34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தரை-வான்-கடல் வழியாக முழு தாக்குதலுக்கு தயார் நிலையில் இஸ்ரேல் படைகள்: காசா எல்லைகளில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகள், எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பதற்றம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்ட தரை, வான், கடல் வழியாக முழு அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேலின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் எல்லைக்கு மிக நெருக்கமாக முன்னேறி உள்ளன. எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், காசாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு, கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாசை அழிக்க காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது.

இதுவரை வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், முதல் முறையாக தரை வழி தாக்குதலுக்கு ஆயத்தமாகி உள்ள நிலையில் 9வது நாளாக இப்போர் நேற்றும் தொடர்ந்தது. காசாவின் வடக்கு பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை 24 மணி நேர கெடு விதித்தது. இதற்காக பாதுகாப்பான பாதைகளையும் அறிவித்தது. அந்த வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கார்களிலும், லாரிகளிலும், கழுதை வண்டிகளிலும் பயணித்து வருகின்றனர். நேற்று முன்தினமே இந்த கெடு முடிந்தாலும், இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து அவகாசத்தை நீட்டித்து வருகிறது.

நேற்று காலையிலும் கூடுதலாக 3 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதிகப்படியான மக்கள் தெற்கு நோக்கி செல்ல விரும்புவதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. வடக்கு பகுதியில் தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. அங்கு பொதுமக்களை மனித கேடயமாக ஹமாஸ் படையினர் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், முதலில் பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால் எப்போது தரை வழிதாக்குதல் நடத்தப்படும் என்பதை இஸ்ரேல் ராணுவம் உறுதியாக தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் அதன் பீரங்கிகள் படைகள் அனைத்தும் காசா எல்லைக்கு மிக நெருக்கமாக நகர்த்தப்பட்டுள்ளன.

தரை, வான்வழி, கடல் மார்க்கம் என மும்முனையிலும் முழு அளவில் தாக்குதல் நடத்த இஸ்ரேலின் முப்படைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. எந்த நேரமும் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கும் என்பதால் காசாவில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. தரை வழி தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதன் விளைவுகள் சர்வதேச அளவில் எதிரொலிக்கும் என்பதால் அரசியல் முடிவையும் இஸ்ரேல் ராணுவம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. உள்நாட்டு தலைவர்களுடனும், அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளுடனும் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பிறகே தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், தெற்கு நோக்கி மக்களை செல்ல விடாமல் சாலையில் தடுப்புகள் அமைத்து ஹமாஸ் படை தடுத்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் மற்றொரு போர் கப்பல் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், தோகாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரதுல்லாஹினை சந்தித்து பேசி உள்ளார்.

இப்போரை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தாவிட்டால் பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேலும், அண்டை நாடான லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா படையினர் நேற்றும் இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால், லெபனான் எல்லையை இஸ்ரேல் மூடியுள்ளது. காசாவை தொடர்ந்து லெபனான் எல்லை அடுத்த போர்க்களாக மாறி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles