
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிரம்பான், ஆக.05:
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பாட நேரத்திலேயே இந்து சமய வகுப்பு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். அத்துடன், இடைநிலைப் பள்ளி இந்திய மாணவர்களுக்கு தமிழ்க் கல்வியைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
சிரம்பான் நகருக்கு அருகில் செண்டாயான் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் மலேசிய இந்து சங்க நெகிரி செம்பிலான் மாநிலப் பேரவையின் திருமுறை விழா கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட்-3இல் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தங்க கணேசன், நாட்டின் மேம்பாட்டிற்கும் பொருளாதார மீட்சிக்கும் பாடுபட்ட மக்கள், இந்திய சமுதாயத்தினர் என்பதை மெர்டேக்கா காலத்தில் வெளியான நாட்டின் பொருளாதார அறிக்கைகளைப் பார்த்தாலேத் தெரியும்; அப்படிப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் புதிய தலைமுறைப் பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் வேளையில், ஆன்மிகத் தெளிவையும் சமய அறிவையும் இளம் பருவத்திலேயே பெறுவதற்கு ஏதுவாக தாய்மொழிப் பள்ளிகளில் சமயப் பாடத்தைப் போதிக்க மடானி அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதைப்போல, இடைநிலைப் பள்ளி இந்திய மாணவர்கள், தங்களின் எஸ்பிஎம் தேர்வில் தமிழ்-தமிழிலக்கியப் பாடங்களையும் இணைத்துக் கொள்வதற்கு ஏதுவாக, பாட நேரத்திலேயே தமிழ் வகுப்புகளுக்கு அட்டவணையிடப்பட வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு தங்க கணேசன் கோரிக்கை வைத்தார். நம் பிள்ளைகளுக்கு திருமுறையை ஓதவும் ஒதி உணரவும் கற்றுக் கொடுப்பதன்வழி, இளம்பருவத்திலேயே தமிழ் மொழியுடன் சமயநெறியும் கற்று பயிற்றுவிக்கப்படுகின்றன.

கல்விப் பருவத்தில் தங்களின் பொன்னான நேரத்தை கல்விக்காக செலவிடும் அதேவேளை, திருமுறை ஓதுவதிலும் போட்டியில் பங்கெடுப்பதிலும் ஆர்வம் காட்டும் நம் பிள்ளைகள் பாராட்டிற்கு உரியவர்கள் என்றும் இவர்கள் எதிர்காலத்தில் நம் சமயத்திற்கு துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்த சிவநெறிச் செல்வர் தங்க கணேசன்.. ,
இந்த 2024ஆம் ஆண்டு முதல் 6 வயதுக்குட்பட்ட சிறாருக்கான முதல் பிரிவில் குழுப் போட்டியும் அறிமுகப் படுத்தப்படுகிறது; தவிர தங்கம் அதிக விலையேற்றம் கண்டுள்ள இந்த வேளையிலும் வழக்கம்போல ஆறு தங்கப் பதக்கங்களை போட்டியார்களுக்கு இந்து சங்கம் பெருமையுடன் வழங்குகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலத் தலைவர் சிவஸ்ரீ டாகடர் ஆனந்த கோபி சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இந்த 46-ஆவது மாநிலத் திருமுறை விழாவில், தங்க கணேசனுக்கு செங்கோல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, மாநில செயலாளர், உமாசுதன் மங்கள இசை முழக்கத்துடன் செங்கோலை ஊர்வலமாக ஏந்திவந்தார்.
