
🔊To listen to this news in Tamil, Please select the text.
கெமாமான், மே 30:
மலேசிய இந்து சங்க திரங்கானு மாநிலப் பேரவைப் பொறுப்பாளர்கள் சமய-சமுதாயப் பணிகளுடன் கல்வி மறுமலர்ச்சிப் பணியிலும் அதிக முனைப்பு காட்டுகின்றனர் என்று இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் பாராட்டு தெரிவித்தார்.
கெமாமான், கெர்த்தேவில் உள்ள பெட்ரோனாஸ் கோல்ப் கிளாப் மாநாட்டு அரங்கத்தில் இந்து சங்க திரங்கானு மாநிலப் பேரவையின்24-ஆம் ஆண்டுக் கூட்டம் மாநிலத் தலைவர் ‘தொண்டர்மணி’ திரு. அப்பு கே. இராசப்பன் தலைமையில் நேற்று ஏப்ரல் 29, புதன்கிழமை முன்னிரவில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய திரு. தங்க கணேசன், இளைஞர்களாகவும் கல்விமான்களாகவும் இருக்கின்ற திரங்கானு மாநிலப் பேரவைப் பொறுப்பாளர்கள், மாநிலத்தின் இந்திய சமுதாய நலம்கருதி செயல்படுகின்றனர் என்றார்.

குறிப்பாக, சிறுபான்மை சமுதாயத்தினராகவும் பெரும்பாலும் தோட்டப் புறங்களில் வாழ்பவர்களாகவும் இருக்கும் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி வளர்ச்சியிலும் தொழில் பயிற்சியிலும் அதிக முனைப்பு காட்டிவருவதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் வெளியிடப்பட்ட 2023 எஸ்பிஎம் தேர்வு முடிவில் கெமாமான், கெமாசேக் வட்டாரத்தில் ஆயர் ஜெர்னே பகுதியைச் சேர்ந்த ரீனாஸ்ரீ ராஜாமணி என்னும் மாணவி 8-ஏ’க்களுடன் தேர்ச்சிபெற்றதை முன்னிட்டு, தனித்துவாழும் தாயின் மகளுமான அந்த மாணவியின் உயர்க்கல்விக்காக உடனே நிதி திரட்டிய மாநிலத் தலைவர் அப்புவின் சமூக நோக்கத்தை மேலும் பாராட்டினார் ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன்.
அதைப்போல, திரங்கானு அரசு பல்கலைக்கழகம்- யுனிஸா-வில் பயிலும் மருத்துவ மாணவரான கணேஷ் குமாரின் நிதிச் சிக்கலுக்கும் உதவும் நோக்கில் திரட்டப்பட்ட வெ.6,551.00 நிதியை, அண்மையில் பல்கலைக்கழக மருத்துவ வளாகத்தில் மருத்துவ பேராசிரியரும் மாணவர் நலப் பிரிவின் துணை டீனுமான ஸைனாப் ஹஜி முகமட் ஷாபி, செனட் உறுப்பினர் முனைவர் நளினி ஆறுமுகம், திரங்கானு இந்து சங்க செயலர் மீ.ஆனந்தகுமார், செயற்குழு உறுப்பினர் திரு. சரவணன் ஆகியோரின் முன்னிலையில் அப்பு ராசப்பன் வழங்கினார். இவ்வாறு, தொடர்ந்து கல்விச் சேவை ஆற்றிவரும் திரங்கானு இந்து சங்கப் பொறுப்பாளர்களை எத்துணைப் பாராட்டினாலும் தகும்.

அதைப்போல மாநிலத்தில் உள்ள 4 ஆலயங்கள் வளர்ச்சி காணவும் குறைந்த எண்ணிக்கையில் வாழும் இந்து மக்களின் சமய மேம்பாட்டிற்கும் அதிக அளவில் பாடுபடும் திரங்கானு மாநில இந்து சங்க நிருவாகக் குழுவின் செயலாளர் திரு. ஆனந்தகுமார் மீனாட்சி சுந்தரம், பட்டதாரி இளைஞர் என்பதை எண்ணி பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்ட தங்க கணேசன், மாநிலப் பொருளாளர் திரு. மாறன் தெட்சணாமூர்த்தி யும் இளைஞர் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
திராங்கானு மாநில மந்திரி பெசார் அலுவலகத்தில் இஸ்லாமியர் அல்லாதோர் நலப் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் பாலச்சந்திரன் கோபால கிருஷ்ணன் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் மாணவி ரீனாவிடம் மாநிலப் பொறுப்பாளர்கள் திரட்டிய கல்வி உதவி நிதி 2,153.00 வெள்ளியை இந்து சங்க தேசியத் தலைவர் மேடையில் வழங்கினார்.
