26.4 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சமூக வேந்தராகவும் உருமாற வேண்டிய தருணம் இது

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய இந்திய சமூகத்தின் பற்றுக்கோடாம் மஇகா-வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவர்களுக்கு முதற்கண் பிறந்த நாள் வாழ்த்து!

உலகத் தரமிக்க உயர்க்கல்வி நிலையமாக விளங்கும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 2-ஆவது வேந்தராகவும் விளங்குகின்ற எஸ்.ஏ. விக்னேஸ்வரன், இந்த மண்ணில் விடுதலை வேட்கையை முதன் முதலில் விதைத்த அரசியல் இயக்கத்தை வழிநடத்தும் பத்தாவது தலைவர் மட்டுமல்ல; இம்மலையக மண்வாழ் இந்திய சமுதாயத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காக மஇகா கட்டமைத்த ‘எம்ஐஇடி’ என்னும் கல்வி நிறுவனத்திற்கும் மாலுமியாகத் திகழ்கிறார்.

இதே ‘எம்ஐஇடி’ சார்பில் உருவாக்கப்பட்ட எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்குத்தான் அதன் செம்மாந்த வேந்தராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.

இன்று டிசம்பர் 16-ஆம் நாள் 59-ஆவது அகவையை எட்டும் இந்தத் தலைமகனாருக்கு, இன்றைய அரசியல் களம் பெரும்பொறுப்பை வழங்கி இருக்கிறது.

நாடு ஆங்கிலேய ஆதிக்க ஆட்சிக்கு ஆட்பட்டிருந்த நேரத்தில், மலாயாவில் விடுதலை வேட்கையை முதலில் விதைத்தக் கட்சி மஇகா-தான். உண்மையில், இந்தக் கட்சி உதயமானதே இந்த நோக்கத்திற்காகத்தான். மலாயாவைப் போல அன்றைய இந்தியாவும் ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததால், அந்த மண்ணில் வெடித்த விடுதலைப் போராட்டம் இந்த மண்ணிலும் எதிரொலித்தது.

அந்த இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் நீட்சியாக, மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியும் சமதருமத் தலைவரும் இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச் செயலருமான ஜவஹர்லால் நேருவின் ஒப்புதலுடன் உருவானது.

இன்னும் ஒரு படி மேலாக, ஆங்கிலேயர்களை இந்த மண்ணில் இருந்து களையெடுக்க உருவான இராணுவ நடவடிக்கைக்கும் அன்றைய மலாயா தோட்டப் பாட்டாளிகள் அடியும் முதலுமாக இருந்தனர் என்பது உண்மை வரலாறு.

அப்படிப்பட்ட மலேசிய இந்தியர் காங்கிரஸ், நாடு விடுதலைப் பெற்றது முதல், அரசக் கட்டிலில் இந்தியர்தம் பிரதிநிதியாக தொடர்ந்து நீடித்து வந்தது. மஇகா-வின் நெடிய பயணத்தில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும் சமுதாயத்தில் ஆங்காங்கே அதிருப்தி எண்ணங்களும் வெளிப்படுத்தப்பட்டன என்பது உண்மைதான்.

சிறுபான்மை சமுதாயமான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் நலிந்த மக்களாகவும் இருப்பதால், சமூகத்தின் எதிர்பார்ப்பும் தேவையும் காலத்திற்கு ஏற்ப அதிகரித்து வந்தது. பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்குரிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, இந்தியர்களுக்கு வீட்டுடைமை, தமிழ்ப் பள்ளுகளுக்கான கட்டமைப்பு உள்ளிட்ட தளங்களில் சமூகத்தின் தேவை அதிகரித்து வந்தது.

இந்த வேளையில், நம் சமுதாயம் நடுநிலையோடு ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். 2018 பொதுத் தேர்தலுக்கு முன், அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தேசிய நீரோட்டத்திலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்திய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டது உண்மைதான் என்று பகிரங்கரங்கமாக ஒப்புக் கொண்டதுடன் அன்றி, மலேசிய இந்தியர்களிடம் பொது மன்னிப்பும் கேட்டார்.

