25.3 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

மலேசியவாழ் இந்துக்கள் இந்து சங்கத்தை ஆதரிக்க வேண்டும்

மலாக்கா இந்து சங்க ஆண்டுக் கூட்டத்தில் டான்ஸ்ரீ சுப்ரா

21 தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பிக்கப் பட்டனர்

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலாக்கா, மே 13:
மலேசியவாழ் இந்துப் பெருமக்கள் அனைவரும் மலேசிய இந்து சங்கத்தை ஆதரிப்பதுடன், அதன் வளர்ச்சிக்கு உற்ற துணை நல்க வேண்டும் என்று டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியன் மலேசிய இந்துக்களை, குறிப்பாக மலாக்கா மாநில இந்து சமுதாயத்தினரைக் கேட்டுக்
கொண்டார்.

மலேசிய இந்து சங்க மலாக்கா மாநிலப் பேரவையின் 47-ஆவது ஆண்டுக் கூட்டம், நேற்று ஞாயிற்றுக் கிழமை ஆயர் கெரோ, கிருஷ்ண பலராம் மண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும் சிறப்பு மருத்துவரும் மலாக்கா வரலாற்று நகரை தமது பொதுவாழ்வின் மையமாகக் கொண்டவருமான சுப்பிரமணியம் சிறப்புரை ஆற்றினார்.

மலேசியாவில் வாழ்கின்ற இந்துக்களுக்கோ அல்லது இந்து சமயத்திற்கோ ஏதும் சிக்கல் என்றால் முதலில் குரல் கொடுப்பதும் களம் இறங்குவதும் மலேசிய இந்து சங்கம்தான்.

நிருவாக அடிப்படையில் இந்தச் சங்கத்தில் சில பின்னடைவோ அல்லது முன்னடைவோ இருக்கலாம்.

அதைப்பற்றி யெல்லாம் நாம் கருத்தில் கொள்ளாமல், நம் சமயத்திற்காக அவர்கள் எந்த அளவிற்கு பாடாற்றுகின்றனர் என்பதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்து சங்கம் பொருளாதார அளவில் வலிமையாக இருந்தால், சங்கத்தின் நடவடிக்கைகள் துரிதமாகவும் இன்னும் வலுவாகவும் இருக்கும்.

அதற்கு ஏதுவாக, மலேசியாவில் வாழ்கின்ற ஒவ்வோர் இந்துவும் ஒரு
மாதத்திற்கு 50 சென் வழங்கினால்கூட, அது காலப் போக்கில் லட்சக் கணக்கான வெள்ளியை எட்டும் என்றார்

அதற்கு தோதாக நாடு முழுவதும் இந்து சங்கக் கிளைகள், வட்டாரப் பேரவைகள் என்னும் பெயரில் இயங்குகின்றன.

நமது சமயத்திற்காகவும் நம் இந்து சகோதரர்களுக்காகவும் அயராமல் பாடாற்றும் மலேசிய இந்து சங்கம் எதற்கெடுத்தாலும் மானியத்தை எதிர்பார்க்கும் நிலையை மாற்றி, இந்து சங்கத்தை நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டியது நம் கடமை என்று சுப்ரா மேலும் பேசினார்.

இந்து மக்களின் சுய காப்பு, நம் சமய-ஆன்மிக நெறியில்தான் அடங்கி உள்ளது. அதனால், இந்து சமயத்தினர் அனைவரும் சமய நடவடிக்கையில், குறிப்பாக அன்றாட வாழ்வில் திருமுறை ஓதுதலை முதல் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் இந்த நிகழ்ச்சியில் பேசினார்.

இல்ல வழிபாடு, கூட்டுப் பிரார்த்தனைக்கெல்லாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்; இத்தகைய நடவடிக்கைகள்தான் மதமாற்றம் போன்றவற்றைத் த்டுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

தற்பொழுது, புதிதாக திருமணம் புரிய இருக்கும் இந்து சமய தம்பதியர், முதலில் சாத்திர- சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு அதற்குப் பின்னர் பதிவுத் திருமணம் செய்ய வேண்டும் என்று அரசின் சார்பில் வலியுறுத்தப் படுகிறது.

இந்த நடைமுறை காலப்போக்கில் சிக்கலை ஏற்படுத்தலாம். பதிவுத் திருமணம் செய்யாமல், சம்பிரதாயத் திருமணம் புரிந்துகொண்டு வாழ முற்படும் இளம் தம்பதியர், ஏதும் பிணக்கு ஏற்பட்டால் அப்படியே பிரிந்துசெல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி பிரிந்து சென்றால், அவர்களைக் கட்டுப்படுத்த எந்த சட்ட வரையறையும் இல்லை.

அதனால், இந்தச் சிக்கலை அரசுத் தரப்பிடம் எடுத்துச் சொல்ல, மாநிலங்களின் இந்து சங்கப் பொறுப்பாளர்கள் அந்தந்த மாநில பதிவுத் துறை அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்று தங்க கணேசன் வலியுறுத்தினார்.

மலாக்கா மாநிலப் பேரவையில் ஒன்பது வட்டாரப் பேரவைகள் மட்டுமே இருந்தாலும் நவ கிரகங்களப் போல, அனைத்து வட்டாரப் பேரவைகளும் அயராமல் செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தேசியப் பேரவை முன்னெடுக்கும் அத்துணை நிகழ்ச்சிகளுக்கும் தங்கள் மாநிலப் பேரவையின் வழிகாட்டலுடன் உரிய பங்கை ஆற்றுவதாக சிறப்புரை நிகழ்த்திய தங்க கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

மலாக்கா மாநில இந்து சங்கப் பொறுப்பாளர்கள், சமய நடவடிக்கைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல், சமுதாய முன்னேற்றத்திற்கும் முடிந்தவரை கடமை ஆற்றுவதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து சங்க தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபு தெரிவித்தார்.

குறிப்பாக, கவிதா போன்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஆலயங்களின் பொறுப்பாளர்களுடன் இணைந்து சமுதாய மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மலாக்கா இந்து சங்கத்தினரை எத்துணைப் பாராட்டினாலும் தகும் என்றார் கணேஷ் பாபு.

மலேசிய இந்து சங்க மலாக்கா மாநிலப் பேரவைத் தலைவரும் சமயத் தொண்டருமான சிவஸ்ரீ கு. ஜெகசீலன், இந்த நிகழ்ச்சில் தலைமை உரை ஆற்றினார்.

மலேசியாவின் வரலாற்று நகரான மலாக்காவில் இயங்கும் இந்து சங்க மாநிலப் பேரவை, மாநிலத்தில் இயங்கும் சிவானந்த ஆசிரமம், இராமகிருஷ்ண மடம் , சத்ய சாய்பாபா இயக்கம் உள்ளிட்ட சமய அமைப்புகள், தமிழ் மொழி சார்பில் இயங்கும் சமூக அமைப்பிகள், ஆலய நிருவாகங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து மாநில இந்து சமுதாயத்திற்காக செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஒருசில ஆலயங்கள் மலாக்கா இந்து சங்கத்திற்கு மிகவும் தோள்கொடுப்பதாகக் குறிப்பிட்ட ஜெகசீலன், மாநிலத்தில் உள்ள 21 தமிழ்ப் பள்ளிகளுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

திருமுறைப் பயிற்சி, திருமுறைப் போட்டி உட்பட, மலாக்கா இந்து சங்கம் மேற்கொள்ளும் அனைத்து சமய நடவடிக்கைகளுக்கும் அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளும் ஆதரவளிக்கின்றன.

இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், 21 தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த மேடையில் சிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

முன்னதாக மலாக்கா இந்து சங்க செயலாளர் குமார் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார்.

மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பிப்பு, 250 வெள்ளி அன்பளிப்பு, 50 வெள்ளி மதிப்புடைய 5 திருக்குறள் நூட்கள், மரக்கன்றுகள் என 21 தமிழ்ப் பள்ளிகளுக்கும் மலாக்கா இந்து சங்கம் தலா 600 வெள்ளிவரை கொடை அளித்ததாக குமார் குறிப்பிட்டார்.

சிறப்புப் பிரமுகர்களுக்கு விருது-பட்டயம் வழங்குவதற்குப் பதிலாக அனைவருக்கும் 100 மரக் கன்றுகள்வரை வழங்கப்பட்டன.

சுற்றுச் சூழலை மேம்படுத்தவும் பசுமையைப் போற்றவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குமார் மேலும் சொன்னார்.

இந்தக் கூட்டத்தின் முத்தாய்ப்பு அங்கமாக, இந்து சங்கத்தின் மூலம் அயராமல் தொண்டாற்றிய மனோகரன் திருமலைசாமி, மு.வேலாயுதன், சு.பெரியமலை, வத்துமலை எஸ்.கருப்பன், இரா. மல்லிகா ஆகியோருக்கு தொண்டர்மணி விருதும் அதைப்போல இளைய சமுதாயத்தைச் சேர்ந்த வீ. தாமரை என்ற ஆசிரியருக்கு விவேகரத்னா என்னும் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles