமான விமர்சனத்தை எதிர்கொண்டாலும், இதன் சாதனையையும் பெருமையையும் சொல்லி மாளாது.

தேர்தல் களத்தில் ஒரு தலைமுறைக் காலத்திற்கு, தொடர்ந்து ஐந்து பொதுத் தேர்தல்களில் 100% வெற்றியைப் பெற்ற ஒரேக் கட்சி, மலேசியாவில் மஇகாதான்; 60 ஆண்டுகள் தொடர்ந்து நாட்டின் அதிகார மட்டத்தில் இணைந்திருந்த இயக்கம் இது;

இன்றைய மலேசிய கூட்டு சமுதாயத்தில் ஏறக்குறைய 22 இலட்சம் பேர் இந்தியராக இருக்கும் நிலையில், இவர்களில் மஇகா-வில் உறுப்பியம் பெற்றிருப்பவர்கள் எத்தனை பேரெனத் தெரியவில்லை. மொத்தத்தில், ஒரு சிறுபான்மையின மக்களின் அரசியல் பிரதிநிதியாக இருக்கும் மஇகா, நாட்டின் வடபுலத்தில் ஒரு மாபெறும் உயர்க்கல்வி நிறுவனத்தை-எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை உருவாக்கி, தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கல்வித்தேனை நாடும் மாணவத் தேனீக்களுக்கு மலர்ச் சோலையாக விளங்குகிறது;, மலேசியாவில் உள்ளும் புறமுமாக கல்வி மறுமலர்ச்சிக்காக பெரும்பாடாற்றி வருகிற மஇகா, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான வெள்ளியை மாணவர்களுக்கு கல்வி உதவிநிதியாகவும் கடனாகவும் அளிக்கின்ற வல்லமையைப் பெற்றுள்ளது.

தெற்காசிய நாடுகளில் மலேசியாவிற்கான வர்த்தக கட்டமைப்புத் தூதராக இந்தக் கட்சியின் தலைமை கடந்த 15 ஆண்டுகளாக செயல்படுவது இந்தக் கட்சிக்கு இன்னொரு சிறப்பு.

தமிழ்ப் பள்ளிகளின் இருப்பு மற்றும் உருமாற்றத்திற்கான அரணமைப்பாக செயல்படும் மஇகா, பேரளவில் இல்லாவிடினும் ஓரளவிற்கு மலேசியவாழ் இந்தியர்களின்-தமிழர்களின் சமூக-கல்வி-பொருளாதார மறுமலர்ச்சிக்கு துணையாக விளங்குகிறது.

இவ்வாறு, எண்ணிறந்த சீர்மைக்கும் மேன்மைக்கும் உரிய பாரம்பரிய அரசியல் இயக்கமான மஇகாவிற்கு, இந்து சமயத்திற்கும் ஆரிய மேலாண்மைக்கான சனாதன குயுக்திக்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லையே என்பது வியப்பாக உள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 22-ஆம் நாள் கூடிய மஇகா மத்திய செயலவையில், தமிழ்நாட்டின் இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனக் கொள்கையை எதிர்ப்பதால், அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததுடன், மலேசிய பல்லூடகத்தில் உதயநிதியின் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று கேட்டு, தகவல்-பல்லூடக அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் செப்டம்பர் 29-இல் அமைதிப் பேரணி நடத்தி உதயநிதிக்கு எதிராக கோலாலம்பூர் இந்திய தூதரகத்தில் கோரிக்கை மனு கொடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம், உதயநிதிக்கு எதிராகவும் சனாதன அதர்மத்திற்கு ஆதரவாகவும் போர் முரசம் கொட்டுகிறது மஇகா.

இந்து சமயத்திற்கு எதிராகவோ, அதன் ஆறு வழிபாட்டுக்கு கொள்கைகளை மறுத்தோ உதயநிதி எங்கும் பேசியதில்லை; எப்போதும் பேசுவதில்லை.

கைபர் கணவாய் வழியாக, தங்களின் விலங்குகளுக்கு மேய்ச்சல் நிலம்தேடி இன்றைய இந்திய மண்டலத்திற்குள் நுழைந்த பார்ப்பனர்கள், தங்களின் நிறத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, வெப்பப் பிரதேசமான குமரி பெருநிலத்தில் வாழ்ந்த வேளாண்குடி மக்களான திராவிடர்கள் கருப்பாகவும் மாநிறமாகவும் இருப்பதை தாழ்வாகக் கற்பித்து, தமிழர்களின் ஆன்மிகம்-பொருளாதாரம்-சமதரும சமுதாயக் கட்டமைப்பு உள்ளிட்ட அத்தனையையும் சீர்குலைத்து, பின்னர் அவற்றை தன்வயப்படுத்தினர். தமிழர்தம் செம்மாந்த வாழ்வை வேரோடும் வேரடி மண்ணோடும் பார்ப்பனர்கள் சாய்த்தனர். அதற்கு இன்றளவும் அவர்களுக்கு துணைநிற்கும் சாதிபேத சனாதனத்தைதான் உதயநிதி எதிர்க்கிறார் என்னும் உண்மை, மஇகா-வைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட தெரியாமல் போனது, இந்த இயக்கத்திற்கு பன்முகப் பார்வை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்து சமயம் என்பது, பிரிட்டிஷ் மகாராணியின் ஒற்றைக் கையொப்பத்தில் உருவானது என்பதே மஇகாவிற்கு இதுவரை தெரியாதபோது, சனாதனத்தை பற்றிய புரிதல் அதற்கு எங்கே இருக்கப்போகிறது?.

1858-ஆம் ஆண்டு மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி சுல்தான் பகதூர் ஷாவை ஆங்கிலேயர்கள் பர்மாவிற்கு(இன்றைய மியன்மார்) நாடு கடத்தினர். அதற்கு முன் இந்தியா என்ற ஒரு கூட்டு நாடும் இல்லை; இந்து சமயம் என்ற கூட்டு சமயமும் இல்லை என்பது உண்மை வரலாறு.

ஆதியும் அந்தமும் இல்லாதது இந்து சமயம் என்பது வெற்றுப் பேச்சு; இந்தியாவில் இருந்த சூரிய வழிபாடு, சமணம், பௌத்தம், சீக்கியம், சிறுதெய்வ வணக்க முறை, குலதெய்வ வழிபாடு, முன்னோரை வழிபடும் நடுகல் வணக்க முறை, சைவம், வைணவம், அன்னை வழிபாடு, திருமுருக வழிபாடு, பிள்ளையார் வழிபாடு உள்ளிட்ட இரு டஜனுக்கு மேற்பட்ட வழிபாட்டு முறைகளை பார்ப்பனர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கியும் இணைத்தும் உருவாக்கியதுதான் இந்து சமயம்.

இந்தத் தகவலை இன்னும் எத்தனைக் காலத்திற்கு எழுதுவது என்று தெரியவில்லை.

கிறிஸ்துவ சமய பரப்பு நடவடிக்கைக்காக ஜெர்மனியில் இருந்துவந்த சீகன் பாகு பாதிரியார்தான் இந்தியாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவினார். தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த கடற்கரைப் பட்டணமான தரங்கம்பாடியில்தான் அந்த அச்சகம் அமைக்கப்பட்டது.

அதன்பிறகு அச்சுத் தொழில், குறிப்பாக பத்திரிகைத் துறை வேகமாக வளர்ந்தது; தொழில் புரட்சியும் உருவானது. நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகின; சாலை அமைத்தல், ரயில் பயணம், நெசவுத் தொழில் என 19-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் அதிகமான வேலைவாய்ப்புகள் பிரிட்டிஷ் இந்தியாவில் உருவாகின.

இந்த சமயத்தில், கிறிஸ்துவர்களைவிட, இஸ்லாமியர்களைவிட இந்துக்க-ளாகிய தாங்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அதனால், தங்களுக்கே அதிக வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் மராட்டிய சித்பவன பார்ப்பனரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாதப் பிரிவுக்கு தலைமை ஏற்றவருமான பால கங்காதர திலகர் ஆங்கிலேய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இந்து சமயத்தின் பெயரில், பார்ப்பனர்கள், தங்களுக்காக எழுப்பிக்கொண்ட கோரிக்கைதான் இது.

இதை உடனே ஏற்க மறுத்த ஆங்கில ஆட்சியாளர்கள், இதுகுறித்த தகவலை, பங்கிங்காம் அரண்மனைக்கு அனுப்பி, பிரிட்டிஷ் பேரரசியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆங்கிலேய அதிகாரிகள் அலட்சியமாக குறிப்பெழுதி அனுப்பிய அந்தக் கோப்பைப் பார்த்த பிரிட்டிஷ் மகாராணி, ஒரேக் கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் விதமாக,

‘யாரெல்லாம் முஸ்லிம் இல்லையோ, யாரெல்லாம் கிறிஸ்துவர் இல்லையோ மற்ற அனைவரும் இந்துக்கள்’ என அறிவிக்கப்படுகின்றனர் என்ற குறிப்புடன் சம்பந்தப்பட்ட கோப்பை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினார்.

பார்ப்பனர்கள் பொதுவாக மீசை வைத்துக் கொள்வதில்லை; ஆனால், மராத்திய சித்பவன பார்ப்பனர்கள், மராத்தியப் படையில் போர் வீரர்களாக இருந்ததால் மறத்தன்மைக்காக மீசை வைத்துகொண்டனர்.

சத்ரபதி வீர சிவாஜியின் படையில் இருந்த பார்ப்பனர்கள் அத்தனைபேரும் மீசை வைத்திருந்தனர். திவிரவாத மனப்பான்மை கொண்ட அனைவருக்கும் இந்தியா என்ற பெயரைவிட பாரதம் என்ற பெயர்தான் பிடிக்கும். மாகவி பாரதியார்கூட அந்த வட்டத்தில் இருந்ததால்தான் மீசை வைத்துக் கொண்டார். அவர் இந்தியா ஏன்னும் இதழில் ஆசிரியராக இருந்தாலும் பாரதம் என்றுதான் எழுதுவார். தமிழினத்தின் ஒரே சுயமரியாதைப் பாவலரான பாவேந்தர், கப்பலோட்டிய தமிழர் வஉசி உள்ளிட்ட ஒருசில மறத்தமிழர்கள்கூட இந்த வட்டத்தில் ஒருகட்டத்தில் இணைந்திருந்தனர்.

பிரிட்டிஷ் மகாரணியின் உத்தரவைக் கொண்டாடிய திலகர் கூட்டத்தினர், சைவம்-வைணவம்-சாக்தம்-கணபதியம்-கௌமாரம்-சௌரம் ஆகிய ஆறு கொள்கைகளை உள்ளடக்கி அறுசமய கொள்கை உடையது இந்து சமயம் என்று கூறிக் கொண்டனர்.

இந்த நடைமுறைதான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த முஸ்லிம் ஜமாத்தார்கள் மூலம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையும் தேவாலயங்களின்வழி கிறிஸ்துவர்கள் எண்ணிக்கையையும் தெரிந்த ஆங்கில ஆட்சியாளர்கள், மற்றவர்களின் கணக்கு தெரியாமல் தவித்து வந்தனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தவிர மற்ற அனைவரும் இந்துக்கள் என வகைப்படுத்தி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சிக்கலுக்கும் இதன்வழி தீர்வு கண்டார் பிரிட்டிஷ் ராணி.

உண்மையில், தமிழர்களின் சமய நெறிமுறை மிகமிகத் தொன்மையானது; அது, பழந்தமிழராம் ஆதித் தமிழர் காலத்தில் இருந்து தொடங்குகிறது.

தமிழர்கள், பொதுவாக தாய்வழி சமூகத்தினர்; அதனால்தான் இயற்கையின் பல்கூறுகளை வழிபட்ட அவர்கள், மெல்லமாக இளங்குமரியை உருவகப்படுத்தி வழிபட தலைப்பட்டனர். இதுதான், பின்னாட்களில் கொற்றவை வணக்க முறையாகவும் அன்னை உமையவளை, பார்வதியை, காளி தேவியை வணங்கும் சக்தி வழிபாடாக வடிவம் கொண்டது.

பின்னர் ஆசீவகம் என்னும் அறிவியல்சார் சமயத்தைப் பேரளவில் தமிழர்கள் பின்பற்றினர். வாழ்வில் ஏற்படும் நன்மை தீமை; இன்பம்-துன்பம் யாவும் இயல்பாக நடைபெறுபவை; கடவுள் என்பவர் எல்லா உயிர்களுக்குமானவரேத் தவிர, ஒவ்வொருவர் வாழ்விலும் தனித்தனி தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதுதான் ஆசீவகம்.

இந்த ஆசீவகம் தழைத்தோங்கிய காலத்தில்தான், செவ்வாய்க் கோள் செந்நிறமானது என்பதை அறிந்து, அதற்கு செவ்வாய்க் கோள் என பெயரிட்டனர். மழை-வெய்யில் போன்ற இயற்கை வெளிப்பாட்டை மிகத்துள்ளியமாக கணித்த அன்றைய ஆசீவக தமிழர்கள், சொந்த நிழலைக் கொண்டு நேரத்தைக் கணித்தனர். கணியக் கலையும்(சோதிடம்) அறிவியல் சார்ந்து அப்பொழுதுதான் உருவானது.

அதன்பின்னர், சமணம் உருவானது. பெண்ணின் அழகு நிலையானது அல்ல; சொற்ப காலத்தில் அது மாறிவிடும்; வாழ்க்கையே நிலையானது அல்ல என்பதால், மனிதனுக்கு ஆடம்பரம் தேவையில்லை; பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் உண்டி சிறுத்தல் மேன்மையானது என்பதை வலியுறுத்திய சமண காலத்தில் கற்பிக்கப்பட்டதுதான் உண்பது நாழி-உடுத்துவது இரண்டு என்பதெல்லாம்;

ஆசீவகமும் சமணமும் அறிவியல்சார் சமயங்கள் என்பதால், மூடக் கருத்துகளை திணிக்கவும் கற்பிக்கவும் முடியாமல் பிராமணர்கள் தடுமாறி நின்றனர்.

இதேக் காலத்தில் பௌத்தமும் பேரளவில் எழுச்சிபெற்றது; பௌத்த சமயமும் ஏறக்குறைய சமணக் கொள்கையை ஒத்ததாக இருந்தது. மௌரிய வம்சத்தைச் சேர்ந்த அசோகப் பெருமன்னன்தான் பௌத்த சமயத்தை உலகெங்கும் பரப்பினான்.

ஆன்மிக வரலாற்றில் மதமாற்றத்தை மேற்கொண்ட முதல் ஆட்சியாளர் அசோக மன்னன்தான். இவர் மட்டுமல்ல; இவரின் தந்தை பிந்துசாரர், தாத்தா சந்திர குப்த மௌரியர் உட்பட அனைவரும் ஆசீவர்களாகத்தான் இருந்தனர்.

பாடலிபுத்திர பெரும்போருக்குப் பின் மனம் மாறிய அசோகன், மதமும் மாறினான்; போர் முறையை வெறுத்து அமைதிவழியை நாடிய அசோகன், புதுப்புது சட்டங்களை இயற்றி மக்கள் நலனுக்கு எந்த அளவிற்கு முன்னுரிமை கொடுத்தாரோ, அதனிலும் மேலாக மதமாற்ற நடவடிக்கைக்கு முதலிடம் தந்தான்.

இன்றைய இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், மியன்மார், சீனா, திபெத், இலங்கை, ஜப்பான், கொரிய நாடுகள் உட்பட உலகின் பெரும்பகுதிகளுக்கு கிறிஸ்துவ சமயம் உருவாவதற்கு 200 ஆண்டுக்கு முன்பே புத்தர் நெறியைப் பரப்பினான் அசோகப் பெருமன்னன்.

பௌத்த சமயம், தமிழகத்தின் ஊடாகத்தான் இலங்கையில் பரவியது. அப்போது, ஏராளமான இடங்களில் புத்தரின் பாதங்கள் அமைக்கப்பட்டன; பௌத்த சமயத்தை மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டது குறைந்த அளவுதான்; மிரட்டியும் மரண பயத்தை ஏற்படுத்தியுமே பாரிய அளவில் பௌத்தத்தைப் பரப்பினான் அசோகன்; பௌத்த சமயத்திற்கு மறுப்பு தெரிவித்தவர்கள் வெட்டி சாய்க்கப்பட்டனர். பௌத்தத்திற்கு எதிரானவர்களின் தலையைக் கொண்டு வந்தால் ஒரு தலைக்கு ஒரு தங்கக் காசு கொடுத்து அதை ஊக்குவித்த அசோகனுக்கு, வன்முறை மூலம் மதத்தைப் பரப்பிய ஆட்சியாளர் என்ற அவப்பெயரும் உண்டு.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்து சமயத்தின் துணைகொண்டு வைணவம் பரவியபோது, தமிழ் நாட்டில் இருந்த புத்தர் பாதங்களெல்லாம் இராமரின் பாதங்கள் என்று கதைகட்டப்பட்டு, வைணவ சமயம் அவற்றை அபகரித்துக் கொண்டது.

அப்படித்தான், திருவரங்கத்தில் உறங்கும் கோலத்தில் உள்ள புத்தர் சிலையையும் பள்ளிகொண்ட அரங்கநாதன் என்றும் காவிரிக் கரையில் உறங்கும் திருமால் என்றும் வைணவத்தினர் கதைகள் புனைந்தனர். திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலையும் உண்மையில் ஒரு பெண் தெய்வத்தின் உருவமாகும்; அந்தச் சிலையின் கழுத்து-முதுகுப் பகுதியில் சடை இருக்கிறது; அதையும் வைணவம் ஆண் தெய்வமாக புனைசுருட்டி வசப்படுத்திக் கொண்டது.

புத்த சமயத்தை அது தோன்றிய மண்ணில் இருந்தே பார்ப்பனர்கள் அழித்ததைப் போல, தமிழர்கள் பேரளவில் கைக்கொண்டிருந்த சைவத்தையும் இந்து சமயத்தின் பெயரால் விழுங்கிவிட்டனர். வள்ளலார் காலத்தில், ஆறுமுக நாவலர் காலத்தில் புழக்கத்தில் இருந்த ‘தமிழும் சைவமும் தமிழருக்கு இரு கண்களைப் போன்றவை’ என்ற சொற்றொடரும் இதனால் மங்கிப்போனது. மஇகா-கூட இன்று ‘தமிழும் சமயமும் தமிழருக்கு இரு கண்கள்’ என்கிறது. சைவத்தையும் திருமுறையையும் மஇகா அடியோடு துறந்துவிட்டதற்கு இது தக்கசான்று.

இப்படி உருவான இந்து சமயத்திற்கும் சனாதனத்திற்கும் என்ன தொடர்பு?

இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்த கிருஷ்ண பரமாத்மா, யார் யார் எந்தத் தொழிலை மேற்கொள்ள வேண்டுமோ அதற்கேற்பவே மனிதர்களைப் படைத்துள்ளார் என்று மனுதர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே, அதற்கு மறுபெயர்தான் சனாதனக் கொள்கை;

ரிக் வேதத்தின் 153-ஆவது பாடலில் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள்; தோள்பட்டையில் பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள்; பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்பதுடன் செருப்பு தைக்கும் சக்கிலியர், ஊர்ப் புறத்தைக் கூட்டும் தோட்டி உள்ளிட்ட பஞ்சமர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதால் அவர்களுக்கு பிரம்மாவின் உடம்பில் இடம் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது; இந்த சாதி பேதத்தை எதிர்க்கும் உதயநிதியை மஇகா ஏன் எதிர்க்க வேண்டும்?.

மகாபாரதக் கதையில் சொந்தமாக தன்னெழுச்சியுடன் வில் கலை பயின்ற ஏகலைவனின் கட்டை விரலை சாதியின் பெயரால் துரோணாச்சாரி காவு வாங்கிய கதை மஇகா-வுக்குத் தெரியாதோ?

மகாபாரதத்தைப் போலவே, தமிழர்களை தாழ்த்தியும் பிராமணர்களை உயர்த்தியும் எழுதப்பட்ட இன்னொரு புனைகதையான இராமாயணத்தையும் மஇகா கொண்டாடுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே இராமாயணம் என்பது கட்டுக்கதை என்று 1956-இல் சொன்னார். அப்படிப்பட்ட கதையில் தமிழர்களை(திராவிடர்களை) குரங்குகளாகவும் நல்லாரும் வல்லாரும் சிவநெறியாரும் ஏழிசை வேந்தருமான இராவணனை அரக்கனாகவும் அவரின் அன்புச் சகோதரியை அரக்கியாகவும் புனையப்பட்டுள்ளதே, இதற்குப் பெயர்தான் சனாதனம் என்பது மஇகா-விற்குப் புரியவில்லையோ?

மஇகா-வினர் காவடி சுமக்கின்றனர்; பால் குடம் ஏந்துகின்றனர். ஆனால், ஒரேயொரு பார்ப்பனராவது காவடி சுமப்பதையோ அருள்வந்து ஆடுவதையோ முடி காணிக்கை செய்வதையோ மஇகா-வினர் கண்டதுண்டா?

பிராமணர்கள் ஓட்டுநராகவோ நடத்துனராகவோ பணிபுரிவதில்லை; கொத்தாளு, சித்தாளு வேளையெல்லாம் நம்மவாளுக்குத்தான்; அவாளுக்கு எப்போதும் நீதிபதி, உயரதிகாரி வேலைதான் என்பதும் படிக்காத பார்ப்பணர்களுக்கு தட்டேந்தும் அர்ச்சகப் பணி எப்போதும் நிரந்தரம் என்பதும் இதுதான் சனாதனம் என்பதும் மஇகா-விற்கு தெரியாமல் போனதெப்படி?

ஆரிய-பார்ப்பன சனாதனத்திற்கு ஆதரவாகவும் சனாதனத்தை எதிர்க்கும் ஒரு தமிழ அமைச்சருக்கு எதிராகவும் ஒருமுகமாகக் குரல்கொடுக்கும் மஇகா, புது டில்லியில் பத்து ஆண்டுகளாக ஒரு தமிழர்கூட கேபினெட் அமைச்சராக இல்லை என்பதற்கு கண்டனம் தெரிவிக்குமா? அதற்காக அமைதிப் பேரணி நடத்தி இந்தியத் தூதரகத்தை நோக்கிச் செல்லுமா?

ஆலயத்தைக் கட்டியதும் சிலைகளை செதுக்கியதும் தமிழர்; ஆனால், தமிழில் வழிபாடு மட்டும் இல்லையே; இதைப்பற்றி அக்கறைப் படாத மஇகா, அந்தப் பார்ப்பனியத்திற்கு அடிதாங்கி முட்டுக்கொடுக்க முயல்வது ஏன்?

63 நாயன்மார் பெருமக்கள் உள்ளம் உருகி அம்பலத்தே ஆடும் சிவனைப் போற்றிப் பாடியதுடன் அவர்கள் முன்னெடுத்த தொண்டறத்தைப் போற்றும் விதமாக நிலவுலகிற்கு வந்து அடியார்களை ஆட்கொண்டார் சிவபெருமான் என்பதை சிவனியம் வரையறுக்கிறது. சிறுதொண்ட நாயனாரின் வாழ்வே அதற்கு தக்கசான்று; அவ்வாறு பாடப்பட்ட திருமுறைப் பாடல்கள் இன்று இறப்பு வீட்டில் மட்டும் ஓதுவதற்கு என்றாகிவிட்டது; இதைப்பற்றி மஇகா கவலைப்பட்டதுண்டா?

இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் விடுதலைப் போராட்ட களத்தில் இருந்த நேரத்தில், தமிழ்நாட்டு சேரன்மாதேவியில் செயல்பட்ட ஒரு குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு தனிப் பந்தியும் மற்றவர்களுக்கு அதாவது முதலியார்கள் உள்ளிட்ட உயர்சாதி மாணவர்களுக்காக இன்னொரு பந்தியும் என அங்கு பயின்ற மாணவர்களுக்கு சாதி அடிப்படையில் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டது. சுப்பிரமணிய சிவா என்ற பார்ப்பனர்தான் அதை வழிநடத்தினார். இதில் வேடிக்கையும் கொடுமையும் என்னவென்றால், சுப்பிரமணிய சிவா, தன் சொந்தப் பணத்தில் அந்த குருகுலத்தை நடத்த வில்லை; இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிதியைக் கொண்டுதான் நடத்தினார். அந்தக் குருகுலத்தில் பள்ளர்-பறையர் குல மாணவர்களுக்கு அடியோடு இடம் இல்லை. இந்த அக்கிரமத்திற்கும் கொடுமைக்கும் துணைநிற்பது சனாதனம்தான்.

இந்த சாதி ஏற்றத்தாழ்வை எதிர்த்துதான், தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார்.

பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும்; கவுண்டர், செட்டியார், பிள்ளைமார், நாயுடு, நாடார், வன்னியர், கோனார், மூப்பனார், படையாச்சி, முதலியார், சக்கிலியர், பள்ளர், பறையர் உள்ளிட்ட மற்ற அனைத்துச் சாதியினரும் சூத்திரர்கள் என்பதால் இவர்கள் படிக்கவேக் கூடாது; இறைவனின் தூதர்களான பார்ப்பனர்களுக்கு குற்றேவல் புரியவும் தொண்டூழியம் செய்யவும்தான் இவர்கள் இறைவனால் படைக்கப்பட்டுள்ளனர்.

இதைமீறி எந்த சூத்திரனாவது படித்தால், அவன் நாக்கை அறுக்க வேண்டும்; அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று மனுதர்மத்தில் சொல்லப்பட்டுள்ளது உண்மையா, இல்லையா?

இப்படி சாதி பார்த்து, அதாவது பார்ப்பனர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்; மற்ற அனைவரும் சூத்திரர்கள், கீழானவர்கள் என்று ரிக் வேதத்தில் எழுதி வைத்துக் கொண்டு அதன்படி செயல்படுகிறார்களே, இந்த பிராமணிய சாதிவெறி மேலாண்மைக்குப் பெயர்தான் சனாதனம் என்பது, மஇகா-விற்கு விளங்காமல் போனது வெட்கக்கேடானது.

கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்; மந்திரம் பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டது; அதனால், சூத்திரர்கள் அனைவரும் பிராமணர்களுக்கு கீழானவர் என்னும் கொள்கை எதிர்க்கும் உதயநிதியை எதிர்க்கும் மஇகா, ஓர் அரசியல் இயக்கமா அல்லது சங்கரமடத்திற்கு துதிபாடும் சந்நிதான மடமா?

Parpanam

புது டில்லியில் இன்றளவில்(2023 செப்டம்பர்) மத்திய அமைச்சரவை செயலாளர்களாக இருப்பவர்கள் 90 பேர்; இவர்களில் 87 பேர் பிராமணர்கள்; மக்கள் தொகையில் சுமார் 3 விழுக்காட்டினராக இருக்கும் இவர்கள், நாட்டில் உள்ள நீதிபதிகள் உள்ளிட்ட உயர்நிலை பொறுப்புகளை மொத்தமாக வளைத்துக் கொள்ளும் வித்தைக்கு துணைபோவது சனாதனக் கொள்கை;

2018 முதல் 2023 ஜூலை 17-ஆம் நாள்வரை இந்தியாவின் உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 604 பேர்; இவர்களில் 458 பேர் பார்ப்பனர்கள் என்பதை அந்த நாட்டின் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் இந்திய நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளது எதைக் காட்டுகிறது?. மொத்த நீதிபதிகள் நியமனத்தில் முக்கால் பங்கிற்கு மேலாக பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலாவுதீன் கில்ஜிக்கு வாய்த்த அடிமை மாலிக்காபூர் எப்படியோ, சோனியாவிற்கு கிடைத்த அரசியல் அடிமை மன் மோகன் சிங் எப்படியோ, ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் வாய்த்த பச்சை அடிமைகளான இடைப்பாடி பழனிச்சாமி-ஓ.பன்னீர்செல்வம் இரட்டையர் எப்படியோ அப்படித்தான் சனாதனம்-மனுதர்மம் ஆகியவற்றின் பாதுகாப்புத் தலமான ராஷ்டிரிய சுயசேவை சங்கம்-ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அடிபணியும் மோடியும்.

மாலிக்காபூர், திருநம்பி(பேடி)யாக இருந்தபோதும், ஒரு கட்டத்தில் அலாவுதீன் கில்ஜியை கொன்றுவிட்டு, டில்லி பாதுஷா நாற்காலியில் உட்கார்ந்து பார்க்கும் துணிவு இருந்தது; மன் மோகன் சிங்கால் சொந்தக்காலில் நிற்க முடிந்தது; மோடியால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன் இனத்து குஜராத்தியரை உலகப் பணக்காரர் தரத்திற்கு உயர்த்த முடிந்தது. ஆனால், பன்னீருக்கும் பழனிக்கும் பணம் சேர்க்கத் தெரிந்தாலும் எந்த நாளும் ஜெயா-சசி கால்களில் விழுந்து கிடந்ததால், அவர்கள் அடிமையிலும் அடிமை; பச்சை அடிமை;

இத்தகைய அரசியல் அடிமைகளைப் போல, மஇகா-வும் ஏன் மத அடிமையாக உருமாறி ஆரியத்துக்கு அடிச்சேவகம் புரிய தலைப்படுகின்றது என்பது புரியவில்லை.

பிரசவ வேதனையால் துடித்த ஒரு சேரிப் பெண்ணை, அக்ரகாரத்தின் வழியாக தன் வாகனத்தில் ஏற்றிச் சென்ற திருநெல்வேலி ஆட்சியாளர் ஆஷ் துரை, அக்ரகாரத்தைத் தீட்டாக்கி விட்டார் என்றுகூறி, அவரை சுப்பையா ஐயர் சுட்டுக் கொன்றார். ஆனால், அந்த சாதி வெறியன், விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சி நாதன் என்று உருமாறிய வித்தை மஇகா-வுக்குத் தெரியுமா?

இந்திய அரசியல் சாசன வரைவுக் குழுவுக்கு தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர், பள்ளி நாட்களில் ஊர்ப் பொது குளத்தில் குளித்ததால், அந்தக் குளமே தீட்டாகிவிட்டது என்று 108 பார்ப்பனர்கள் 108 குடங்களில் கங்கையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து குளத்திற்கு தீட்டு கழித்தனர். இந்தச் செயலுக்கு அடிப்படை சனாதனம்.

ஆதித்த சோழன், நந்தனார், வள்ளலார் அடிகள், சர் ஏ.டி.பன்னீர்செல்வம், நேதாஜி, காந்தி அடிகள் உள்ளிட்டோரின் மரணங்களில் ரத்தக்கறைபடிந்த கரங்கள் எந்தத் தரப்பினருடையது என்பது விவரம் அறிந்தோருக்குத் தெரியும்;

கடந்த 10 ஆண்டுகளாக, இந்திய அமைச்சரவையில் ஒரேயொரு தமிழர்கூட கேபினட் அமைச்சராக இல்லை என்பதும் இது, தமிழினத்தையும் தமிழையும் அப்பட்டமாக அவதிக்கும் செயல் என்பதும் மஇகா-விற்கு உறைக்கவில்லை; பார்ப்பனிய ஆதிக்கமும் பார்ப்பனர்கள் வகுத்த சனாதனமும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று உதயநிதி முழங்கினால், அதற்குமட்டும் மஇகா-விற்கு பொத்துக்கொண்டு வருகிறதென்றால், மஇகா என்ன அரசியல் கட்சியா அல்லது ஆரியத்திற்கு வெண்சாமரம் விசி அதன் அடியைத் தாங்கிப் பிடிக்கும் சந்நிதான மடக் கூட்டமா?

மலேசிய இந்து சங்கத்தின் மேநாள் தலைவர் டத்தோ அ.வைத்திலிங்கத்துடன் அண்மையில் பேசிக்கொண்டிருந்தபோது, இதுபற்றிய பேச்சு வந்தது, அவர் பட்டென சொன்னார்; “ஜெய்சங்கரும் நிர்மலா சீத்தாராமனும் தமிழ் நாட்டின் சார்பாகத்தானே அமைச்சர்களாக உள்ளனர்” என்றார் அதிமேதாவித்தனமாக; அந்த இருவரும் பார்ப்பனர்கள்; தமிழர் கிடையாது என்று நான் மறுமொழி கூறியதும், அவர்கள் தமிழ்தானே பேசுகிறார்கள் என்று அவர்களின் பிரதிநிதியைப் போல வாதிட்டார்.

“நீங்கள் மலாய் மொழி பேசுகிறீர்கள்; அதற்காக உங்களை மலாய்க்காரர் என்று அச்சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? நாளையே நீங்கள் சீன மொழி பேசினால், நீங்கள் சீனராகிவிடுவீரா?” என்று நானும் விடாமல் அவரை மடக்கியபோது,

பதில்சொல்ல முடியாத அவர், உடனே, “இப்படி யெல்லாம் பேசுவதால்தான் நீங்கள் இன்னமும் முன்னேறவில்லை” என்றார்; நான் மிகவும் நிதானமாக, “அப்படி யென்றால் இத்துணைக் காலமும் நீங்கள் என்னுடன் பேசியதும் பழகியதும் அன்பின் அடிப்படையில் இல்லையா என்றதும் நாணப்பட்ட அவர், வேண்டுமென்றால் வளர்ச்சி அடையவில்லை என்று எடுத்துக் கொள்ளமாமா என்று கேட்டார். இரண்டும் ஒன்றுதான் என்று நான் மறுமொழி கூறினேன்.

சனாதனப் பித்தும் ஆர்.எஸ்.எஸ். தாக்கமும் தலைக்கு ஏறியுள்ளதால்தான், சொந்த இனத்தினரையே இப்படி தாக்கவும் தாழ்த்தவும் முடிகிறது.

இற்றை நாட்களில், பொதுவாக இந்து சமயத்தினர் இறைவனை வழிபட்டு நல்லருள் நாடி, நல்ல வண்ணம் வாழ வேண்டும் என்பதைவிட சனாதனத்தை உயர்த்திப் பிடித்து, பார்ப்பன அடிமையாக இருப்பதையும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு உரமாக இருப்பதையுமே கருத்தாகக் கொள்கின்றனர். இப்பொழுது, மஇகா-வினரும் அவ்வாறு உருமாறிவிட்டனர் போலும்.

RSS

சனாதனத்துக்கு ஆதராவக முரசு கொட்டும் மஇகாவினர் காவடி சுமக்கலாம்; பால் குடம் ஏந்தலாம்; ஆனால், சங்கர மடத்தில் சங்கராச்சாரிக்கு இணையாக சரியாசனத்தில் இவர்களால் அமரமுடியாது. இவர்கள் மட்டுமல்ல்; ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனாக இருக்கட்டும்; குடியரசுத் தலைவராக இருக்கும் முர்முவாக இருக்கும் எவராக இருந்தாலும், சூத்திரர் என்றால் தரையில்தான் அமர வேண்டும். மோடி தலைமையிலான நிருவாகம், இப்பொழுது கட்டியுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அன்றைய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை அழைக்கவில்லை; அண்மைய திறப்பு விழாவிற்கும் இன்றைய குடியரசுத் தலைவர் முர்முவை அழைக்கவில்லை. காரணம், இருவரும் பட்டியல் இன, பழங்குடி இனங்களைச் சேர்ந்தவர்கள்.

சிரிப்பு நடிகனாக இருந்தாலும் ஒய்.ஜி. மகேந்திரன் பார்ப்பனர் என்பதால், அவர் சங்கராச்சாரியாருக்கு சமமாக நாற்காலியில் அமரமுடியும்; அதுதான் சனாதனம் என்பது மஇகா-விற்கு இத்தனைக் காலமும் புரியாமல் இருக்கிறது.

இப்போதைய புதுடில்லி அரசு, ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது; அதன்படி, ஒரு பிராமணரின் ஆண்டு வருமானம் 8இலட்சம் ரூபாய் அல்லது மாத வருமானம் 66ஆயிர ரூபாயாக அல்லது நாள் வருமானமாக 2,200 ரூபாய் கிடைத்தால் அவர் உயர்சாதி ஏழையாக வகைப்படுத்தப்படுவார்; அவரின் பிள்ளைக்கு அரசாங்க கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்;

இதே அளவு ஊதியத்தை மற்ற சாதியினர், அதாவது சூத்திரர்கள் பெற்றால் அவர்கள் பணக்காரர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரச சலுகை எதுவும் வழங்கப்படாது என்று இந்த 21-ஆம் நூற்றாண்டில், கடந்த 2019-ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான பிராமண ஆதரவு அரசு சட்டம் இயற்றி உள்ளது.

குடிப்பது ஒரேத் தண்ணீர்; சுவாசிப்பது ஒரேக் காற்று; வாழ்விடமும் ஓரிடம்; ஆனால், சாதிக்கேற்ப தனித்தனி சட்டத்தை இயற்றமுடிகிறதென்றால், இந்த அளவுகோலை நியாயப்படுத்துவதுதான் சனாதனம்.

ஒரு வன்னியரோ அல்லது ரெட்டியாரோ அவர் நகரத்தில் வசித்தால் ஒரு நாளில் 32ரூபாய் மட்டும் சம்பாதித்தால் அவர் ஏழை; அவரே கிராமப்புறத்தில் இருந்தால் 26ரூபாய் மட்டும் ஈட்டினால் அவர் ஏழை என்று 2011-ஆம் ஆண்டு இந்தியச் சட்டம் கூறுகிறது.

இப்படி யெல்லாம் எங்கேயும் எப்போதும் ஆள் பார்த்து-சாதி பார்த்து ஆளாளுக்கு தனித்தனி நீதி சொல்லும் சனாதனத்தை கட்டியணைத்து அழவேண்டிய அவசியம் மஇகா-விற்கு ஏன் நேர்ந்தது?.

மஇகா-வின் கவனத்திற்கு இன்னொரு தகவல்; 2017 பிப்ரவரி முதல் வாரத்தில் மஇகா-வின் அன்றைய தேசியத் தலைவர், இன்றைய தேசியத் தலைவர், உட்பட அடுத்தக்கட்டத் தலைவர்கள் எல்லாம் வரிசையாக தமிழ் நாட்டின் முதல்வராக பதவியேற்க இருந்த ஒரேத் தமிழச்சியான சசிகலாவை ஒடோடிச் சென்று மலர்க்கொத்துடன் வாழ்த்தி வந்தனர்.

கடைசியில் அவர் முதல்வராக முடியவில்லை. பதவிப் பிரமானம் செய்துவைக்க வேண்டிய ஆளுநர், சி.வித்யாசாகர் ராவ் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார் என்பது சுமார் 10 பத்து நாட்களுக்கு ஊருக்கும் உலகுக்கும் தெரியாமல் இருந்தது. மராத்திய மாநிலத்துக்கும் அவர்தான் ஆளுநர்.

இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான மராத்தியத்தின் ஆளுநராக இருந்த அவரை, தமிழ் நாட்டுக்கும் இடைக்கால ஆளுநராக நியமிக்கப்பட்டதில் ஓர் உள்ளடி அரசியல் இருந்தது.

ஏதோவொரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த தீர்ப்பை தூசிதட்டி எடுத்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்றும் ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் மற்ற மூவரும் உடனே சிறக்குச் செல்லவேண்டும் என்றும் 2014 பிப்ரவரி 14-ஆம் நாள், அறிவிப்பு வெளியானது.

அதற்கு அடுத்த நாள்தான் வித்யாசாகர் எங்கிருந்தோ தமிழ்நாட்டுக்குத் திரும்பினார். அந்த நேரத்தில், சசிகலா கர்நாடக மாநிலத்தின் பள்ளி அக்ரகார சிறைச்சாலைக்கு சென்று கொண்டிருந்தார்.

மேல் முறையீட்டு அநீதிபதி குமாரசாமியால் இந்த நால்வரும் விடுவிக்கப்பட்டது செல்லாது என்றும் விசாரணை நீதிபதி ஜோன் மைக்கேல் டி குன்ஹா அளித்தத் தீர்ப்பு சரியானதுதான் என்பதால் தண்டத்தையும் சிறைத் தண்டனையையும் ஏ-1 குற்றவாளி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் ஏற்றுதான் ஆகவேண்டும் என்றும் புதுடில்லி உச்ச நீதிமன்றம் மறுஉறுதி செய்து வழங்கப்பட்டத் தீர்ப்பு 2016 ஜூன் முதல் உறங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கோப்புதான், 2017 பிப்ரவரி 14-இல் உயிர்த்தெழுந்து, சசிகலாவின் முதல்வர் பதவியை காவு வாங்கியது.

இன்று தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லை; இருக்கின்ற ஒரு மாநிலத்திலும் மலையாளப் பெண் வி.என்.ஜானகி முதல்வராகலாம்; கன்னடத்து பார்ப்பனப் பெண் ஜெயலலிதா முதல்வராகலாம்; ஆனால், ஒரு தமிழச்சியால் மட்டும் முடியாமல் போனது எதனால்?

இம்மட்டோ?
ஓலைச் சுவடியில் பதிக்கப்பெற்ற தமிழிலக்கியப் பெட்டகங்கள் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டன; தண்ணீர்ல் விடப்பட்டன; பக்தி இலக்கியமாக இருந்தாலும்கூட அது தமிழ் என்பதால் கரையானுக்கு, அதுவும் சிதம்பர சன்னிதானத்திலேயே இரையாக்கப்பட்டது. அதிலிருந்து ராஜராஜ சோழனால் மீட்கப்பட்ட மிச்சசொச்சம்தான் இன்றைய பன்னிரு திருமுறைப் பாடல்கள்.

இவை யெல்லாம் எப்படி நேர்ந்தன என்பதை மஇகா ஆழமாக சிந்தித்தால் சனாதனத்தின் சூட்சுமம் புரியவரும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் நாட்டின் முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம் ஏற்பாடு செய்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி பேசிய கருத்து இந்தியா முழுவதும் அது பிரதிபலித்து, இப்பொழுது அது ஓய்ந்துபோயுள்ள நிலையில், மஇகா இவ்வளவு தாமதமாக துயில் களைந்து, கண்களை கசக்கியபடி இதில் ஆர்வம் காட்டுவது சரியா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

Uthayanidhi Stalin

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழருக்கும் தமிழுக்கும் எதிராக ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அடியறுப்பு வேலையை அயராது ஆற்றிவரும் அடாத ஆரிய சனாதனத்திற்கு மஇகா முட்டுகொடுப்பது அநியாயம்; அநீதி; அட்டூழியம்; பச்சையான தமிழ் துரோகம்.

மஇகா, தன் மனக் கண்ணைத் திறந்து தன் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முடியாதுபோனால்.. .,

நாளைய வரலாறு தீர்ப்பெழுதட்டும்!!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles