29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

யாசர் அராஃபாத்தையும் பாலஸ்தீனத்தையும்அங்கீகரித்த முதல் உலகத் தலைவர் இந்திரா காந்தி!

🔥 Views : 5
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

(நவம்பர் 11, அராஃபாத் 19-ஆவது நினைவு நாள் சிந்தனை)

-நக்கீரன்

Yaser Arafat

(யாசர் அராஃபாத்தின் புகழ்பெற்ற வாசகம்: “என்னுடை ஒரு கையில் ஆலிவ் மரக் கிளையையும் இன்னொரு கையில் விடுதலைப் போராளிக்கான துப்பாக்கியையும் ஏந்தி இருக்கிறேன்; எந்த நிலையிலும் ஆலிவ் இலைக் கொத்து என் கையைவிட்டு நழுவும்படி செய்துவிடாதீர்கள்”.)

நெய் என்ற பண்டம் இல்லாவிட்டால், மனித குலத்திற்கு வாழ்வே அற்றுவிடும்.

பாலில் இருந்து கிடைக்கும் நெய், வெண்மையாக இருப்பதால் அதற்கு வெண்ணெய் என்பது காரணப் பெயராக அமைந்துவிட்டது. அந்த வெண்ணெய்யைக் காய்ச்சினால் கிடைப்பது நெய்.

அதைப்போல எள்ளைப் பிழிந்து எடுக்கும் நெய்க்கு (எள்+நெய்) எண்ணெய் என்பது இலக்கணப் பெயராக வாய்த்துவிட்டது. சமையலுக்கு, மருத்துவத்திற்கு என்றெல்லாம் பண்டைய தமிழர் வாழ்வில் இவ்விரு நெய்க்கும் முக்கிய இடமுண்டு; வீட்டில் விளக்கேற்றவும் வழிபாட்டு தலத்தில் ஒளிப் பந்தத்திற்கும் எரி நெய்யாக இவ்விரு நெய்யுமே பயன்படுத்தப்பட்டன.

எள் நெய்யைவிட பால் நெய் மிகவும் மலிவாகக் கிடைத்தது அந்நாட்களில்; இப்பொழுது, நிலைமை தலைகீழாக மா|றிவிட்டது.

காலப்போக்கில் எள் நெய்யின் பெயரான எண்ணெய் என்பதே செம்பனை விதை, தேங்காய் வித்து, ஆமணக்கு விதை, இலுப்பைக் கொட்டை, வேர்க்கடலை, வேப்பங்கொட்டை உள்ளிட்டவற்றில் இருந்து எடுக்கப்படும் நெய்க்கெல்லாம் பொதுப்பெயராக அமைந்துவிட்டது.

ஆனால் இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட அரபு உலகம் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆலிவ் நெய்தான் எல்லாமுமாக உள்ளது. சமையல், மருத்துவம், வீதி விளக்குகள் எரிய என்றெல்லாம் அனைத்துக்குமான நெய்யாக ஆலிவ் மரக் கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் பயன்படுகிறது.

தமிழில் ஒலிவ மரம் என்று அழைக்கப்படும் இந்த ஆலிவ் மரம் தங்க மரம் எனவும் ஆலிவ் மர இலையில் இருந்து எடுக்கப்படும் ஆலிவ் எண்ணெய் ஏராளமான மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளதால் ‘தங்க திரவம்’ எனவும் மேலையுலக மக்களிடம் மதிப்பு பெற்றுள்ளது. ஒலிம்பிக் என்னும் சொல்லே இந்த மரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவானது; ஒலிவ மரத்தின் இலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மகுடம்தான் ஒலிம்பிக் விளையாட்டு வெற்றியாளர்களுக்கு தொடக்கக் காலத்தில் அணிவிக்கப் பட்டன.