இதுதான் தேசிய அரசியல் போக்காக இருந்தது;

இருந்தபோதும், அத்தனையையும் மஇகா சமாளித்ததுடன் அல்லாமல் முடிந்தவரை மலேசிய இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காவும் மேம்பாட்டிற்காகவும் அகலக்கால் வைத்து பாடாற்றியது;

சமூகத்தின் நடுநிலையாளர்களும் விவரம் அறிந்தவர்களும் இதை யெல்லாம் நன்கு அறிவார்கள். அப்படி இருந்தும், கடந்த நான்கு பொதுத் தேர்தல்களில் மலேசிய இந்திய சமுதாயம் மஇகா-வை அரவணைக்கத் தவறிவிட்டது.

நாடாளுமன்றத்தில் இந்திய சமுதாயத்தின் குரலாக ஒலித்தது மட்டுமன்றி, மலேசியத் தமிழர்களின் மாண்பைப் போற்றும் வகையில் மத்திய கூட்டு அமைச்சரவையில் தமிழ்த் தலைவர் ஒருவரோ-இருவரோ இடம்பெற்றுவந்த மாண்பையும் தற்காத்து வந்தது மஇகா.

மாற்று அரசியலை விரும்பிய மக்கள், இப்போது அதற்கான பின்விளைவை அப்பட்டமாக கண்டு வருகின்றனர். மலேசிய இந்திய சமுதாயத்தில் ஏறக்குறைய 84 விழுக்காட்டினராக தமிழர்கள் இருந்தும், ஒரு தமிழ் அமைச்சர் இடம்பெறாத அமைச்சரவையை இன்றைய இந்திய சமூகம் சந்தித்து வருகிறது; தவிர, இருந்த அமைச்சரும் இந்தியர்களின் பிரதிநிதி “நான் இல்லை-நான் இல்லை” என்று பறை சாற்றினார்.

காரணம், அவர்கள் இந்திய சமுதாயாத்தின் நாடித் துடிப்பை அறிந்த இந்தியர் இயக்கத்தில் வளராதவர்கள்; அப்படிப்பட்டவர்கள்கூட இன்று அமைச்சரவையில் இடம்பெறாத நிலை; இருந்தாலும், மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தை மதிக்கும் வகையில் ஒரு தமிழர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது;

மலேசியத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அரசியல் களங்கத்தை நீக்கும் ஆற்றல் பெற்ற ஒரே அரசியல் இயக்கம் மஇகா; ஒரேத் தலைலர் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் என்பதை மஇகா உறுப்பினர்கள் மட்டுமல்ல: இன்றைய ஒட்டுமொத்த சமுதாயமே அறுதியிட்டுக் கூறுவதைக் காண முடிகிறது.

எனவே, இன்று 58-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், எல்லாவித துயரையும் தாங்கிக்கொண்டு பீடுநடை போடுவதைப் போல, அடுத்த 16-ஆவது பொதுத் தேர்தல் மூலம், மலேசிய இந்திய சமுதாயத்தின் ஒரேப் பிரதிநிதி மஇகா என்பதை நிறுவ இன்னும் முனைப்புடன் பாடாற்றி, ஆழமான அரசியல் பணிகளை முன்னிலும் வீரியத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று சமூகம் வாஞ்சையுடன் எதிர்பார்க்கிறது.

உலக அமைதிப் பேரவையின் சமாதானத் தூதுவர் பட்டத்தை வென்றதுடன், நாட்டின் சான்றோர் அவை என்று சொல்லத்தக்க நாடாளுமன்ற மேலவைக்கு 17-ஆவது தலைவராகப் பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன். பிரதமரின் இந்திய மற்றும் தென்னாசிய மண்டலத்தின் கட்டமைப்புத் தூதராகவும் பொறுப்பாற்றியவர்.

இப்படிப்பட்ட ஆற்றலும் செயலூக்கமும் தன்னகத்தே வாய்க்கப்பெற்ற டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மலேசிய இந்திய சமூகத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராக இன்று திகழ்கிறார்.

மலேசிய இந்திய சமுதாயத்தின் சார்பிலும் மஇகா உறுப்பினர்களின் சார்பிலும் மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளை, அரசியல் களம் காத்திருப்பதால் இப்பொழுதே போர் முனைக்கு அணியமாகும்படி அன்புத் தலைவரிடம் அன்புடன் விழைவதுடன் சமுதாயம் இழந்துள்ள அரசியல் மாண்பை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைக்கின்றோம்.

வாழ்க தேசியத் தலைவர்; வலிமையுறுக மஇகா!

இலெ. சிவசுப்பிரமணியன்
அரசியல்-ஊடகச் செயலர்
தேசியத் தலைவர்-மஇகா
15-12-2023

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles