
-நக்கீரன்
கோலாலம்பூர், அக்.02:
மக்கள் நீதிக் கட்சி(பிகேஆர்)யைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலருக்கு, குறிப்பாக பிரபாகரன், இரமணன் போன்றோருக்கு ‘பைத்தியம்’ என்னும் சொல், மிகவும் பிடித்தம்போலும்.
உலக அரசியல் சமாதானத்தின் சின்னம் காந்தி அடிகள், பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாக்கத் அலி கான், இந்தியாவின் இரண்டாவது பிரதமரும் இந்தி வெறியரும் மர்மமாக மறைந்தவருனான லால் பாக்தூர் சாஸ்திரி போன்ற பெருமக்களுக்கு இன்று பிறந்த நாள்; தமிழக கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்; இளம் வயதிலேயே இறந்த கோடம்பாக்கத்து தமிழர்களான பாண்டியராஜன், மயில்சாமி ஆகியோருக்கும் இன்று பிறந்த நாள்!
அதைப்போல லால் பகதூர் சாஸ்திரியை பிரதமர் ஆக்கியவரும் அறிஞர் அண்ணாவை சிறுமைப்படுத்திய அமெரிக்க அதிபர் நிக்சனுக்கு(வலச்சாரி சிந்தனை கொண்ட இனவாதியான இதே நிக்சன், 1971 இந்திய-பாகிஸ்தான் போரின்போது, இந்திரா காந்தியின் காலை வாரிவிட்டவர் என்பதும் பாகிஸ்தானுக்கு முட்டுக்கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது) புதுடில்லியில் கரிபூசியவருமான கர்மவீரர் காமராசருக்கு இன்று நினைவு நாள்.
இத்தகைய பெருமக்கள் ஏதோவொரு வகையில் அவரவர் சார்ந்த துறையில் தனிமுத்திரையுடன் திகழ்ந்தவர்கள் என்பதால்தான் அவர்களை எண்ணிப் பார்க்கிறோம்.
இந்த வேளையில், நாட்டின் மையப் பகுதியில் அதுவும் முக்கியமான தொகுதிகளில் நின்று, முக்கியமான பிரமுகர்களை எதிர்த்து களமாடி, வெற்றிக்கொடி நாட்டி, மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பிரபாகரனுக்கும் இரமணனுக்கும் கொஞ்சம்கூட பொது பண்புநலனும் அரசியல் நாகரிகமும் இல்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

ஒரு சில மாதங்களுக்குமுன், கோலாலம்பூர் செந்தூலில் இருக்கும் அருள்மிகு நாகேசுவரி அம்மன் ஆலயம் சம்பந்தமான சர்ச்சை வெடித்தது.
பொதுவாக ஆலய சர்ச்சை என்றால், அதன் நிருவாகத்தை கைப்பற்றும் நோக்கில் இரு தரப்பாரிடையே முட்டல்-மோதல் ஏற்படும். அது குடும்ப அளவிலோ, சாதி அளவிலோ அல்லது ஏதோவொரு குழு அடிப்படையிலோ இருக்கும்.
ஆனால், இந்த ஆலய விவகாரத்தில் இரு அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டன. நாட்டின் பாரம்பரிய அரசியல் கட்சியான மஇகா-வும் பல இனக் கட்சியென பம்மாத்து காட்டும் ஜசெக-வைப் போன்ற இன்னொரு கட்சியான மக்கள் நீதிக் கட்சியும்தான் அவ்விரு கட்சிகள்.
மலேசிய அரசியல் வரலாற்றில் மஇகா-விற்கு தனிச் சிறப்புண்டு. இந்த நாட்டின் முதல் அரசியல் இயக்கமே மஇகா-தான் என்றுகூட வரையறுக்க-லாம். அப்படிப்பட்ட மஇகா, முன்பெல்லாம் ஆலய விவகாரங்களில் அந்த அளவிற்கு அக்கறைக் காட்டியதில்லை. மாறாக, 2008 பொதுத் தேர்தலுக்குப் பின், ஆலய விவகாரத்தில் அதிக முனைப்பு காட்டிவருகிறது.
நிலப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நாகேசுவரி அம்மன் ஆலயத்திற்கு அங்கு மேம்பாட்டுப் பணியை மேற்கொண்டுவரும் நிறுவனத்தின் சார்பில் நெருக்கடி நேர்ந்ததும் மஇகா அதிரடியாக களமிறங்கி, அந்த ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்தக் குரல் கொடுத்தது.
மஇகா, கூட்டரசுப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் இதில் தலையிட்டனர். இதேச் சிக்கல் காரணமாக, அதே நாள் பிற்பகலில் செய்தி-யாளர்களிடம் சம்பந்தப்பட்ட இடம் அமைந்துள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியான பி.பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செந்தூல் சந்தையின் முன்பு, வெய்யிலில் நின்றபடி உரக்க முழங்கிய பிரபாகரன், மஇகா 2-ஆம் கட்ட தலைவர்களைப் பார்த்து பைத்தியம் என்றார். கிறுக்கன்கள் என்றார்.
இப்பொழுது, இவ்விரு தரப்பாரும் ஒன்றாக கரம்கோத்து அருள்மிகு நாகேசுவரி அம்மன் ஆலய மேம்பாட்டிற்கு பாடாற்றுகின்றனர் என்பது வேறு;
ஆனால், அப்பொழுது, தன் பக்கம் என்னதான் நியாயம் இருந்தாலும் அடுத்தக் கட்சியின் பொறுப்பாளர்களைப் பார்த்து, அதுவும் செய்தியாளர்கள் முன்பு நூற்றுக் கணக்கானோர் திரண்டிருக்கும் வேளையில், இப்படிப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்துவது, பண்பல்ல என்பதை பிரபாகரன் உணரவில்லை.
என்னதான் இளவயதுக்காரராக இருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு சென்று வருபவர், மக்களால் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இப்படி பேசலாமா? இவருக்கு தன்னச்சம் என்பது கொஞ்சமும் இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் பிரபாகரனின் நண்பர்களும் உறவினர்களும் எடுத்துச் சொன்னார்களா என்பது தெரியவில்லை. கட்சியின் மாநில மற்றும் தேசியத் தலைமைகள்கூட இதுபற்றி கண்டுகொள்ளாததால், இப்பொழுது அதேக் கட்சியைச் சேர்ந்த ரமணன், இந்திய சமுதாயத்தையே பைத்தியம் என்கிறார்.
இந்தத் திணவும் துடுக்குத்தனமும் சொந்த இனத்தையே பந்தாடும் அகம்பாவமும் எங்கிருந்து வந்தது ரமணனுக்கு?
நாட்டின் முக்கியமான அரசியல் புள்ளியும் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியின் மருமகனும் மேநாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடினை சுங்கை பூலோ தொகுதியில் வென்றுவிட்டோமே என்ற பெருமிதம் தந்ததா?

அல்லது சுதந்திர மலாயாவில் முதன்முதலிலாக தேர்தல் களம் கண்டு வென்ற மாதரசியின் பெயரன் என்னும் இறுமாப்பு ஏற்படுத்தியதா?
பிரபாகரனாவது தமிழ் ஊடக மட்டத்தில் பேசினார். அரசியல் பாரம்பரியம் இல்லாமலும் அதிர்ஷ்ட்டத்தாலும் அரசியலில் நுழைந்தவர். இருந்தாலும் பொதுவெளியில் அவர் அப்படி பேசியது பொருத்தமல்ல; ஏற்கக்கூடியதல்ல;
ஆனால் ரமணனுக்கு?
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் என்று குறிப்பிட மனம் வரவில்லையே; சொந்த இனத்தைப் பற்றி மலாய் ஊடகத்தில் பைத்தியக்காரர்கள் என்றுசொல்ல எப்படி மனம் வந்தது ரமணனுக்கு?
அரசியல் பாரம்பரியம் இருந்தாலும் தமிழியக்கூறு கிஞ்சிற்றும் இல்லை இந்த ரமணனிடம்.
இப்போதைய அரசாங்கத்தின்மீதும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்மீதும் இந்திய சமுதாயம் ஆதங்கம் கொண்டால், அதற்கு சாதிவீகமான பதிலை அல்லது கருத்தை வெளிப்படுத்துவதை விடுத்து, தான் சார்ந்த இனத்தையே சிறுமைப்படுத்தும் சிறும்புத்தி ரமணனுக்கு எப்படி வாய்த்தது?
நாடு விடுதலை அடைந்த நாள் முதல் அண்மைக்காலம் வரை தமிழ் பேசும் ஒரு தமிழர் அமைச்சரவையில் இடம்பெற்று வந்ததை பிரதமர் அன்வார் ஏன் இல்லாமல் செய்தார்? மலேசிய இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு வருத்தம் இருக்காதா?
ஓரேவொரு இந்தியருக்காவது மாநில ஆட்சி மன்றங்களில் ‘EXCO’ பொறுப்பு பிகேஆர் சார்பில் வழங்கப்பட்டுள்ளதா? மத்தியக் கூட்டரசிலும் சரி, மாநில ஆட்சி மன்றங்களிலும் சரி, பிகேஆர் கட்சிக்குரிய ‘Quota’ முழுவதையும் மலாய் அரசியல்வாதிகளுக்குத்தானே ஒதுக்கினார் அன்வார்.
தன்னை இத்தனைக் காலமும் தோளில் வைத்துக் கொண்டாடிய தமிழர்களுக்கு ஓர் உன்னதத்தை வழங்கி அழகுபார்க்க வேண்டும் என்ற எண்ணம் அன்வாரின் மனதில் கொஞ்சமும் இல்லையே?
தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கிவந்த மானியம் காணாமல் போய்விட்டதே, இதற்கு ரமணனிடம் இருந்து பதிலோ விளக்கமோ வருமா?
நிகழும் 2024 கல்வி ஆண்டில் மலேசிய இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்விக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை சொல்ல முடியுமா ரமணன்?
அதையேன் மூடி மூடி மறைக்கிறது கல்வித் துறை?
இருபது உயர்க்கல்வி நிலையங்களிலும் இந்திய மாணவர்கள் எத்தனைப் பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளன? மடானி அரசாங்கத்தில் கல்வி உதவி நிதியாக தேசிய அளவில் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது? இதில், தமிழ்-இந்திய மாணவர்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை உயர்க்கல்வி அமைச்சிடம் கேட்டு இந்திய சமுதாயத்திற்கு சொல்ல முடியுமா ரமணன்?

அதெல்லாம் இருக்கட்டும்; மித்ரா வரலாற்றில் தன்னுடைய தலைமையில்-தான் 100 மில்லியன் வெள்ளியும் கொடுக்கப்பட்டு விட்டதாக கொக்கரித்த இரமணன், அந்த நூறு மில்லியன் வெள்ளி மஞ்சள் குளியலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யாரென பட்டியல் போட்டு, அதை உடனே இந்திய சமுதாயத்திற்கு தெரிவிக்க முடியுமா இரமணன்?
மலேசிய இந்திய சமுதாயத்தின்முன் ஆயிரத்தெட்டு அவலங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நிலையில், எம்ஜிஆரின் பாடலுக்கு அன்வார் அன்றாடம் அபிநயம் புரியவேண்டும் என்று எந்த இந்தியனும் எதிர்பார்க்கவில்லை என்பது இரமணனுக்கு முதலில் புரிய வேண்டும்.
இதுவரை எந்தப் பிரதமரின் ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு அன்வாரின் ஆட்சியின் அரிசியின் விலை உச்சத்தைத் தொட்டு நிற்கிறது. ஏறக்குறைய எட்டு வெள்ளிக்கு விற்றுவந்த பெரிய சார்டின் டின், அன்வார் ஆட்சியில் பத்து வெள்ளியைத் தாண்டிவிட்டது.
மலேசியக் கூட்டு சமுதாய மக்களை, அன்றாட வாழ்க்கை அல்லல்படுத்தி ஆற்றாமையைப் பெறுக்குவது ஒருபுறமிருக்க, மலேசியத் தமிழர்க்கோ, கூடுதலாக பிகேஆர் கட்சி தலைமையிலான ஒற்றுமை அரசில், அரசியல் சிறுமை நேர்ந்துள்ளது.
இந்த நிலையில், மலேசிய இந்திய சமுதாயத்தை-தமிழ்ச் சமுதாயத்தை சிறுமைப் படுத்திய இரமணனை, சுங்கை பூலோ தொகுதி நாடாளுமன்ற இந்திய வாக்காளர்கள், நாட்டின் 16-ஆவது பொதுத் தேர்தலின்பொது அடியோடு புறக்கணித்து அவரை மண்ணைக் கௌவச் செய்ய வேண்டும்.
ஆனால், கட்சித் தலைமையென ஒன்று இருக்குமே? அது, இதுகளை யெல்லாம என்ன ஏதென்று கேட்காதோ? கண்டிக்காதோ?
ஒருவேளை, அந்தத் தலையே இந்திய சமுதாயத்தைப் புறக்கணிப்பதால்தான் இந்த வால்களும் தமிழர்களை துச்சமெனக் கருதுகின்றனவோ?