இஸ்ரேல்-பாலஸ்தீன மண்டலத்தில் ஆலிவ் மரங்களைக் கொண்ட ஒரு மலையே இருக்கிறது. ஐநா மன்றத்தின் சின்னத்தில் இடம்பெற்றுள்ள இலைக் கொத்து ஆலிவ் மரக் கொத்துதான்; கிரேக்க தேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த ஆலிவ் மரம் சமாதானத்தின் சின்னமாகவும் நட்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

அதனால்தான், 1983 மார்ச் மாதத்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அன்றைய காலக்கட்டத்தில் உலகத் தலைவராகவும் இந்தியாவின் பிரதமராகவும் விளங்கிய இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று புதுடில்லிக்கு வந்த யாசர் அராஃபாத், உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் தான் சொல்லும் கருத்தை புது டில்லியிலும் சொல்லத் தவறவில்லை;

என்னுடை ஒரு கையில் சமாதானத்தின் சின்னமான ஆலிவ் மரக் கிளையையும் இன்னொரு கையில் விடுதலைப் போராளிக்கான துப்பாக்கியையும் ஏந்தி இருக்கிறேன்; எந்த நிலையிலும் ஆலிவ் இலைக் கொத்து என் கைகளைவிட்டு நழுவிவிடும்படி செய்துவிடாதீர்கள் என்பதுதான் அந்தப் பொன்வாசகம்.

பாலஸ்தீன விடுதலைக்காக தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்த அந்த விடுதலைப் போராளிக்கு இன்று 19-ஆவது நினைவு நாள்.

பாலஸ்தீன தேசத்தையும் யாசர் அராஃபாத்தையும் அரபு மண்டலத்தைக் கடந்து முதன்முதலில் ஆதரித்த முதல் உலகத் தலைவர் இந்திரா காந்திதான். அத்தகைய இந்திரா காந்தியை, ஒரு கட்சியின்-நாட்டின் தலைவர், உலகத் தலைவர்களில் ஒருவர் என்னும் நிலையைக் கடந்து தன் சொந்த சகோதரியைப் போலக் கருதினார் யாசர்.

1974யிலேயே பாலஸ்தீன தேசத்திற்கான அலுவலகத்தை புது டில்லியில் அமைக்க அனுமதித்தவர் இந்திரா காந்தி; அத்துடன் பாலஸ்தீன மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம், பொறியியல் துறைகளில் மேற்கல்வி தொடரவும் அனுமதித்தார் இந்திரா காந்தி.

இன்னும் ஒருபடி மேலாகக் குறிப்பிட வேண்டுமென்றால், அண்ணல் மகாத்மா காந்தி, ஆசிய சோதி-அரசியல் அமைதிப் புறா பண்டித ஜவஹர்லால் நேரு ஆகிய பெருந்தலைவர்கள்கூட பாலஸ்தீனத்தை ஆதரித்தனர். உலக மக்களைப் போல பாலஸ்தீன மக்களும் தங்களை ஆகிரமித்துள்ளவர்களிடம் இருந்து விடுபட்டு விடுதலை தாகத்தை தணித்துக்கொள்ள உரிமை பெற்றவர்கள் என்று சொல்லி, ஆதிக்க அரசியலுக்கு முடிவுகாண விரும்பினர்.

உலக நாடுகள் இன்றிருப்பதைப்போல அன்றிருக்கவில்லை; குறிப்பாக 1940-களின் பிற்பகுதியில் 2-ஆம் உலகப் போர் முடிந்த நிலையில் பெரும்பாலான நாடுகள் விடுதலை சுவாசத்திற்கு ஏங்கிக் கொண்டிருந்த பருவம் அது; புரட்சித் தலைவர்களான சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோ, யாசர் அராபாத் போன்ற இளம் தலைவர்கள் உலக அளவில் இளைய சமூகத்தினரால் கொண்டாடப்பட்டனர்.

கலைஞர் மு. கருணாநிதி ஒருமுறை தமிழக திராவிடர்க் கழகத் தலைவர் கி.வீரமணியைப் பார்த்து “ஆசையாக இருக்கிறது; தம்பி என்று அழைக்க” என்று சொன்னதைப் போல, இந்திரா காந்தியும் சொன்னார் “ஆசையாக இருக்கிறது; அராஃபாத்தை தம்பி என்றழைக்க” என்று; அதுவும் உலகத் தலைவர்கள் முன்னிலையில்.. .

துப்பாக்கியை ஏந்திய வண்ணம் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடினாலும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அந்த முன்னாள் தலைவர், அமைதிக்காக பாடுபட்டதுதான் அதிகம்; அதனால்தான், துப்பாக்கியின் தாக்கத்தைவிட, ஆலிவ் மர சிந்தனை அராபாத்தின் மனதில் அதிகமாகக் குடி கொண்டிருந்தது.

அன்றைய அரசியல், மதம் கடந்த அரசியலாக இருந்தது; அதன் அடிப்படையில்தான் ஜெருசலத்து யூத மக்களும் பாலஸ்தீனத்தின் பாரம்பரிய இஸ்லாமிய மக்களும் ஒருமித்து அமைதியாக சகவாழ்வு வாழவேண்டும். இந்த மண்டலத்திற்கு அமைதி சொந்தமாக வேண்டும்; அது உருவாகி நிலைபெற வேண்டும் என்பதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாடு பட்டார்; இத்தனைக்கும் 1948-இல் இஸ்ரேல்-அரபு போர் வெடித்த நேரத்தில் தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து அரபு நாடுகளுக்கு ஆதரவாக போர்க்களம் புகுந்தவர் யாசர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டட பொறியியலாளர் படிப்பை முடித்து மேற்கல்வியைத் தொடர்ந்த பொழுதுதான், அதைத் துறந்து துப்பாக்கி ஏந்த தலைப்பட்டார் அராபாத்.

அப்படிப்பட்ட அராபாத், காலம் தந்த படிப்பினையாலும் காயாக இருந்து கனிந்ததாலும் பாலஸ்தீன மக்களின் அமைதியான வாழ்வைக் கருத்தில் கொண்டு அமைதிவழி நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்தார்.

சுயாட்சி பாலஸ்தீனத்தை இலக்காகக் கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான அவர், பின்னாட்களில் மனம்மாறி அதே இஸ்ரேலுடன் பலகட்ட அமைதிப் பேச்சை முன்னெடுத்தார். பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலுக்கும் முடிவு காண பெரிதும் பாடுபட்டார். 1991-மெட்ரிட் மாநாடு, 1993 ஒஸ்லோ உடன்படிக்கை, 2000- காம்ட் டேவிட் உச்சிநிலை மாநாடு ஆகியன அதற்கான சான்றாகும்.

இதன் அடைப்படையில்தான் அவருக்கு 1994-இல் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்த ஆண்டில் மூவருக்கு அமைதி நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது; அம்மூவரில் அராஃபாத்தும் ஒருவர்.

இராணுவ நடவடிக்கையைக் காட்டிலும் அமைதிவழிக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கிலேயே, ஃபாத்தா என்னும் அரசியல் இயக்கத்தை யாசர் உருவாக்கி, பாலஸ்தீனத்தில் தேர்தல் மூலம்வென்று ஆட்சியையும் நடத்தினார்.

பாலஸ்தீன ஆயுததாரி தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை உலக அரசியல் அரங்கு அப்போது கொண்டாடித் தீர்த்தது. அப்படி இருந்தும் அதன் பின் முப்பது ஆண்டுகளைக் கடந்தபின்னும் அந்த பூமிக்கு இன்னும் அமைதி வசமாகாமல் போனது ஏன்?

இப்பொழுது, பாலஸ்தீனத்தில் இன்னொரு முள்ளி வாய்க்கால் ஏற்பட்டு வருவதற்கு என்ன காரணம்?

2004-இல் அராபாத் மறைந்தபின், பாலஸ்தீனத்தின் போக்கு அடியோடு மாறிவிட்டது.

‘அபூ அம்மார்’ என்று யாசர் அராஃபாத்தை செல்லமாகவும் வாஞ்சையுடன் அழைத்த பாலஸ்தீன மக்கள், யாசர் மறைவுக்குப் பின் அவர் உருவாக்கிய மதச்சார்பற்ற ஃபாத்தா கட்சியை 2006 தேர்தலில் தோற்கடித்தனர். அதிகாரத்தை இழந்த பாத்தாக் கட்சியின் தாயான பாலஸ்தீன விடுதலை இயக்கம்-PLO-வும் வலுவிழக்கத் தொடங்கியது.

ஹமாஸ் இயக்கத்தை அரசியல் கட்சியா, விடுதலைப் போராட்ட இயக்கமா, தலைமறைவு தாக்குதலை மேற்கொள்ளும் ஆயுதக் குழுவா என்று எந்த வகையாலும் வரையறுக்க முடியவில்லை.

ஆனால், இஸ்ரேல் அதை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்காவும் ஒத்தூதுவதால் ஏற்கெனவே இருந்த முறுகல் நிலை இன்னும் முற்றிவிட்டது.

ஜெருசலத்தைக் குறிவைத்து இஸ்ரேலும் பாலஸ்தீனமும் மேற்கொள்ளும் பகடை ஆட்டம் நிரந்தர பகை, இருதரப்பு அவநவம்பிக்கை ஆகிய முற்கள்ளிச் செடிகளைத்தான் வளர்த்துள்ளது. ஜெருசலம் தங்களுடைய புனித தலம் என இருதரப்பும் சொந்தம் கொண்டாடுவதற்கு ஒரு முடிவு இல்லாமல் இருக்கிறது. ஐநா மன்றமோ தொட்டிலையும் ஆட்டுகிறது; பிள்ளையையும் கிள்ளி விடுகிறது.

இந்த நிலையில்தான்,கடந்த அக்டோடர் 7-ஆம் நாள் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலில் மேற்கொண்ட ஒரு சண்டித்தனத்தால் இன்று பல்லாயிரக் கணக்கில் பாலஸ்தீன மக்கள் மடிந்து வருகின்றனர்; இலட்சக் கணக்கானோர் இடம்பெயர்ந்து இருக்க இடமின்றி, உணவும் நீரும் கிட்டாமல் தாமரை இலைத் தண்ணீரைப்போல தங்களின் பூர்வீக மண்ணில் ஒட்டாமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேலின் இரகசிய உளவுப் பிரிவா அல்லது கொலைகார அடியாள் படையா என்று அடையாளம் காண முடியாத மொஸாத் படையின் கண்ணில் மண்ணைத் தூவிய ஹமாஸ் இயக்கத்தினர், பாலஸ்தீனத்தை ஒட்டியுள்ள இஸ்ரேலியப் பகுதியில் திடுதிப்பென நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி, நூற்றுக் கணக்கானோரைக் கொன்று தாய்-சேய், இளம்பெண்கள், முதியவர்கள் என பல நூற்றுக் கணக்கான பேரை பிணைப்பிடித்துச் சென்றனர்.

ஓர் இசை நிகழ்ச்சியில் பொது மக்கள் திரண்டிருந்த நேரத்தில் இப்படிப்பட்டத் தாக்குதலை நடத்திய ஹமாஸ், பின் விளைவை அவதானிக்கத் தவறியது மட்டுமல்ல; இஸ்ரேலின் எதிர்த்தாக்குதலை எதிர்கொள்ளவும் திராணியற்று நிற்கிறது.

பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மாள்வதும் கட்டடங்கள் வீழ்வதும் தொடரும் நிலையில் இப்பொழுது, ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதத் தயாரிப்புச் சாலையும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் சிதைந்துவிட்டது. தரைவழி தாக்குதலால் ஒட்டுமொத்த குடியிருப்புகளும் சரிந்து கிடக்கின்றன. ஆனாலும், தங்கள் மண்ணில் புகுந்துள்ள இஸ்ரேலியப் படையினர்மீது மறைந்திருந்து தாக்கிவிட்டு பின் ஓடிப் பதுங்கும் வேலையை ஹமாஸ் இயக்கம் தொடரத்தான் செய்கிறது.

இதைப்பற்றி கவலைப்படாத இஸ்ரேலின் வான் மற்றும் தரைப்படையினர், ஹமாஸ் இயக்கத்தின் சுரங்க அரங்கம், சுரங்கப் பாதை எங்கே என்றுதான தேடிக்கொண்டிருக்கின்றனர்.

ஹமாஸ் இயக்கத்தை தொண்டு நிறுவனமாக உருவாக்கிய அகமது யாசினை அராபாத் இறந்த 2004-ஆம் ஆண்டிலேயே குண்டுவீசி தீர்த்துக் கட்டியது இஸ்ரேல்; அவருக்குப் பின் தலைவராக வந்த அப்துல் அஜீஸும் படுகொலை செய்யப்பட்டார். மூன்றாவதாக தலைமைக்கு வந்த காலிட் மார்ஷல், பாலஸ்தீனமும் இஸ்ரேலும் இணைந்திருக்க வேண்டும்; இரு நிலத்து மக்களும் ஒருமித்து வாழ வேண்டும் என்ற யாசர் அராஃபாதின் கொள்கையை அடியோடு புறக்கணித்தார்.

இஸ்ரேலுடன் நேரடியாக மல்லுக்கு நிற்கும் ஹமாஸ் இயக்கத்திற்கு கத்தார், எகிப்து, ஈரான் போன்ற நாடுகள் தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டிவரும் நிலையில், இஸ்ரேலும் தன் பங்கிற்கு அரபு நாடுகளுடனான அரசதந்திர உறவுக்கு அடித்தளம் இட்டது.

இதன் அடிப்படையில்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலுடன் நட்பு கொண்டது. அடுத்து சௌதி அரேபியாயாவும் இஸ்ரேலுக்கு மலர்கொத்து கொடுக்க முன்வந்தது.

இஸ்ரேலின் இத்தகைய முன்னெடுப்பைக் கண்டு மனம்பொறுமிய ஹமாஸ், இருப்பு கொள்ளாமல் 2023 அக்டோடார் 7-ஆம் நாள், இஸ்ரேல்மீது அறிவிக்கப்படாத போரைத் தொடுத்தது.

அதற்கு பதில் வினையாக, இஸ்ரேலின் 6-ஆவது தவணை பிரதமராக பொறுப்பு வகிக்கும் நெட்டன்யாகு ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட போரை அதிரடியாகத் தொடர்ந்துள்ளார்.

பாலஸ்தீனர்கள் வாழும் இன்னொரு பகுதியான ஜோர்டான் நதியை ஒட்டியுள்ள மேற்குக் கரைக்கு இஸ்ரேல் எந்த இடையூறும் செய்வதில்லை; ஆனால் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனப் பகுதிமீதுதான் பலவித கட்டுப்பாட்டையும் நெருக்கடியையும் இஸ்ரேல் ஏற்படுத்தி வந்தது.

இப்பொழுது ஒட்டுமொத்த நிலையும் பழம் நழுவி புறக்கடையில் விழுந்த கதையாகி விட்டது.

மத்திய தரைக்கடலுக்கும் இஸ்ரேலுக்கும் நடுவே வெறும் 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு ஒரு நீண்ட வாள் போன்ற துண்டு நிலப்பகுதியான பாலஸ்தீனம், இன்னொரு முள்ளி வாய்க்காலாக உருமாறுகிறாதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

2009 மே மாதத்தில் தென் ஆசியாவில் உருவான ஈழத்தமிழர்தம் சோக வரலாறு, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரபுசார் மண்டலத்தில் பாலஸ்தீன மக்களின்மீது திணிக்கப்படுகிறதோ என்ற பேரச்சம் மனித ஆர்வலர்களின் உள்ளத்தை கௌவி உள்ளது.

முள்ளி வாய்க்காலில் சிக்கிய பொதுமக்கள், போராளிகள் எவரும் தப்பிக்க எப்படி வழி இல்லையோ அதைப் போலவே பாலஸ்தீனத்தின் தென்பகுதிக்கு நகர்ந்துள்ள பொதுமக்கள் மேலும் நகரவோ தப்பிக்கவோ வழியில்லை.

இந்த நேரத்தில் ஒன்றைமட்டும்தான் நினைக்கத் தோன்றுகிறது.

பேரறிஞர் அண்ணா இன்னும் ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தமிழகத்தின் போக்கு மட்டுமல்ல; இந்தியாவின் மொத்த அரசியலுமே மாறி இருக்கும்; அதைப்போல விடுதலைப் போராளியாக முளைவிட்டு, சமாதானப் புறாவாக கிளைவிட்ட யாசர் அராஃபாத் இன்னும் ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், பாலஸ்தீன மக்களுக்கு இன்று நேர்ந்துள்ள பேரவலம்-பெருங்கொடுமை தவிர்க்கப்பட்டிருக்குமோ என்பதுதான் அந்த எண்ணம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles