
கிள்ளான், அக். 21- சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் கிடைக்காத செந்தோசா தொகுதி குடியிருப்பாளர்களுக்கு தொகுதி சேவை மையத்தின் வாயிலாக மாற்று உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்த இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த சுமார் 1,200 பேரில் ஏறக்குறைய பாதி பேர் அவற்றைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை இழந்த நிலையில் அவர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை தாங்கள் முன்னெடுக்கவுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செந்தோசா தொகுதிக்கு 600 பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதனைப் பெறுவதற்கு 1,200 விண்ணப்பங்கள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றன என்று அவர் சொன்னார்.
விண்ணப்பங்கள் நன்கு பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை முறையாகப் பூர்த்தி செய்த 600 பேருக்கு தலா 200 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன என்று தாமான் செந்தோசாவிலுள்ள என்.எஸ்.கே. பேராங்காடியில் நடைபெற்ற பற்றுச் சீட்டுகளை வழங்கும் நிகழ்வின் போது அவர் குறிப்பிட்டார்.
வசதி குறைந்தவர்களுக்கு இலவச பற்றுச் சீட்டுகள் மற்றும் உணவுக் கூடைகள் வழங்குவது தவிர்த்து அவர்களை ஏழ்மையிலிருந்து முற்றாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குணராஜ் உறுதியளித்தார்
