
🔊To listen to this news in Tamil, Please select the text.
– நக்கீரன்
கோலாலம்பூர், செப்.10:
நாட்டின் பாரம்பரியத் தலைநகரான கோலாலம்பூரில் தமிழர் பள்ளிவாசலை நில அடையாளமாகக் கொண்ட ‘ஜாலான் மஸ்ஜிட் இந்தியா’ பகுதியில் உள்ள வர்த்தக சமூகத்தினர் கடந்த மூன்று வாரங்களாக தங்களின் வாணிகம் பேரளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கலக்கத்திற்கு ஆளாகி நிற்கின்றனர். இதை மாற்றும் விதமாக அந்தப் பகுதிக்கு நேற்று மஇகா தலைவர்கள் வருகை மேற்கொண்டனர்.
மஸ்ஜிட் இந்தியா வட்டாரம் பாதுகாப்பானப் பகுதிதான் என்றும் தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் இந்த நேரத்தில் இங்கு பொதுமக்கள் வழக்கம்போல வந்து தங்களின் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் மஇகா தலைவர்களில் ஒருவரும் மத்திய செயலவை உறுப்பினருமான சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மஇகா தேசிய துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு.சரவணன் தலைமையில் அங்கு சென்ற தலைவர்கள் அந்தப் பகுதி முழுவதையும் சுற்றிப் பார்த்து அங்குள்ள ஆயிரக் கணக்கான வணிகர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் அது பொதுமக்களுக்கு பாதுகாப்பான பகுதிதான் என்பதையும் அறிவித்தது, காலமறிந்து கடமையாற்றும் மஇகா-வின் கடப்பாட்டைப் புலப்படுத்துகிறது என்று மஇகா தேசியத் தலைவரின் தனிச் செயலருமான சிவசுப்பிரமணின் மேலும் தெரிவித்துள்ளார்.
வானத்தில் இருந்து பொழியும் மழைத்துளிகள், ஏரி-குளம்-அருவி-ஆறு உள்ளிட்ட நன்னீர்நிலைகளில் விழுந்தால் அவை புண்ணியமானவை என்றும் புறக்கடை-சாக்கடை உள்ளிட்ட கழிவுநீர்ப் பகுதிகளில் கலந்தால் அவை பாவமானவை என்றும் சொல்வது எப்படி அறிவுடைமை ஆகாதோ அதைப்போலவே, இந்த மண்ணில் தோன்றும் உயிர்கள் தத்தம் தத்தம் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்து ஒரு நாளில் மறையும்போது, அதைவைத்து, மனிதர்களை பாவ-புண்ணிய எல்லைக்குள் வகைப்படுத்துவது பொருந்தாக்கூற்று என்று தமிழர்களின் ஆதி அறிவியல் சமயமான ஆசீவகம் கூறுகிறது.
அந்த வகையில் எங்கோ பிறந்து எங்கோ வாழ்ந்த ஒரு பெண், வர்த்தக நோக்கத்திற்காக வான் கடந்து இம்மலை நாட்டிற்கு வந்திருந்த வேளையில், மண் அரிப்பும் அமிழ்வும் ஏற்பட்டிருந்த இடத்தில் விழுந்து காணாமல் போனார்.
அந்தப் பகுதிக்கு அருகில் ஆறு ஓடுகிறது. அண்மைக் காலத்தில் அங்கு மேற்கொண்ட கட்டுமானப் பணிகளால் சம்பந்தப்பட்ட இடம் மிருதுத்தன்மை அடைந்திருக்கலாம்; ஏற்கெனவே அந்த இடம் சுண்ணாம்புக் கலவையுடைய நிலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட இடம்தான் பாதிக்கப்பட்டுள்ளதேத் தவிர அந்த வட்டாரத்தில் உள்ள ஏனையப் பகுதிகள் பாதுகாப்பானவைதான் என்பதை எடுத்துரைக்கவும் பொதுமக்கள்-வாடிக்கையாளர்கள்-வர்த்தகப் பிரிவினர் ஆகிய முத்தரப்பினருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் டத்தோ கே.இராமலிங்கம், டத்தோ சைமன் ராஜா உள்ளிட்ட மஇகா தலைவர்கள் நேற்று மாலை அந்த வட்டாரம் முழுவதும் உலா வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் நாள் காலையில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பின், மக்கள் நடமாட்டம் பெருமளவில் குறைந்ததால், சிறு-குறு வியாபார நடவடிக்கைகளும் பேரளவில் பாதிக்கப்பட்டிருந்தன.
காலமும் சூழலும் அறிந்து, மஇகா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா வட்டாரம் மறுமலர்ச்சி காணும் என எதிர்பார்ப்போம்.
