
செய்தி படங்கள் எம். முருகன்
கண்டனூரில் அமைந்துள்ள அரசு கிளை நூலகத்தின் திறப்பு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நீதியரசர் சொக்கலிங்கம், கவிஞர் செல்வகணபதி, முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம், தொழிலதிபர் டத்தோ ராமநாதன் செட்டியார், மாங்குடி தேவி நாச்சியப்பன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் உரையாற்றிய நிர்வாகத்தினர், இந்த நூலகம் அனைத்து தரப்பினரும், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளுக்கான நூல்களுடன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அறிவை வளர்க்கும் மையமாக இந்த நூலகம் திகழும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளியிட்டனர்.
மேலும், இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் டத்தோ ராமநாதன் செட்டியார் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நிகழ்வில் குறிப்பிடப்பட்டது.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் திரளாக கலந்து கொண்டு அரசு கிளை நூலகத்தின் தொடக்கத்தை வரவேற்றனர்.



