
🔊To listen to this news in Tamil, Please select the text.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, காசா முனை மீது இஸ்ரேல் படைகள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. 2ம் நாளாக தீவிரமடைந்துள்ள போரில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, காசாவை தரைமட்டமாக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சூளூரைத்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை பிரித்து கடந்த 1948ம் ஆண்டு புதிய நாடாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்னை தீராமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நேற்று முன்தினம் அதிகாலை இஸ்ரேல் மீது எதிர்பாராத திடீர் தாக்குதலை நடத்தியது. வெடிகுண்டு வைத்து எல்லை வேலிகளை தகர்த்த ஹமாஸ் தீவிரவாதிகள் அதன் வழியாக இருசக்கர வாகனத்திலும், பாரா கிளைடிங்கில் வான் வழியாகவும், சக்திவாய்ந்த படகுகள் மூலம் கடல் மார்க்கமாகவும் எல்லையில் உள்ள 22 நகரங்களில் ஊடுருவினர். அங்கு கண்மூடித்தனமாக பலரை சுட்டுக் கொன்றனர். வெளிநாட்டவர்கள் உட்பட ஏராளமான இஸ்ரேலியர்களை பணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். மேலும், 5,000 ராக்கெட்களை ஏவி இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் தாக்குதலும் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக போரை பிரகடனப்படுத்தினார். இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் காசாவை முற்றுகையிட்டு குண்டு மழை பொழிந்தன. ஹமாஸ் தீவிரவாதிகள் ஊடுருவிய தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு ராணுவம் விரைந்தது.
இந்நிலையில், 2வது நாளாக இப்போர் நேற்று தீவிரமடைந்தது. ஹமாஸ் தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என ஏற்கனவே எச்சரித்திருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, காசாவை தரைமட்டமாக்கும் வரை ஓய மாட்டோம் என நேற்று சூளூரைத்தார். அதே போல், நேற்று முன்தினம் இரவிலிருந்து விடியவிடிய காசா மீது 3,000 ராக்கெட்களை ஏவி இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் காசாவின் பல குடியிருப்பு கட்டிடங்கள் தகர்ந்தன. 14 மாடி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் நொறுங்கின. காசாவின் 462 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது. முன்னதாக, இஸ்ரேல் எச்சரிக்கையை தொடர்ந்து, 20,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காசாவின் உள் பகுதியில் உள்ள ஐநா நடத்தும் பள்ளிகளில் தஞ்சமடைந்தனர். ஒருபுறம் வான்வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவம், மறுபுறம் எல்லை நகரங்களில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். பல தெருக்களிலும் துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
காசா எல்லைக்கு அருகில் உள்ள ஒவ்வொரு பகுதியாக இஸ்ரேல் துருப்புக்கள் நகர்ந்து வருவதாகவும், அங்கு அவர்கள் அனைத்து பொதுமக்களையும் வெளியேற்றவும், தீவிரவாதிகளை தேடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டில் பதுங்கியுள்ள ஒரு தீவிரவாதியையும் உயிருடன் விடமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இந்த 2 நாள் சண்டையில் இஸ்ரேல் தரப்பில் 600 பேர் பலியான அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. காசா மீதான பயங்கர தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 400 பேர் வரை இறந்துள்ளனர். இதன் மூலம் 2 நாளில் 1000 பேர் பலியாகி உள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல், பாலஸ்தீன மோதலில் இவ்வளவு உயிர்கள் பலியாவது இதுவே முதல் முறை. காசாவிற்கான மின்சாரத்தை இஸ்ரேல் துண்டித்துள்ளதால், மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர். இனி அடுத்த பல நாட்களுக்கு எரிபொருள் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருட்களும் காசாவுக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்காது. இந்த போர் முடிவுக்கு வர நீண்ட நாள் எடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனால் தரை வழியாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் நுழையும் பட்சத்தில் அது அதிகப்படியான உயிர்பலிக்கு வழிவகுக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
அதே சமயம், ஹமாஸ் தீவிரவாதிகள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரை பிடித்துச் சென்றிருப்பதாகவும், பணயக் கைதிகளை வைத்து இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை விடுவிக்க பேரம் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பணயக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாட்டவர்களும் உள்ளனர். இதனால் சர்வதேச நாடுகள் இதில் கவலை கொண்டுள்ளன. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி உதவுவதாக அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாலஸ்தீனத்தை பாதுகாக்க முழு உரிமை உண்டு என ஹமாசுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது.
