26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

தொழில் ஆசான் வழக்கறிஞர் மதியழகன்!- துணை அமைச்சர் சரசுவதி

🔥 Views : 18
👁 Reading Now : 37

நக்கீரன்

ஈப்போ செப் 30-
“வழக்கறிஞர் தொழிலை தாம் தொடங்கிய போது, ஒரு வழக்கு விசாரணையை எப்படி நடத்துவது, அந்த விசாரணைக்கு எப்படி தயாராவது, சாட்சிகளை எப்படி கையாள்வது என்பதை யெல்லாம் கற்றுத் தந்த வழக்கறிஞர் மதியழகன், தனக்கு தொழில் ஆசான்” என்று தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

வழக்கறிஞர் மதியழகன் எழுதிய ‘எண்ணங்கள் வண்ணங்கள்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அவர், முதல் முறையாக தன்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு வாதாடவும் வழக்காடவும் வைத்தவர் மதியழகன். அந்த வகையில், வழக்கறிஞர் தொழிலில் தன் முன்னோடி வழக்கறிஞர் மதியழகன்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, பிரதமர் துறை, சட்டம் மற்றும் நீதிசார் சீர்திருத்த துணையமைச்சர் மு. குலசேகரன் தனக்கு அரசியல் ஆசான் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு தழுவிய நிலையில் தம்மை அழைத்துச் சென்று அரசியல் மேடைகளில் பேசவைத்தவர் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன்தான்; தவிர, தற்பொழுது துணையமைச்சராக தாம் பதவி வகிப்பதற்கு முக்கியமானவர்களில் இவரும் ஒருவர் என சரசுவதி கந்தசாமி புகழ்ந்தார்.

நாங்கள் மூவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள். மதியழகன் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியை பின்புலமாகக் கொண்டவர்.
குலசேகரன் ஜசெக கட்சியை சேர்ந்தவர். அதேப்போல, தான், மக்கள் நீதி கட்சியை சேர்ந்தவர்.

நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தபோதும், எங்களின் இலக்கு ஒன்றுதான். இந்திய சமுதாயத்தின், குறிப்பாக தமிழர்-களின் முன்னேற்றம்தான் அந்த இலக்கு; தமிழுக்காகவும் தமிழருக்காவும் நாங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருகிறோம் என பெருமிதம்மிக பேசினார் சரசுவதி கந்தசாமி.

பல்வேறு அரசியல், சமூக நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதுடன் நிறைமாந்தர் பலரைப்பற்றிய குறிப்புகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ள இந்த நூல், அனைத்து நூலகங்களிலும் இடம்பெற வேண்டும் என்று க.சரசுவதி மேலும் குறிப்பிட்டார்.

வழக்கறிஞர் ஈப்போ மதியழகன், இன உணர்வும் தமிழிலக்கிய தாகமும் கொண்டவர். மக்கள் ஓசை நாளேட்டின் ஞாயிறு வார மலரில் ‘எண்ணங்கள் வண்ணங்கள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிவந்த கட்டுரைகள் அதேப் பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டு, ஈப்போ நகரில் இரு தினங்களுக்குமுன் வெளியீடு செய்யப்பட்டது.

திருக்குறள் ஆசிரியர் கம்பார் ‘கனிமொழி’ குப்புசாமி உள்ளிட்ட பெரியோர் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles